Thursday, July 28, 2016

நமக்குள்ளே உள்ள உரைகல்

நடந்து போகையில் அதிர்ஷ்ட வசமாக உங்கள் கண்ணில் ஒரு தங்க வளையல் தென்பட்டால் என்ன செய்வீர்கள்?வீட்டிற்கு  விரைந்து சென்று  உரை கல்லில்  சுத்தமான தங்கமாவென்று தெரிந்து கொள்ள தேய்த்து பார்ப்பீர்கள் அல்லவா? உரைகல் நமக்கு நல்லதை உடனே காண்பித்து கொடுத்துவிடும்.
நமது நாக்கும் ஒரு உரைகல்தான்.ஒரு குழந்தையின் வாயில்   ஒரு இனிப்பை போட்டால்  ,எப்படி சப்பி சப்பி சந்தோஷத்துடன்  சுவைத்து உண்ணும். அதுவே  ஒரு கடுக்காயை வைத்தால் முகத்தை பலவாறு கோணிக்கொண்டு துப்பிவிடும்.நாவிற்கு இனியதைதான் அந்த குழந்தை விரும்பி நேரம்   தெரியாமல் சாப்பிடும்.
பெரியாழ்வாரும் அதேபோல் நாவிற்கு இனியானின் பேரையும், பெருமைகளையும் செயல்களையும் அல்லும் பகலும் வேறொரு எண்ணமும் இல்லாமல் கூறிக்கொண்டு அந்த இனிப்பை அனுபவிப்பாராம்.இனியதை உணர்த்தும் உரைகல்லாம் அவர்தம் நாக்கு.
அவர் வாயிலாகவே பார்க்கலாம்.
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே 
நிறமெழ உரைத்தாற்போல்
உன்னை கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக்  கொண்டேன்

உன்னைக் கொண்டு   என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா! இருடீகேசா!
என் உயிர்க் காவலனே  

தன் நாவு என்கிற உரை கல்லில் ஒருமித்த மனதோடு வேறொரு   சிந்தையுமில்லாமல்  இறைவனை பற்றிய எண்ணத்தையே உரசியும்,,பாடியும்  தாங்கிக்கொண்டும் அந்த இறைவனையே தன இதயத்தில் ஆழ்வார்   வைத்துக் கொண்டாராம்
இப்படி தனது நெஞ்சில் இறைவனை உடையவராக கொண்ட ஆழ்வார் நாளாவட்டத்தில் இந்த நெருக்கத்தையே ஒரு உபாயமாகக் கொண்டு இறைவனின் இருதயத்திலேயே உறைபவராக மாறினாராம். எப்பேர்ப்பட்ட நெருக்கம்    என்று சற்று பாருங்களேன்.  தந்தையாம், இருடீகேசனாம், தன்  உயிரை காத்து ரக்ஷிப்பவனாம். இதன்  விளைவு தான் என்ன? இந்த பரிபூரண சரணாகதி தான் ஜீவாத்மாவையும்  பரமாத்மாவையும்  ஒன்றாக இணைக்கும்.

நம்மிடமும் தான்   இருக்கிறதே அந்த உரைகல்  நாவிற்கு இனியானை  விடாமல் தேய்த்து பார்ப்பதற்கு.