Friday, October 7, 2011

கை ராசி

சக்ரபாணி அய்யங்காருக்கு 64வயது இருக்கும்.நெஞ்சு வலி வந்த பிறகு வீட்டோடு தான் இருக்கிறார்.வாசல் ஹாலில் உள்ள கட்டில், சாய்வு நாற்காலி தான் இவருக்கு வாசம்.அளந்து பேசுவார் கோபமே வந்து பார்த்தது இல்லை.சற்று ஒடிசலா,உயரமா, வெளுப்பா கம்பீரமாக இருப்பார்.நெற்றியில் சிகப்பில் ஒரு கீற்று .ரேடியோ, பேப்பர் இது இரண்டு தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பென்ஷன் வந்து கொண்டிருகிறது. பணக்கஷ்டமில்லை.

அவர் மனைவி செண்பகம் ரொம்ப சாது.சற்று குள்ளம்,தாட்டியாக இருப்பாள் ஆனால் களையான முகம்.இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள்..ரொம்ப அன்னியோன்யம்.

இந்த கதையில் ராஜி ரொம்ப முக்யமான பாத்திரம்.காலையில் கீரை விற்பாள். மாலையில் பழங்கள் கொண்டு வருவாள். செண்பகம் தினம் கீரையும்,சாத்துக்குடி பழமும் வாங்குவாள். கிட்டத்தட்ட மூன்று வருஷமாக விடாமல் ராஜி கொடுத்துக்கொண்டு இருக்கிறாள்..அவளுக்கு 40 வயது இருக்கும். நல்ல உடல் வாகு.வசீகரமான சிரிப்புடன் மிகவும் அழகாக இருப்பாள்.அவள் புருஷன் போறாது .எப்பொழுதும் குடி.வேலைக்கும் ஒழுங்கா போவது இல்லை.மூன்று குழந்தைகள் வேறு.ராஜி சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடுகிறது. மாமியிடம் அடிக்கடி தன அங்கலாய்ப்பை எல்லாம் சொல்லுவாள்.மாமியும் கவனமாக காது கொடுப்பாள்.ரொம்ப கஷ்ட படும்போழுது நூறோ இருநூறோ கொடுப்பாள்.அய்யங்காருக்கு மனைவி ராஜிக்கு உதவியாக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

சரி,கதையின் முக்யமான சமாசாரத்துக்கு வருவோம்.

காலையில் 6மணிகெல்லாம் வாசலில் ராஜியின் குரல் கேட்கும்."முளை கீரை,சிறு கீரை,பொன்னாங்கனி கீரை,மெந்திய கீரை....".பச்சை பசேலென்று பார்க்கவே வாங்கும் போல தோன்றும்.மாமி தான் கூடையை இறக்க உதவி பண்ணுவாள்.

ஆனால் ராஜி "கீரையை தொடாதே.அய்யாவை கூப்பிடு.அவர் தொடட்டும்'என்பாள்.மாமி மூஞ்சி வாடிவிடும்.

சில நாட்கள் மாமி சொல்லுவாள்"அவர் குளித்துக்கொண்டு இருக்கார்.நான் எடுத்தா என்ன?உன்னோட பெரிய கீரை தேஞ்சா போய்விடும். என்னமோ அய்யா அய்யான்னு சொல்லிண்டு இருக்கே" என்பாள் மாமி சலிப்புடன்.

“உன்னோட கை பட்டா விற்று போகாது. அய்யா கை ராசியான கை.அவர் தொட்டால் ஒரு மணி நேரத்தில் எல்லாம் விற்றுடுவேன்.தப்பா எடுத்துக்காதே.நீ தொடாதே.அந்த மவராசன் வரும் வரை காத்து கொண்டு இருக்கேன்" என்பாள்.

ஒருமையில்தான் பேசுவாள்.மாமி முகத்தை சுளிச்சுகொண்டு அய்யங்காரிடம் சற்று ஏகத்தாளமாக "உங்க ராஜி வந்து இருக்காள்.நீங்க தொட்டாதான் விற்று போகுமாம்.உங்க கை ராசியாம்.என்ன ராசியோ தெரியலை. நானும் உங்களோடு நாற்பது வருஷமாக குடுத்தனம் பண்ணுகிறேன்" என்பாள்.

மாமியின் பேச்சில் உள்ள நக்கல் புரிந்தாலும் சற்று பெருமிதத்துடன் சிரித்தபடி வாசலுக்கு வருவார்."ராஜி,பிறர் மனம் நோகும்படியாக பேசக்கூடாது"என்று சொல்லி இரண்டு கீரை கட்டை எடுத்துகொள்வார்.

"தப்பா பேசலைஅய்யா.நீ தொட்டா நேரத்தோட வீட்டுக்கு போவேன் அய்யா.அதுதான். அம்மாவபற்றி எனக்கு தெரியாதா என்ன?" என்று சமாதான படுத்துவாள்.

இரண்டு நாள் கீரைக்காரி வராவிட்டால் மாமி "என்ன,உங்கள் ராஜி இரண்டு நாளாக காணலை"என்பாள்.மாமியின் மனதில் என்னவோ ஏதோ என்று ஒரு கவலை.அவரும்"நானும்தான் உன்னிடம் கேட்கனும்னு இருந்தேன் "என்பார்.அந்த ராஜி அந்த அளவு முதியவர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள்.

ஒரு நாள் மாலை 7மணி அளவில் "செண்பகம்,மாரை வலிக்கறது.மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது..டாக்டரை வரச்சொல்லேன் உடனே"என்றார்.மாமிக்கு கை கால் ஓடவில்லை. அப்படியே வாசலுக்கு ஓடி எதிர்த்த வீட்டு பையனை'ரங்கா,ரங்கா உடனே டாக்டரை கூப்பிடு.மாமாக்கு மூச்சு விடமுடியலை."என்று கத்தினாள்.உடனேயே டாக்டர்,மற்ற அக்கம் பக்கத்து மனிதர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் ஒன்னும் பண்ண முடியவில்லை.உடனேயே உயிர் பிரிந்து விட்டது.
மறு நாள் ராஜி அவர் உடலை பார்த்து தன்னுடைய சொந்த அப்பா இறந்த மாதிரி தாங்க முடியாத துக்கத்துடன் அழுதாள்.

இரண்டு மாதங்கள் ராஜி மாமியின் கண்ணுலயே படவில்லை.மாமிக்கு அவளை பற்றிய கவலையும் சேர்ந்து வாட்டியது.ஒரு நாள் ராஜியின் தங்கையை வாசலில் பார்த்தாள். கூப்பிட்டு விசாரித்ததில் அவள் தங்கை சொன்னாள்."அய்யா இறந்த பிறகு அவள் கீரை விற்பதை நிறுத்தி விட்டாள்.கேட்டால் அந்த மவராசனுடன் அந்த வியாபாரம் நிந்ததுதானாம்.பிரமை பிடிச்ச மாதிரி இருந்த அவள் இப்பொழுது தான் அவள் குடிசை வாசலில் இட்டிலி சுட்டு ஏதோ இருக்கிறாள்"என்றாள்

:என்னே இத்தனை பாசம் அவரிடம் என்று மாமி திக்கித்து போனாள்.சுதாரித்துக்கொண்டு . "அவளை வந்து என்னை பார்க்க சொல்லு" என்றாள் மாமி.

ஒரு வாரம் கழித்து வந்தாள்.முகம் வாடி இருந்தது.மாமியை பார்த்தவுடன் அழுதாள்.பிறகு மாமி சொன்னாள்."எப்பொழுதும் போல ஒரு நடை வந்து விட்டு போ.உன்னோட இட்டிலி வியாபாரம் முடிஞ்ச பிறகு வந்தால் போதும்.மாதம் 2000 ரூபாய் தரேன்.அவர் உன்னோட பேரில் 50000 ரூபாய் எழுதி வெச்சு இருக்கார்..உன்னை தன்னோட பெண் மாதிரி நடத்து நு சொல்லிவிட்டு போயிருக்கார்"என்றாள் மாமி.

ராஜி குலுங்க குலுங்க அழுதுக்கொண்டே இருந்தாள்.


6 comments:

  1. Sila thadavai sila perai kaarana kaariyamillaamal pidithtup poividugirathu! Anda ragam inda paasam!

    Nalla kathai, Paartha Sir!

    ReplyDelete
  2. Aathmaarthamaana natpu enbadhu idhuthaano?

    ReplyDelete
  3. ஒரு மிகசிறந்த கதை இது கதை அல்ல இப்படியும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் மிகசிறந்த பதிவு உளப்பூர்வமான பாராட்டுகளும் நன்றிகளும் .ராஜியின் பத்திரம் உள்ளத்தில் நிலைநின்றது .

    ReplyDelete
  4. உருக்கமான கதை. சில பேருடன் மனம் ஒன்றிப் போவது சகஜமே.

    ReplyDelete
  5. Very touching story! What a magnanimous character this Iyengar! It makes us look around us. There are so many Rajees in our lives whom we choose to ignore!! Beautifully portrayed!

    ReplyDelete