Thursday, May 26, 2011

பெரியவரின் மனக்கவலை

"லொக்கு,லொக்கு " இருமல் சப்தம்

"நான் இங்கேயே இருக்கேன்டா.என்னை எங்கேயும் தயவு செய்து விட்டுடாதே"

" முடியாது அப்பா.கொஞ்ச நாளைக்கு அங்கே இருங்க. அப்புறம் அழைச்சுண்டு வந்துடறேன் "

"கொஞ்ச நாள் தான்னால் எதுக்கு அனுப்பரே?எனக்கு பயமா இருக்குடா நீ அப்புறம் அங்கேயே விட்டுடுவாயோன்னு" அப்பாவின் புலம்பல்

"கொஞ்சம் புரிஞ்சுக்கோ.பசங்களுக்கு பரிக்ஷை. உனக்கு மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை.நீ எப்போ பார்த்தாலும் இருமிக்கொண்டு இருக்கே.அதுகளாலே படிக்க முடியலை."

நான் இனிமேல் இரும மாட்டேன்.லொக்கு.லொக்கு(இருமுகிறார்)....அப்படி வந்தால் வாயை துண்டால மூடிக்கறேன். என்னை அனுப்பிச்சுடாதே."

"அப்பா, உன்னோட தாளலை,சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறே. இருமல் மாத்திரம் இல்லை. வனஜாவால உன்னை கவனித்து கொள்ள முடியலை. அவளுக்கே முடியலை அவ அம்மா ஒத்தாசைக்கு வராங்க.இடம் பத்தாது. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. உடம்பு சரியாகட்டும் .நானே வந்து உன்னை திருப்பி அழைச்சுக்கறேன்”

“நான் வாசல் திண்ணையிலே இருக்கேன் . குளிக்க சாப்பிட மாத்திரம் உள்ளே வரேன் பரவாயில்லையா?”

“அப்பா வீணா புலம்பாதே. அங்க உன்னை நன்னா கவனிச்சுப்பா.எங்கயோ காட்டுல தள்ளர மாதிரி பேசாதே.கொஞ்சம் அனுசரிச்சு போ”..

“அங்க சாப்பிடவே குமட்டும். வனஜாதுதான் பிடிக்கும்”

காதுல போட்டுக்காமல் சொன்னான் "நாளைக்கு காலைல 7 மணிக்கு கிளம்பணும்.தகராறு பண்ணாதே.கவலை படாதே.உன்னை விட்டுடமாட்டேன்”

பெரியவரால இரவு முழுதும் தூங்க முடியவில்லை.ஒரே மனக்கவலை.

காலையில் வனஜாவும் அவருடைய மகனும் அவரை உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

பெரியவர் "இவ்வளவு பெரிசா இருக்கே.முதியோர் இல்லம் மாதிரி தெரியலையே" என்றார்.

"அப்பா, உங்கள i யார் முதியோர் இல்லத்தில் விடப்போவதாக சொன்னார்கள்.நீங்களே கற்பனை பண்ணிக்கொண்டால் நான் என்ன பண்ணமுடியும். இது பெரிய ஆஸ்பத்திரி.உங்களுக்கு தனி ரூம் போட்டு இருக்கேன்.ரொம்ப நாட்களாக இருமல்.டாக்டர்கள் உங்களை எல்லா பரிக்ஷையும் பண்ணி மருந்து கொடுப்பார்கள். குணமான பிறகு வீட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன். நானோ வனஜாவோ தினம் வருவோம்” என்றான் மகன்

நீ தங்கம்டா.உங்களை தப்பா எடை போட்டுவிட்டேன்