Thursday, October 11, 2012

வத்சலாவின் பாக்கியம்

திருவல்லிகேணியில் தொளசிங்க பெருமாள் கோவில் தெருவில் ஒண்டு குடித்தனம்.இருட்டா சிமென்ட்   பெயர்ந்த தரையோடு சின்ன இடம். கோவிலுக்கு சொந்தமோ என்னவோ வாடகை அதிகமில்லை.காலி பண்ண சொல்லும் அபாயமும் இல்லை.வத்சலாவும் வரதனும் அன்யோன்யமான தம்பதி  சண்டை சச்சரவு கிடையாது.அவன் கொண்டு வரும் குறைந்த பணத்தில் குடும்பத்தை நடத்தி கொண்டிருந்தாள்.வரதன் கல்யாணம் கார்த்திக்கு சமையல் பண்ண போவான்.சில மாதங்கள் தவிர வருஷம் பூராகவும் வேலை இருக்கும்.நடுவில் இரண்டு மூன்று நாட்களுக்கு வெளியூருக்கு போகும்படியாக இருக்கும்.பத்து வயதில் ஒருபெண்ணும் எட்டு வயதில் ஒரு பையனும் உண்டு.படுத்த படுக்கையாக வத்சலாவின் அம்மாவும் அவளிடம் தான் இருந்தாள்.அண்ணன் அம்மாவை பார்த்துக்க முடியாது என்று இவளிடம் தள்ளி விட்டான்.வரதனும் நம்மோடு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.
கஷ்ட ஜீவனம்தான்.வருமானம் போறாது தான்..பள்ளிகூட சம்பளம் அளவுக்கு மீறி வாங்குகிறார்கள்.  விலை வாசி எக்கச்சக்கமாக ஏறி கிடக்கிறது. .  கிணற்று தண்ணீர் கொஞ்சம் உப்பு. குழாய் வீட்டுக்கு வெளியில்தான். குழாய் அடியில்  எப்பொழுதும் கூட்டம்தான். இவ்வளவு கஷ்டத்திலும் வத்சலா சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவாள்.பார்க்கவும் களையாக இருப்பாள்.தன் கஷ்டத்தை வெளியில் சொல்லமாட்டாள். பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு எப்படியாவது ஒரு நடை போவாள்.அங்கு நரசிம்மரிடம்   தன் குறையை சொல்லி கொண்ட பிறகு அவள் மனம் லேசாகிவிடும்.
ஒரு ஞாயிறு.வரதன் திருநாகேஸ்வரம் போயிருந்தான். ஒப்பிலியப்பன் கோவிலில் கல்யாணம்.வத்சலா பத்து மணிக்கெல்லாம் தளிகையை முடித்து விட்டாள்.மெந்திய குழம்பும் கீரை மசியலும் தான்.குழந்தைகள் பக்கத்தில் எங்கோ விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்பொழுது  சுமார் 70  வயதுக்கு மேல் உள்ள ஒரு முதியவர் வந்தார்.ஒடிசலாக கண்ணில் பசி மயக்கத்தோடு காணப்பட்டார்."அம்மா,இங்கு பெருமாளை தரிசிக்க வந்தேன்.என்னோட பெயர் நரசிம்மன்..இங்கிருந்து சிங்க பெருமாள் கோவில்  பக்கம் போகணும்.ஒரே பசியாக உள்ளது."
"உள்ள வாங்க மாமா.பெரிசா வஞ்சனம் இல்லை.இருப்பதை போடுகிறேன்.கிணத்தடியில் கைகால்களை    அலம்பி கொண்டு வாருங்கள்"என்றாள்
வாழை இலை இல்லை..மந்தார  இலையில் தாராளமாக அன்னமிட்டாள்.அவரும் திருப்தியோடு சாப்பிட்டு முடித்தார்.வாச திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அவள் குடும்ப நலனை விசாரித்தார்.அவளுடைய ஏழ்மை நன்றாக புரிந்தது.
"வத்சலா, என் கைவசம் காசு கிடையாது.ஆசீர்வாதம் தான் பண்ணமுடியும்.நீ தீர்க்க சுமங்கலியாக   சுபிக்ஷமாக இருப்பாய்.'என கூறி மடியிலிருந்து ஒரு சாளக்ராமத்தை   கொடுத்தார்."இதை பூஜை பண்ணுமிடத்தில் வைத்து பாலோ,சக்கரையோ எது முடியுமோ அதை தினம்  நைவேத்தியம் பண்ணு.உனக்கு வெகு சீக்கிரம் செல்வம் வந்து ஏழ்மை அகலும்..எப்பொழுதும் போல் பக்தியையும் மனிதாபிமானத்தையும் விடாமல் இரு." எனக்கூறி  சென்று விட்டார்.
அன்று மாலையில் அவள் நரசிம்மர் சந்நிதியில் வேண்டி கொண்டிருக்கும் போது அர்ச்சகர் அவளிடம் வந்து "வத்சலா, உனக்கு ஏதாவது சாளக்ராமம் கிடைத்ததா"என வினவினார்.அவளுக்கு தூக்கி வாரிபோட்டது.
"மாமா உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?யாரும் உங்களிடம் சொன்னார்களா?"
"ஆமாம்,நீ நம்ப மாட்டாய்..சொப்பனத்தில் அதிகாலையில் நரசிம்மரே வந்து சொன்னார்.எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு.இதுதான் முதற் தடவை என்னுடைய பகவான் எனக்கு காட்சி   அளித்து பேசினது..உடனேயே முழிப்பு வந்து என்னை கிள்ளி பார்த்து கொண்டேன்.அதுதான் உன்னை கேட்டேன்.யார் கொடுத்தார்/எப்படி கொடுத்தார்?விவரமாக சொல்லு.ஒரே பரபரப்பாக இருக்கு எனக்கு"என்றார்..
அவள் விவரமாக சொன்ன பிறகு"என்னே,உன் பாக்கியம்.உன் வீட்டில் உன்கையால் பரிமாறின உணவை உட்கொண்டு உன்னை ஆசீர்வதித்து இருக்கிறார்.உன்னுடைய பக்திதான் உனக்கு உதவி உள்ளது.நான் வந்து சாளக்ராமத்தை வந்து சேவிக்கலாமா?"
மறு நாள் காலையில் வரதன் ஒரே குதூகலத்தோடு வந்தான்.
"வத்சலா,நல்ல சமாசாரம் சொல்ல போகிறேன்.இனி நம் வாழ்க்கை நல்லபடியாக அமையும்"என்றான்
"என்ன ஏதாவது லாட்டரில   பரிசு நிறைய கிடைச்சுதா?"   
"அதெல்லாம் இல்லை.நான் எந்த பெரியவரிடம் வேலை பண்ணிக்கொண்டு இருக்கேனோ     அவர்   எல்லா பொறுப்பையும் என்னிடம் கொடுத்து விட்டு தன மகனோடு இருக்க போவதாக சொல்லிவிட்டார்.வயது கூடியதால் பையன் பண்ணினது போறும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டானாம்  .தன்னோட மொபைல் போனையும் கொடுத்து விட்டார்." என்றான்
"மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.எல்லாம் நரசிம்மரின் அருள்  "என்றாள்.
"ஆனால் பெரியவர் கூடவே ஒரு அறிவுரையும் சொல்லி இருக்கிறார்.செய்யும் தொழிலில் பக்தியோடும்  ,நியாயமும் நேர்மையும் இருக்கனுமாம்.பேராசை படக்கூடாது.பார பக்ஷமின்றி எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் நல்லபடியாக செய்து கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.சத்தியமும் வாங்கிகொண்டார்" என வரதன் பெருமிதத்துடன் கூறினான்.
நான்கு வருடத்திலேயே தொழிலில்   நன்றாக முன்னேறி விட்டான். நிறைய ஆட்களை சேர்த்துக்கொண்டு நன்றாக சம்பாதிக்கலானான்.வீட்டில் செழுமை.
ஆனால் வத்சலா திருவல்லிகேணியை விட்டு வேறு எங்கும் மாற மாட்டேன் என்று கூறிவிட்டாள்.  இன்றும் நரசிம்மர் சந்நிதியில் காலையிலும் மாலையிலும் அவளை காணலாம்.அதே சாந்தமும்,புன்சிரிப்பும் அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை.


.

.

. 

.

Friday, October 5, 2012

தைய்வம் அன்றே கொடுக்கும்

ரங்கனுக்கு அப்படி ஒன்றும் பெரிய வேலை இல்லை.கஷ்ட ஜீவனம்தான்.கும்பகோணத்தில் கர்ணகொல்லை தெருவில் வாசம்.ஒண்டு குடித்தனம் தான்.மனைவி மக்களுடன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
"இந்த விடுமுறையிலாவது எங்களை சென்னைக்கு அழைத்து கொண்டு போங்க, அப்பா.நாங்க பீச்செல்லாம் பார்த்ததே இல்லை."என்றான் பெரிய மகன்
"அப்பா,எனக்கு மகாபலிபுரம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கு.பக்கத்துலதான் இருக்காம்.    .காலைல போய்விட்டு மாலையில் பஸ்ஸில் திரும்பிவிடலாமாம்." சின்னவன் சொன்னான்     
குழந்தைகள் ரொம்பவும் ஆசைபடறதே. ஒரு நடை நாலு நாள் போனால் என்னவாம். என்னோட  தங்கை  வீட்டுல  தங்கலாம்.அவளும் கூப்பிட்டு கொண்டே இருக்கா " என்றாள் மனைவி ருக்மிணி
"என்னடி முட்டாள்த்தனமா பேசறே. மாச கடைசில பணமில்லாம  இழுபறியாக ஓடிண்டு இருக்கு. இப்போ எல்லாம் கனவுலகூட நினைச்சு பார்க்க முடியாது"
பையன்கள் முகத்தை தொங்கப்போட்டு கொண்டு ஓடிவிட்டதுகள்.பாவமாக இருந்தது ரங்கனுக்கு."ருக்கு,எனக்கு தெரியும் உன்னை ஒரு இடத்துக்கும் அழைச்சிண்டு போறதில்லை.பெருமாள் கண்ணை திறக்கட்டும் பார்க்கலாம்" என்றான்.
நவராத்ரிக்கு   சில நாட்கள் முன்னர்  ரங்கனுடைய பெரியப்பா மகன் அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் எழுதிருந்தான்.
"ரங்கா,
வருடா வருடம் சக்கிரபாணி கோவில் தாயாருக்கும் பெருமாளுக்கும் நவராத்திரியின் பொழுது புடவை வேஷ்டி சாத்துவது வழக்கம்.இந்த தடவை என்னால் வர இயலவில்லை.அம்மாவும் என் கூட இருக்கா.இத்துடன் ரூபாய் 15000 இணையாக டாலர் அனுப்பியுள்ளேன்.நல்ல காஞ்சீவரம் பட்டு புடவை,நல்ல ஜரிகை வேஷ்டி   ஒரு ஜதைபுஷ்பம் பழம் இத்யாதிகளுடன் நவராத்திரி சமயம் கொடுத்து அர்ச்சனையும் பண்ணிவிடு.மீந்த பணத்தை அர்ச்சகர்ளுக்கு போக கோவில் உண்டியில் சேர்த்து விடு.இதனால் உனக்கு ச்ரமம்  இராது என நம்புகிறேன்.
மன்னி பசங்களை விசாரித்ததாக சொல்லவும்.
அரவாமுதன்"
கையில் பணம் கிடைத்ததும் மனம் ஒரு குரங்காகியது.ஒரு விபரீத எண்ணம் கூடவே தோன்றியது.இன்னும் ஒரு வாரத்தில் நவராத்திரி ஆரம்பம்.ருக்மிணியிடம் எவ்வளவு பணம் வந்தது என்று சொல்லவில்லை. அவளை அழைத்து கொண்டு சாதாரண அபூர்வா சில்க் மாதிரி அரக்கு கலரில் பொய் ஜரிகையுடன் கூடிய புடவை,அதே மாதிரி வேஷ்டி   வாங்கினான்.எல்லாம் 3000  ரூபாய்க்கு குறைவாக பழம் புஷ்பம் சேர்த்து முடித்து விட்டான்
"இதென்ன அல்பத்தனமாக   இருக்கே மச்சினர் பண்ணுவது?.கைநிறைய சம்பாத்தியம் வேறே பெருமாளுக்கு வாங்கறதில   என்ன சுஷ்கம்?.   இந்தமாதிரி பண்ணுவதை விட பேசாமல் இருக்கலாம்.   எனக்கு இதை கொண்டு போய் கோவிலில் கொடுக்க வெட்கமாக இருக்கு.நீங்களே   கொடுத்துவிடுங்கள்" என்றாள்
"சும்மா இருடி.நீயா பண்ணுகிறாய்.வெறுமனே வாயை விடாதே" என்றான்.இருந்தாலும் மனதில் ஒரு நெருடல்.இன்னும் ஒரு 1௦௦௦ ரூபாய்க்கு பெருமாளுக்கு ஒரு சக்கரை பொங்கல் தளிகையும் நடத்தினான்.
தனியாக இருக்கையில் கை வசம் உள்ள  பணத்தை எண்ணினான்.11300 ரூபாய் இருந்தது.மனம் லேசாக வாயில் ஒரு ராக ஆலாபனை.
அன்று மாலை குடும்பத்தினருடன் டி வி  பார்க்கும் பொழுது 'டே பசங்களா,இந்த சனி காலையில் பஸ்ஸில் சென்னை பயணம்.மூன்று நாளைக்கு.பீச்சு,மால்கள்,,பாண்டி பஜார்,மகாபலிபுரம் திருக்கழுகுன்றம் எல்லாம் சுற்றி  பார்க்கலாம்.சந்தோசம்   தானே" என்றான் 
மகன்கள் இருவரும் அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு தங்கள் குதூகலத்தை தெரியப்படுத்தினர்.
"திடீர்னு இப்போ எதுக்கு பயணம்?போன மாசம் முடியவே முடியாது என்று சொன்னீங்க" என்றாள் ருக்மிணி.
வாஸ்தவம். ஆனால் எதிர்பாராமல் இப்போ ஆபீசுல கொஞ்சம் சம்பள பாக்கி கிடைத்தது"என்று ஒரு சின்ன பொய்யை சொன்னான்.."எல்லாம் தயார் பண்ணு..தங்கையிடம் சொல்லிவிடு
வெள்ளி கிழமை துணி மணியை எடுத்து வைத்ததில் ரங்கனுக்கு ஆபீசுக்கு   சற்று நேரமாகிவிட்டது.அவசரமாய் குளிக்க போனான் குளியலறைக்கு.சோப்பு தண்ணியோ என்னவோ அப்படியே வழுக்கி விழுந்தான்.நல்ல வேளை தலையில் அடிபட வில்லை.கையிலும் காலிலும் பலமாக அடி.எழுந்து கொள்ள முடியவில்லை. தாப்பாளும் போட்டு இருந்தது.ருக்மிணி,ருக்மிணி நு கத்தினான்.தலை சுற்றலும் இருந்தது.அவள் கதவை   உதைத்து திறந்தாள்.
உடனேயே பக்கத்து வீட்டு மனிதர்களின் உதவியோடு ஆஸ்பத்திரிக்கு ரங்கனை ஆம்புலன்சில் அழைத்து சென்றாள். எக்ஸ்ரே   எடுத்ததில் கையிலும் காலிலும் பலத்த முறிவு தெரிந்தது.கோணலாக இருந்ததால் சிறிய ஆபரேஷன் தேவையாக இருந்தது.கை காலிலும் பெரிய கட்டு போட்டு ஒரு நாள் வைத்து கொண்டு அடுத்த நாள் கையில் ஊன்று கோலோடு அனுப்பினார்கள்.ருக்மிணி ரங்கன் பர்சிலேந்து தான்  பணத்தை கட்டினாள். 
வீட்டிற்கு வந்ததும் முதல் கேள்வியாக "எவ்வளவு ஆச்சு, ருக்மிணி?" என கேட்டான்.அவள் பதில் கூறாமல் ஆஸ்பத்திரி பில்லை அவனிடம் கொடுத்தாள்.அவன் அவசரமாக பிரித்து  பார்த்தான்.சரியாக 11300 ரூபாய்.அப்பொழுது மண்டையில் இடி இறங்கினாற்போல் உறைத்தது.தைய்வம் தண்டனையை நின்று கொடுக்க வில்லை அன்றே கொடுத்து விட்டது என்று.
 ,      

.
 ,