Sunday, August 7, 2011

சேச்சுவின் கவலை

"புடவை ரொம்ப கந்தலா இருக்கு.வீட்டை விட்டு வெளில போகவே வெக்கம் பிடுங்கி திங்கறது" மெள்ள முனகினாள் அலமேலு.
"தெரியும்டி,கொஞ்சம் பொறுத்துக்கோ.கைவசம் 300 ரூபாய் தான் இருக்கு. கோவில்ல தாயாருக்கு புடவை ஒரே கிழிசல்.எப்படி அலங்காரம் பண்ணினாகூட கிழிசல் வெளில தெரியறது.எல்லோரும் பார்க்கறா.என்னோட உடம்பு கூனி குறுகி போறது.வாயை விட்டும் கேட்டாச்சு. ஆனாலும் உதவி பண்ண யோஜிக்கரா" என்று கோவில் அர்ச்சகர் சேச்சு புலம்பினார்.
"கவலை படாதீங்கோ.நான் வெளியில் போறதை குறைச்சுண்டுட்டேன்.எப்போ முடிகிறதோ அப்போ வாங்கி கொடுங்கோ" என்றாள்.
:இன்னும் மூன்று நாட்களில் பெருமாள் திருநக்ஷத்திரம் வரது.அதற்குள் வஸ்திரம் ஏற்பாடு பண்ணனும்.கோவில் தர்மகர்த்தாவை கேட்டேன்.கோவிலுக்கு வருமானமே இல்லை.நித்யபடி பூஜைக்கே என்னோட கையை விட்டு செலவழிக்கிறேன். கோவிலுக்கு வரவாளை கேளுங்கோ" நு சொல்கிறார்.
"ஒரு காரியம் பண்ணுங்கோ. தேஞ்சி போன என்னோட ஒரு ஜோடி வளையலை வெச்சு பெருமாளுக்கும் தாயாருக்கும் சேர்த்து வாங்கிடுங்கோ.வளையல் இல்லாவிட்டால் ஒன்னும் குறைஞ்சி போய்விட மாட்டேன்" என்றாள் அலமேலு.
சேச்சுக்கு தூக்கி வாரி போட்டது."உனக்கு ஒரு குந்துமணி கூடஇதுவரை வாங்கி தந்தது இல்லை.வேண்டாம்.பெருமாள் விட்ட வழி நடக்கட்டும்" என்றார்.
"அப்படி சொல்லாதீங்கோ.நான் முடிவு பண்ணியாச்சு.தயவு பண்ணி முதல் காரியமாக ஜவுளி வாங்க ஏற்பாடு பண்ணுங்கோ"என்று கை வளையல்களை கொடுத்தாள்.
சேட்டு கடையில் "வாங்க சாமி, ஏது அபூர்வமாக இங்கே வந்தீங்க?நான் என்ன உதவி பண்ணட்டும்"என்று கேட்டார்.
"ஒன்னும் இல்லையப்பா.கொஞ்சம் அவசர பணமுடை.இந்த ஜோடி வளையல்களுக்கு என்ன முடியுமோ அவ்வளவு தந்தீங்கன்னா ரொம்ப நல்லதாக இருக்கும்'என்றார்.
தேச்சுi பார்த்து விட்டு"இது ரொம்ப கலப்படம்.வளையல்களும் ரொம்பவும் தேஞ்சி போய்விட்டது. ஜாஸ்தி வராதே"என்றார்.
சேச்சுவின் முகம் வாடியது கண்டு "என்ன பணமுடை, சாமி?யாருக்காவது உடல் நலம் சரியில்லையா?சொல்லுங்க எவ்வளவு வேணும் ?"என்றார் கரிசனத்துடன்.
"அதெல்லாம் இல்லை.பகவான் புண்ணியத்துல எல்லோரும் நன்றாக இருக்கோம்.பெருமாளுக்கும் தாயாருக்கும் வஸ்திரம் கிழிந்து மாற்ற வேறு புடவை வேஷ்டி இல்லை.கோவிலுக்கும் பணமுடை.வருமானம் இல்லை.தர்ம கர்த்தா கை பணத்தை போட்டு நடத்தி கொண்டு இருக்கிறார்.பெருமாள் நக்ஷத்திரம் வரது அதற்குள் இந்த வளையல்களை போட்டு வாங்கலாமேன்னு யோசனை.அதுவும் முடியாது போல இருக்கு.கேட்பதை வாரி வழங்கும் வள்ளலுக்கே வஸ்திரம் இல்லையானால் மனது ரொம்ப வியாகூல படுகிறது.என்ன சோதனையோ தெரியலை"என்றார் சேச்சு.
"என்றைக்கு அந்த நல்ல நாள்?"சேட்டு கேட்டார்.
"இரண்டு நாள் கழித்து புதன் கிழமை அன்று"என்றார் சேச்சு.
"கவலையை விடுங்க.யாராவது கட்டாயமாக வந்து உதவி பண்ணுவாங்க.வளையல்களை கையில பிடியுங்க.ஆண்டவன் மேல நம்பிக்கை வையுங்க.அப்படி யாரும் வரலைனா என்னை வந்து பாருங்க."என்றார் சேட்டு
செவ்வாய் மாலையில் கோவிலில் தாயாருக்கு அர்ச்சனை பண்ணிக்கொண்டு இருந்தார்.மனதில் சொல்லவொணா வருத்தம்.கண்களில் ஒரு சோகம்.அப்பொழுது ஒருவர் வந்து ஒரு பெரிய கூடையை அர்ச்சகர் முன் வைத்தார்.
சேச்சு உடனே அர்ச்சனையை முடித்து,"என்ன இது?யார் கொடுத்தார்கள்?"என்று விசாரித்தார்

"எனக்கு தெரியாது.யாரோ ஒருவர் கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் சேர்ப்பித்து விடு என்று சொல்லி காரில் வேகமாக சென்று விட்டார்" என்று அவர் சொன்னார்.
கூடையின் மேல் உள்ள துண்டை அகற்றி பார்த்தப்பொழுது உள்ளே இரண்டு பெரிய பொட்டலங்கள்.திறந்து பார்த்ததில் ஒன்றில் ஒரு ஜோடி பட்டு புடைவைகள் ரவிக்கை துண்டுகளுடன்,பெரிய மயில் கழுத்து கரையில் ரெண்டு ஜோடி வேஷ்டிகள். ஒரு பொட்டலத்தின் மேல் பெருமாளுக்கு என்றும் மற்றொன்றில் அர்ச்சகர் தம்பதிகளுக்கு என்றும் எழுதி இருந்தது.அதில் ரெண்டு ஜோடி புடவை வேஷ்டி ரவிக்கை துணிகளுடன்.இரண்டு பொட்டலங்களிலும் ஆயிரம் ரூபாய் நோட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஒரு சின்ன குறிப்பும் இருந்தது.
"அன்றைய பூஜை என்னோட உபயமாக இருக்கட்டும்.ஜமாய்ச்சுடலாம் விமரிசையாக.நாளைக்கு கோவிலில் புஷ்பம்,தேங்காய்,பழங்களுடன் நேரில் உங்களை வந்து பார்க்கிறேன்.
ஒரு பக்தன்"
சேச்சுவிற்கு கை கால் ஓடலை.தாயாரை திரும்பி பார்க்கிறார்.சின்ன புன்முறுவலுடன் இருக்கிறதாக ஒரு பிரமை. உடனேயே யானை பலம் வந்து விட்டது.நாளைய உற்சவம் பற்றிய கவலை எல்லாம் மறைந்தது.மனதில் ஒரு வேளை சேட்டுவின் உபயமோ என்று ஒரு குறுகுறுப்பு.
புதன் காலையில் கோவில் திறந்த உடனேயே காரில் சேட்டு இறங்கி வந்தார்.கையில் எல்லா பூஜா திரவியங்குளுடன்.
சிரித்தபடியே "சாமி திருப்திதானே.நல்லபடியாக நடக்கட்டும் இன்றைய உற்சவம்.இனிமேல் இது என்னுடைய கைங்கரியமாக இருக்கட்டும்."என்றார்.
கோவில் மணி டாண் டாண் என்று ஒலித்தது.
சேச்சுவின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.


.