Sunday, April 9, 2017

இங்கே எல்லாம் கோணங்கிகள்

மரங்களும் செடிகளும் கூடிய இந்த நிழலான இடம் எனக்கு பிடித்து விட்டது. விசாலமாகவும் வெளிச்சமாகவும் உள்ள. இந்த சூழ்நிலை மனதுக்கும்   இதமாக அமைந்துள்ளதில் ஒரு திருப்தி. நான் என்  வேலை உண்டு என்  ஜோலி உண்டுன்னு இருப்பேன்.யாரிடமும்அனாவசியமாக பேச மாட்டேன். எப்பொழுதும் ஏதாவது  சிந்தித்து கொண்டே இருப்பேன். எண்ணங்கள் கோர்வையாக இருந்தாலும், அதை சரியாக எடுத்து சொல்ல வருவதில்லை.நடுவில்  மறதி வேறு கொஞ்சம் தொந்திரவு படுத்துகிறது எப்போதும் ஏதாவது யோசித்து கொண்டிருப்பது கஷ்டமாக இருக்கு.தலை மயிரை பிய்த்து கொள்ளணும் போல ஒரு வெறி.தலை வலியும் கூட சேர்ந்துகொள்கிறது   ஆனால் யோசிக்காமல்   இருக்கமுடியலை.
எப்போதாவது  யாரையாவது ஏதாவது கேட்டால் நான் சொல்வது அவர்களுக்கு புரியாத    மாதிரி  அவர்கள்  பதில் சொல்வதில்லை. . சிலர் விசித்திரமாக பார்ப்பது உண்டு. சிலர்    லேசாக   சிரித்துக்கொண்டே போய்விடுவார்கள்..வயசானவன் என்றோ அல்லது பேச்சில் குழறலோ என்னவோ, காரணம் தெரியலை.நானும் லக்ஷியம் பண்ணுவதில்லை. உலகத்தில சில கோணங்கிகள் இருக்கத்தான் செய்யும். மொத்தத்தில் எனக்கு ஒரு விஷயத்தை தவிர   குறையேதும் இல்லை.
இங்கே நிறைய வெள்ளை உடை போட்டுக்கொண்டு  ஆட்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள் அவர்கள் நல்லவர்கள் அல்ல.விச்ராந்தியாக மாலை நேரம் கொஞ்சம் இருட்டின பிறகு இங்கே இருந்தால் முரட்டுத்தனமாக  காற்றோட்டமில்லாத சின்ன அறைக்குள் தள்ளிவிட இழுத்துக்கொண்டு போவார்கள்.என் மேல் கையை  வைக்காதே நானே வருகிறேன் என்றால் கூட ஆடு மாட்டை தள்ளுகிற   மாதிரி விரட்டுவார்கள். பேச்சில்    துளிக்கூட நயமே கிடையாது..அவர்களை பார்த்தால் எம கிங்கரர்கள் எண்ணம்தான் வரும்.என்னிடம் மாத்திரம் பாரபக்ஷம் காட்டுகிறார்கள் என்று எனக்கு   நிச்சயம் தெரியும்  .யாரிடம் சொல்வது யார் என்னை கேட்க போகிறார்கள்.
உங்களுக்கெல்லாம்  நான் எழுத்தாளன்னு நன்றாக தெரியும்.இருந்தும் இந்த கிங்கரர்கள் என்னை தினசரிகளையோ புத்தகங்களையோ படிக்க விடுவதில்லை.கிழித்து விடுவேனாம் ஒரு     தடவை  நான் தினசரியை  தலை  கீழாக  படித்து  கொண்டிருந்தேனாம் .அதற்கு அவர்கள் சிரித்ததிற்கு கோபத்தில்  தினசரியை கிழித்து போட்டேனாம்.பொய்களுக்கும் அளவே கிடையாதா ?  எனக்கில்லாத தரிசனமா  புத்தகங்கள் மீது இந்த கற்பூர வாசனை தெரியாத கழுதைகளுக்கு. விட்டு தள்ளுங்கள். தோணுவதை எழுத கொஞ்சம் வெற்று காகிதம் ஒரு பென்சில் கொடு என்று கேட்டதற்கு நான் பென்சிலால் மற்றவர்களை குத்திவிடுவேனாம்.சிரிப்புதான் வருகிறது
இந்த பைத்தியங்களுக்கு நடுவில் ஒரு நல்ல சமாச்சாரமும் உள்ளது.அதையும் கேளுங்களேன். வாரத்திற்கு மூன்று அல்லது  நான்கு   தடவையாவது .அந்த நாற்பது வயது  பெண்மணி இங்கு வருகிறாள்.ஒரு வேளை என்னை பார்க்கத்தான் வருகிறாளோ என் யோசிப்பேன் .ஏனென்றால்   வேறு யாரையும்  அவள் பார்ப்பதில்லையே.களையான முகம். ஏதோ   துக்கத்தில் உள்ள மாதிரி  சற்றே வாடின முகம். என்னை உற்று கவனிப்பாள் ஆனால் துளி   சிரிப்பு இருக்காது. வீட்டில் என்ன கவலையோ அல்லது யாருக்காவது உடல் சுகவீனமோ  தெரியவில்லை. ஒன்றும் சொல்ல மாட்டாள்.என் கைகளை பிடித்து கொள்வதும் தடவி கொடுப்பதிலுமே நேரம் செல்லும்.ஏதாவது பழங்களோ இனிப்போ பக்ஷணமோ மறக்காமல்   கொண்டுவருவாள்.எனக்கு சில சமயம் தெரியாதவர்களிடம் வாங்கி சாப்பிட  தயக்கமாக இருக்கும். வேண்டாம் என்றால் முகம் வாடிவிடும். எங்கேயோ பார்த்த பழகின முகம் மாதிரி இருக்கு.ஆனால் எங்கே யாருன்னு தெரியலை. அந்த சமயம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டால் அவள் எதிரில் இருப்பதையே மறந்து பேசாமல் இருப்பேன்.ரொம்ப நேரம் பொறுத்திருந்து  பார்த்துவிட்டு தன்  கண்களை துடைத்து கொண்டு  கிளம்பி விடுவாள்.
எனக்கு இன்று ஒரே கோபம்.வழுக்கை தலையோட தாட்டியா  இருக்கானே    அந்த வெள்ளை உடை என்னை வேண்டுமென்றே   கீழ தள்ளிவிட்டு , "கண் இல்லையா   பார்த்து போவதுதானே"  என்று சலிசசு கொள்கிறான்.
அவள் வந்தவுடன் "எனக்கு இங்க இருக்கவே பிடிக்கவில்லை. தயவு செய்து .என்னை உங்க வீட்டுக்கு அழைத்து கொண்டு போயேன் .நான் உனக்கு எல்லா உதவியும் பண்ணுகிறேன்"என்று சொன்னேன்.
"உங்களை இங்கிருந்து போக விட்டால் கட்டாயமா அழைத்து போகிறேன் .கவலை படாதீங்க.கேட்டு பாக்கறேன் என்று :”அன்பாக கூறினாள். 
ஒரு நாள் அவள் கிளம்புகையில் ஒரு வெள்ளை உடை அவளிடம் “உங்க  அப்பா எப்படி இருக்காரு? கொஞ்சமாவது தேவலையா?"பாவம் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறே"என  அங்கலாய்த்தான்.
அதற்கு அவள்"அப்படியேதான் இருக்கார்.சில சமயம் தான் தெளிவாக இருக்கிறார்.இதுவரை   என்னை அடையாளம்  .கண்ட மாதிரி தெரியலை. பார்க்க கஷ்டமாக இருக்கு" என சொன்னது என் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.  பாவம் அவள் அப்பா இங்க பக்கத்துல ஏதாவது ஆஸ்பத்திரியில் இருக்கார் போல.அதனால்தான் இங்கேயும் ஒரு நடை வந்துவிட்டு போகிறாள். எதுவாக இருந்தாலும் அவள் வருவதில் எனக்கு சந்தோஷம்தான்.
சில நாட்கள்   பிறகு என்னை பார்த்து விட்டு  அவள் கோடியில் இருக்கும் கட்டிடத்திற்கு சென்றாள் அவளை  இரண்டு வெள்ளை உடை பின் தொடர்ந்து செல்வதை பார்த்தேன்.எனக்கு ஒரே   பயம் .என்னை தள்ளின மாதிரி அவளையும் கீழே தள்ளி விட்டால் அடி படுமே.
படக்குன்னு பக்கத்தில் உள்ள ஒரு கிளையை ஒடித்தேன்.தடி மாதிரி பண்ணி நானும் பின்னாலயே போனேன்.
அவள் அங்க யாரோ புது கோட்டு ஆசாமியோட  பேசிக்கொண்டிருந்தாள் நான் தாழ்வாரத்தில ஒளிந்துகொண்டு ஒட்டு கேட்டேன்.கொஞ்சம்தான் கேட்டது. "கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு.இன்னும் சில மாதங்கள் ஆகும்னு நினைக்கிறேன்.கவலைப்பட  தேவையில்லை " யாரை பற்றி இந்த விவரம்,அவள் அப்பாவை பற்றியோ சரியாக தெரியலை.தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது.
அவளுக்கு தெரியாமல் திரும்பிப்போக யத்தனிக்கையில் அவள் என்னை பார்த்து விட்டாள்.நல்ல வேளை எம கிங்கரர்கள்  பார்க்கவில்லை.என் கையில் உள்ள தடியை பிடுங்கி போட்டுவிட்டு என்னை அணைத்துக்கொண்டு மரத்தடிக்கு நடந்தாள்.மனதில்  எனக்கு சொல்லதெரியாத குதூகலம்.
கண்ணம்மா, ஏதாவது சாப்பிட கொண்டு வந்து இருக்கையா?ஒரே பசிக்கறது” என்றேன்
நான் என்ன தப்பா பேசிவிட்டேன்.அப்படியே என்னை  கட்டிக்கொண்டு "அப்பா,திருப்பி சொல்லுங்க.என்ன சொன்னீங்க?கண்ணம்மா யாரு?  ? நான் யார் தெரியறதா? கடவுள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டார் .வாங்க  முதலில் சாப்பிடலாம்,"என்றாள்.
அந்த வெள்ளை உடை ஆசாமிகள் முதல் தடவையாக என்னை பார்த்து முகம் சிணுங்காமல் சிரித்தார்கள்.   எனக்கும் அவர்கள் எம கிங்கரர்கள் போல தென் படவில்லை.
இது என்ன  இடம் எல்லா கோணங்கியாக இருக்கேன்னு அவளிடம் கேட்டேன்.  அவள் குலுங்கி குலுங்கி சிரிப்பதற்கு நான்  என்ன வேடிக்கையாக பேசிவிட்டேன். ஆனால் அவள்  முகம் இன்னும் பிரகாசமானது.

7 comments:

  1. அற்புதமான படைப்பு
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்குகிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வழக்கம் போல மிகவும் அருமை

    ReplyDelete
  3. ரொம்ப அழகாக எழுதி இருக்கிறீர்கள்! முதலில் கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தது! அப்புறம் சந்தோஷமாச்சு! நன்றி!

    ReplyDelete
  4. நேர்த்தியான நடை. அழகாக எடுத்தாளப்பட்ட உணர்ச்சிகள். நல்ல கதை படித்த திருப்தி. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. I like this new format for your blog. அருமையான கதை , பெரியப்பா. அசத்தல் !

    ReplyDelete
  6. What a lovely story!! You have portrayed the emotions so well.

    ReplyDelete
  7. Truly memorable story. Loved the way you developed it and then the denouement. Feel good story, without a doubt.

    ReplyDelete