Wednesday, April 12, 2017

தாத்தாவின் ஆசை

சின்ன பார்க். பச்சை பசேல்னு புல் தரையும்,செடிகளும் பூக்களும் பார்க்க அழகாக இருக்கும்.  நடுவில் ஒரு குட்டை.அதை சுற்றி ஒரு நடைபாதை.
எண்பது வயது நெருங்கும்  ராமண்ணா தன எட்டு வயது பேரனுடன் மாலைகளில் வெகு அருகில் இருக்கும் இந்த இடத்திற்கு வருவது வழக்கம்.நிறைய கும்பல் இருக்காது. பேரன் சங்கர் சின்ன சைக்கிள் ஒட்டிண்டு வருவான்.ரொம்ப முன்னாடி தாத்தாவை தனியா விட்டுவிட்டு போகமாட்டான்.யாருக்கு யார் துணைன்னு ஒரு சந்தேகமே வரும்.
"சங்கர்,என்னை எப்பொழுதும்   ஞாபகம் வைத்து கொள்வாயா ?" என ராமண்ணா மூன்றாவது தடவையாக கேட்டவுடன் ,சங்கர் சைக்கிளை   நிறுத்தி காலை தரையில் ஊன்றி “தாத்தா,எப்பொழுது வெளியில் வந்தாலும்  ஏன்  கேட்ட  கேள்வியையே  திருப்பி  திருப்பி  கேக்கறே?உன்னை மறக்கவே மாட்டேன்னு சொல்லி இருக்கேனே" என்று சலிப்புடன் சொன்னான்.
"கோபித்துக்கொள்ளாதே கண்ணா,சும்மாதான் கேட்டேன்.நான் உனக்கு தினம் நிறைய கதைகள் சொல்றேன் ,உம்மாச்சி கதை,தெனாலி ராமன் கதை னு நிறைய சொல்றேனே"  என்பதற்குள் சங்கர் குறுக்கிட்டு " நான் ஒண்ணும் குழந்தை இல்லை. உம்மாச்சிக்கு  பதிலா காட்(god) னு சொல்லு.
" சரி இனி கடவுள் என்றே சொல்றேன் .அது தவிர நீ நன்றாக   படித்து  பெரிய பட்டமெல்லாம் வாங்கணும்னு ஆசை.  பெரிய வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் வாங்கணும். முக்கியமாக ஒரு விஷயம்  சொல்லி இருக்கேன். அதை மறக்க கூடாது," என்றார் ராமண்ணா.
"நான் ஒன்னையும் மறக்கமாட்டேன்.நீ ரகசியமா சொன்ன விஷயத்தை சரியான வேளையில் அம்மாவிடம் கட்டாயமா சொல்லுவேன்.தாத்தா இனிமேல்   இன்னொரு தடவை இப்படி கேட்டால் நான் உன்னோடு பார்க் வரமாட்டேன்" என கோபத்துடன் கூறினான்.
கொஞ்சம் தூரம் நடந்தவுடன் சங்கர்   தாத்தா அருகாமையில் வந்து "தாத்தா ,உனக்கு செத்து போய்டுவேன்னு பயமா?அப்புறம் எல்லாம் ஒரே இருட்டா இருக்குமா.இப்பவே உனக்கு இருட்டுல கண் சரியாக தெரியலையே. டார்ச் எல்லாம் கையில   எடுத்துண்டு போகமுடியாதே?எப்படி சமாளிப்பே.? தாத்தா,நீ செத்தே போகக்கூடாது.என் ப்ரண்டு முருகன் தெரியுமா? அவன் தாத்தா 90 வயதாம்.இன்னும் முறுக்கை பல்லால கடிச்சு சாப்பிடறாராம் .கண்ணாடி இல்லாம தினதந்தி படிப்பாராம்.ஆனால் முருகன் கொஞ்சம் பொய் சொல்லுவான். பயப்படாதே.அவருக்கு  90  என்றால் உனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு." என்றான் குழந்தைத்தனமாக.
ராமண்ணா அவனின் வெகுளித்தனைத்தை கண்டு குலுங்கி குலுங்கி சிரித்தவாறே ," நீ ஐ.ஐ.டீ (IIT) முடிக்கற வரைக்கும் இருப்பேன்.பயப்படாதே "என்றார்.
"இல்லை நீ முன்னாடியே போய்டுவே"
"நான் எப்போ போவேன்னு நீ  நினைக்கறே" என கேட்டார்.
"அடுத்த வருஷம்," என்றான், தான் முருகன் தாத்தாவை பற்றி சொன்னதை முற்றிலும் மறந்தவாறே."
"தாத்தா,எனக்கு பசிக்கறது. ஹோம் வொர்க் பண்ணனும்.வீட்டுக்கு போகலாம்.அதுக்கு முன்னாடி ஒன்னு கேப்பேன் .சரின்னு சொல்லுவியா  உன்னோட லேப்டாப் ஐ எனக்கு இப்போவே கொடுத்துடு.இல்லாட்டா அப்புறம் சரளா எடுத்து கொண்டு  விடுவாள்.
"இப்போ முடியாது.நான் அம்மா கிட்ட சொல்லிவிடுகிறேன்.. சரளாவிற்கு வேற ஏதாவது கொடுக்கிறேன். கொஞ்ச நாட்கள் பொறுத்துக்கோ.பகவான் எப்போ கூப்பிடுகிறாரோ தெரியலை," என்றார்.
"பகவானுக்கு உன்னோட மொபைல் நம்பர் தெரியுமா.நீ அவர்கிட்ட பேசுவியா? : என்றான் வெகுளியாக.
அதற்கு பதில் சொல்லாமல் வா,சீக்கிரமாக வீட்டுக்கு போகலாம்.எனக்கு சற்று முடியவில்லை "என்றார் மாரை பிடித்தபடி.மிக கஷ்டப்பட்டு வீடு வரை வந்தவர் வீட்டு வாசற்படியிலேயே  சாய்ந்து விட்டார். .
"தாத்தா, என்ன பண்ணுகிறது?ஒரேயடியாக வேர்த்து போகிறதே.அம்மாவை கூப்பிடறேன்," என்றான் சங்கர்,காலிங் பெல்லை அழுத்தியவாறே "அம்மா, அம்மா.சீக்கிரம் வா . தாத்தா என்னமோ மாதிரி  இருக்கிறார்,"என்று உரக்க கத்தினான்.
அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அவன் அப்பா,அம்மா காரில் கொண்டு வந்து எமெர்ஜென்சியில்   சேர்த்து விட்டார்கள்.
சில  நிமிஷங்கள் பிறகு ஒரு நர்ஸ்  வந்து"பெரிய மாரடைப்பு ஏற்பட்டிருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் ஒரு மணி நேரம் ஒன்னும் சொல்ல முடியாது.வெயிட் பண்ணுங்க"என  சொல்லி சென்றுவிட்டாள்.
நர்ஸ்கள் மும்முரமாக   அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
சங்கருக்கு அந்த சூழ்நிலையே அச்சத்தை கொடுத்தது."அம்மா தாத்தா செத்து போய்விடுவாரோன்னு பயமாக இருக்கு" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டான்.
"ஷ் அழக்கூடாது இங்க "என்று அவன் அம்மா வாயில் விரல்களை வைத்து செய்கை செய்தாள். அக்கா சரளா அவன் தோளில் கை போட்டுகொண்டு "அழாதே.தாத்தா சரியாகி விடுவார் "என ஆறுதல் கூறினாள்.
சற்று நேரத்திலேயே பெரிய டாக்டர் வந்து "எங்களால் முடிந்ததை செய்தோம்.பலனளிக்க வில்லை.ஏற்கனவேயே அவர் இருதயம் வீக்காக இருந்திருக்கிறது.எங்கள் வருத்தத்தை    தெரிவித்து கொள்கிறோம். வேறு  ஏதாவது  உதவி தேவையா,  சொல்லுங்கள்  " என்றார்
அப்பொழுது சங்கர் திடீரென்று அவர்கள் முன்னே வந்து,"அம்மா இன்று கூட தாத்தா என்னை ஞாபக படுத்தினார்.உன்னிடம் சொல்ல வரும்போதெல்லாம் நீ தடுத்து விடுவாயாம். அவர் கண்கள் வேற என்னவெல்லாம் இருக்கோ அதை யாருக்காவது   கொடுக்கணுமாம்..இந்த டாக்டர் கிட்டே சொல்லேன்" என்றான்
"குட் பாய் "என்று டாக்டர் அவன் முதுகை தட்டி கொடுத்து ,அவன் அம்மாவிடம் " விண்ணப்பம் கொடுங்கள்.அதற்குள் நாங்கள் ஆவன செய்கிறோம்" என்றார்.
சங்கரின் அம்மா தன்னுடைய அப்பா கண்தானத்தை பற்றி பேச வரும்போதெல்லாம் தான் தடுத்தது   ஞாபகம் வந்து மேலும் அவளை துக்கத்தில் ஆழ்த்தியது.
"அம்மா,தாத்தாவின் கடைசி ஆசையை  பண்ணி முடிச்சோம். அவருக்கு மொபைலில் கடவுள் கிட்டேந்து இன்னிக்கி கால் வந்து இருக்கும்.  அதுதான் என்னை ஞாபப்படுத்தினார்.'என்றான் சங்கர்.
"உளறாதே.வாயை மூடிண்டு சரளாவோட வா."என அதட்டினாள்.
நான்கு நாட்கள் கழித்து சங்கர் அவன் தாத்தா படத்தின் முன் நின்றுகொண்டு "தாத்தா,நீ அடிக்கடி சொல்வதை நான் மறக்கவில்லை...உன்னோட கண்கள் மற்றதெல்லாம் ஆஸ்பத்திரியில் கொடுத்தாச்சு  .நான் .உன்னோட லாப்டாப்ல     உன்னோட   படம் தான் ஸ்க்ரீன் சேவரா (screen saver) போட்டு இருக்கேன்.சரளாக்கு உன்னோட ஐபேடை (I Pad) அம்மா கொடுத்தாங்க .நான் நன்னா படிக்கறேன் உனக்கு அங்க இருட்டா இருந்தா கூட உனக்கு தெரியாது.  ஏன் தெரியுமா,உன்னோட இரண்டு கண்களையும் எடுத்தாச்சே ? நீ இல்லாம எனக்கு பிடிக்கலை..நீயும் முருகன் தாத்தா மாதிரி 90  வயசு இருந்து இருக்கணும், "  என சொல்லி லேசாக விசும்ப ஆரம்பித்தான்
பின்னாலிருந்து  அதை கவனித்து கொண்டிருந்த அவன் அம்மா அவனை அணைத்து ஆறுதல் கூறினாள்



4 comments:

  1. It truly depicts the strong bonding between the grandfather and the grandson

    Also in Tamil culture , its a taboo to talk about death ( especially with children ). But since the grandfather was comfortable enough to talk about it with his grandson, both were deep inside kind of prepared for their loss.

    Very well written

    ReplyDelete
  2. குழந்தைகள் கடவுள் மாதிரின்னு சொல்வா. அது ரொம்ப சரி. அழகான கதை படிச்சாச்சு ... நன்றி!

    ReplyDelete
  3. குழந்தை மனம் இதுதானே! நெகிழ்வான கதை!

    ReplyDelete
  4. வழக்கம் போல மிகவும் அருமை

    ReplyDelete