Monday, May 15, 2017

ரசனையும் கருணையும்


 சின்ன ஊர்தான் ஆனால் அங்குள்ள ராமர் கோவிலோ பிரசித்தம். முக்கியமாக அங்கு உள்ள ஆஞ்சனேயர் ஒரு வரப் ப்ராஸாதி. கோவிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய குளம். கோவில் வாசலுக்கு ஒட்டின மாதிரி இரு பக்கங்களிலும் வீடுகளுடன் பிரதான தெரு. காலையிலும் மாலையிலும் கோவில் நிறைந்து இருக்கும். கதைக்கு வருவோம். இந்த சம்பவம் 60 வருஷங்களுக்கு முன் நடந்தது.
லக்ஷ்மி காலையில் சுமார் எட்டு மணி அளவில் சமையல் அறையில் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருப்பாள். இருந்தாலும் ஹார்மோனியத்திலிருந்து தூரத்திலிருந்து வரும் மெல்லிய சங்கீதத்தை கேட்டவுடனேயே வாசலுக்கு ஒரு டம்ளரில் அரிசியுடன் விரைந்தோடி வருவாள். அப்பொழுதுதான், அந்த பெரியவர் அவள் வீட்டிற்கு வரும் வரை அவரின் சன்னமான இனிமையான குரலில் ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டே பாடும் தியாகராஜ கீர்த்தனைகளை, அவளால் கொஞ்ச நேரமாவது கேட்க முடியும்.
அறுபது வயதுக்குள் இருக்கலாம், ஒல்லியான உடல் வாகு, நல்ல உயரம், தீர்க்கமான நாசி, நெற்றியில் கோபி சந்தனம், சாந்தமான முகம், கழுத்தில் துளசி மாலை, உஞ்சவிருத்தி பிராம்மணராக இருந்தாலும் அவரிடம் மரியாதையை வரவழைக்கும் கம்பீரமான தோற்றம் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி, தலயை சுற்றி மஞ்சள் துணியால் தலைப்பாகை, அதே ராம நாம எழுத்து பதிந்த துணி அவர் முதுகை மறைத்து முழங்கால் வரை பின்னே தொங்கியது. ஒரு தோளிலும் கழுத்திலும் தொங்கிய ஹார்மோனியமும், மற்றொரு தோளில் பளபளவென்று ஒரு பித்தளை செம்பு தொங்கியது.
அவர் தன்னையே மறந்தவராக கண்களை சற்று மூடியவாறு தியாகபிரம்மத்தின் கீர்த்தனைகளை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டே நடப்பார். யார் வீட்டு வாசலிலும் சில க்ஷணங்ககளுக்கு மேல் நிற்கமாட்டார். அவர் வாசலில் வருவதற்கு முன்னரே சில பெண்மணிகள் அரிசியோடு காத்து கொண்டிருப்பார்கள். அரிசியை செம்பில் சேர்த்துவிட்டு சிலர், முக்கியமாக லக்ஷ்மி, காலில் வீழ்ந்து வணங்குவதும் உண்டு. அவர்களை ஆசீர்வதித்து விட்டு கொஞ்சம் அரிசியை பெண்மணிகளின் பாத்திரத்தில் போடுவார்.
லக்ஷ்மியை அவரின் ராம பக்தியும், இசைத்திறமயும், பரந்த மனோதர்மமும் வசீகரித்தது. ஒரு நாள் பாடின பாட்டுகளையே மறு நாள் பாடமாட்டார். ஹார்மோனியம் வாசிக்கும் திறமையால் பாட்டு மேன்மை அடைகிறதோ அல்லது அவரின் குரல் வளமுடன் பக்தி உத்வேகமும் சேர்த்து அவரின் கானத்திற்கு ஒரு தெய்வீக அனுபவத்தை கொடுக்கிறதோ எதுவென்று லக்ஷ்மிக்கு தெரியவில்லை. ஆனால் அந்த பத்து நிமிஷ ஆத்மானுபாவத்திற்காக தினம் ஆவலுடன் காத்திருப்பாள். அவர் ஒரு நாள் வராவிட்டால் என்னவோ எதோ என்று கவலையுடன் வாசலில் அடிக்கடி எட்டிப் பார்ப்பாள்.
லக்ஷ்மி சிறு பெண்ணாக இருக்கும்போது அவளுக்கு வாய்பாட்டு ஏழெட்டு வருஷங்கள் சொல்லி கொடுத்திருகிறார்கள். கீர்த்தனைகள் முடித்து ஆலாபனை ஆரம்பிக்கும் வரை கற்று கொண்டிருக்கிறாள். அவள் அப்பா அவளுக்கு ஒரு ஹார்மோனியம் வாங்கி கொடுத்து இருக்கிறார். கல்யாணத்திற்கு பிறகு பாடுவது குறைந்து நாளாவட்டத்தில் நின்றே விட்டது. ஹார்மோனியத்தை பூஜா அறையில் வைத்து விட்டாள்.
அந்த பெரியவருக்கு இவளின் சங்கீத ரசனையை பார்த்து இவளுக்கு தேர்ச்சி இருக்கிறது என அனுமானித்து இவள் வீட்டு வாசலில் சில நாட்கள் சற்றே அதிக நேரம் நின்று பாட்டை வித விதமான நிரவல்களுடனும் ஸ்வரங்களுடனும் பாடுவார். அதில் அவளுக்கு பரம சந்தோஷம்.
திடீரென்று மூன்று நாட்கள் அந்த பெரியவர் உஞ்சவ்ருத்திக்கு வரவில்லை. லக்ஷ்மிக்கு என்னவோ ஏதோ என்று கவலை. யாரிடமும் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை ஜுரமாக இருக்கலாமோ, அரிசி இல்லாமல் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார் என்று மனக்குடைச்சல். அவள் கணவர் வெங்கடேசனிடம் மெள்ள அவள் கவலையை சொன்னாள்.
வெங்கடேசன் சிரித்துக்கொண்டே” உனக்கு யாருக்காக எதற்காக கவலைப் படுவது என ஒரு விவஸ்தை இல்லை. “உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம்னு” நீ கேள்வி பட்டு இருக்கையா? ஜாண் வயிற்றுகாக பல வேஷம் போடறது. அந்த ஆள் வெள்ளை வேஷ்டி உடுத்திண்டு, நெத்தியில சந்தனத்தோட பாடிண்டு வருகிற கௌரவ பிச்சைக்காரர். ராமர் பேரில் பெண்களுக்கு பிடித்த பாட்டுகளைப் பாடி சுலபமாக அரிசியை வாங்கிண்டு போற ஆள்,” என்றான். லக்ஷ்மிக்கு கோபம் பொத்திகொண்டு வந்தாலும் மௌனமாக வெளியே சென்றுவிட்டாள்.
எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிகொள்வதைத் தவிர அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிருஷ்டவசமோ அல்லது வேண்டுதலில் பலனோ அடுத்த நாளே அந்த பெரியவரின் பாட்டு சப்தம் கேட்டது. வேகமாக வாசலில் வந்த அவளுக்கு ஒரு அதிர்ச்சி. முகவாட்டத்துடனும் பலஹீனமாகவும் கழுத்திலிருந்து தொங்கும் ஹார்மோனியமும் இல்லாது அவர் காணப்பட்டார்.
“மாமா. என்ன ஆச்சு? உடம்பு சுகமில்லையா? மூன்று நாட்களாக காணவில்லையே. ஹார்மோனியம் எங்கே?” மிக்க கவலையுடன் கேட்டாள்.”
“ஓரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது. ஒரு ஆட்டோக்காரன் என் மேல் மோதி கீழே தள்ளிவிட்டான். அதுகூட பரவாயில்லை. என் ஹார்மோனியத்தின் மேல் ஏற்றி அதை தவிடு பொடியாக்கிவிட்டான். கையில கால்களில் பலத்த அடி. இப்பொழுது வலி பரவாயில்லை. ஹார்மோனியம்இல்லாமல்கிரஹலக்ஷ்மிகளை ஈர்க்க உரக்க பாட வேண்டி இருக்கிறது. எல்லாம் ராமன் செயல். கொஞ்சம் கஷ்டப்படனும்னு விதி. வேறு என்ன சொல்றது?” என்றார்.
“தயவு செய்து இரண்டு நிமிஷங்கள் இருக்க முடியுமா? இதோ வந்து விட்டேன்,” என்றபடியே பூஜா அறைக்கு விரைந்தாள். அங்கு கண்களை மூடியபடி அவளின் ஹார்மோனியத்தை அவருக்கு தானமாக கொடுக்க அனுமதி கோரினாள். சேவித்த பிறகு சிகப்பு வெல்வெட் துணியால் மூடிய ஹார்மோனியத்தை கைகளில் கொணர்ந்து அவரின் கைகளில் கொடுத்தாள். திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் ஹார்மோனியத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தவண்ணம் நாத்தழுக்க “என்ன இது?” என வினவினார்.
ஹார்மோனியத்தின் மேல் மூடிய சிகப்பு துணியை எடுத்தவாறே “இது நான் சிறுமியாக இருந்த போது என் அப்பா வாங்கிக்கொடுத்தது. கல்யாணத்திற்க்கு பிறகு பாடுவதை நிறுத்தி விட்டேன். இது பூஜா அறையில் இருந்தது. உங்களிடம் இருந்தால் நன்றாக உபயோகப்படும். தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுகொள்ளுங்கள்,” என்றாள்.
அவர் தயக்கத்துடன் நிற்பதை கண்டு “சற்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்கள் பெண் மாதிரி. சற்று சுயநலம் கூட உள்ளது. நீங்கள் வாசிக்க நான் கேக்கும் பாக்கியமும் இருக்கு. ஒரே ஒரு ஆசை,” என நிறுத்தினாள்.
என்ன என்கிற கேள்விக்குறியோடு அவளை நோக்கினார்.
“எனக்காக ‘நிதி சால சுகமா, ராமுடு சன்னிதி சேவ சுகமா’ கல்யாணி ராக பாட்டை விஸ்தாரமாக நிரவல் ஸ்வர ப்ரஸ்தாரத்துடன் பாட இயலுமா?” என்றாள்.
“அதற்கென்ன, தாராளமாக பாடுகிறேன்” என்று பூஜா அறையின் முன்னால் அமர்ந்து பாட ஆரம்பித்தார். பக்தி பரவசத்துடன் ரொம்ப பிரசித்தமான அப்பாட்டிற்கு புது மெருகு ஊட்டி கற்பனையோடும் உற்சாகத்துடனும் பாடி லக்ஷ்மியை தெய்வானுபவத்தில் திளைக்க  விட்டார்.
மாலையில் ஹார்மோனியத்தை அவருக்கு கொடுத்த விஷயத்தை லக்ஷ்மி சொன்ன போது, வெங்கடேசன் “நல்ல காரியம் பண்ணினாய். அது  இடத்தை அடைத்து கொண்டிருந்தது,” என்றான்.  
லக்ஷ்மி மறுபடியும் மௌனம் சாதித்தாள்                                 

Wednesday, May 10, 2017

கோண்டு மாமாவும் மொளகா பஜ்ஜியும்

ஆபீஸில் மிக மும்முரமாக வேலையில் மூழ்கி இருந்தேன், திடீரென்று ஃபோன் அலர ஆரம்பித்தது.
"சாரங்கா, நான் மாது பேசறேன். உனக்கு தெரியுமா நம்ம கோண்டு மாமாவை அப்போலோல சேர்த்து இருக்காங்களாம்? நெஞ்சு வலி. வயிற்றை ஏதோ பண்றதுனு சொன்னாரம். வேர்த்து கொட்டியதாம். நல்ல வேளை மாமி ஆஸ்பத்திரிக்கு உடனே கூட்டிண்டு போனாங்க. என்ன ப்ராப்ளம்னு சரியாகத் தெரியலை. நாளை விட்டு மறு நாளைக்கு பெரிய ஆபரேஷனாம். ரிஸ்க் அதிகமாம்” மாது படபடப்புடன் பேசினான்.
“உனக்கு யார் சொன்னது? மாமா வீட்டுலேந்து ஃபோன் வந்துதா? தகவல் உண்மையா என்று நன்னா விசாரிச்சயா?” என்றேன்.
“என் மனைவி சொன்னாள். அவளுக்கு யார் சொன்னான்னு தெரியலை.,” என்றான்.
எனக்கு மாமாவை பற்றி கவலை உண்டாகியது. என் அம்மாவின் கடைசி தம்பி. பழகுவதற்கு இனிமையானவர், சிரித்த முகம், ரொம்ப நல்ல சுபாவம், உபகாரி, என்ன காரணமோ தெரியல என்னிடம் ரொம்ப அன்னியோன்யம். ஒரு வேளை நான் அவர் ஜாடையாக இருப்பதாலோ அல்லது இருவருக்கும் பிடித்த சமாசாரங்கள் அனேகமானதாலோ என்னவோ ஒரு நெருக்கம். ஆசார குடும்பம். தாத்தாவும் மாமாவுடன் தங்கி இருந்தார். பத்து, பதினைந்து வருஷங்கள் முன்னால் வரை வீட்டுக்கு தெரியாமல் எப்பொழுதாவது சுருட்டு பிடிப்போம், ஆம்லெட் சாப்பிடுவோம். சசி மலையாள படம் பார்ப்போம் கிரிக்கட் விளையாட்டை பேசிக் கொண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக மேச்சு பார்க்கவும் போவோம். மாமி ஏன் எனக்கு ஃபோன் பண்ணவில்லை நு கொஞ்சம் வருத்தம்.
எனக்கு தெரிந்து அவருக்கு ஒரு உபாதையுமில்லை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. 55 வயதுக்கு பலமாகத்தான் இருந்தார். ஒரு வேளை இப்ப எல்லாம் ரொம்ப சகஜமாகிப் போன சைலென்ட் அட்டாக்கோ? எனக்கு தெரிந்த வரை அவருக்கு கெட்டப் பழக்கங்கள் கிடையாது. ஆனால் நாக்கை கட்டுப்படுத்தத் தெரியாது. அவருக்கு நிறைய குழந்தைகளாச்சே. இரண்டு பையன்கள் இன்னும் படித்துகொண்டிருந்தார்கள், ஒரு பெண்ணுக்கு கல்யாணம் வேறு பண்ணனும். அவர் பணம் நிறைய சேர்த்து வைத்ததாக தெரியவில்லை. பூர்வீக சொத்தும் கிடையாதே. சங்கடமாக இருந்தது.
“மாது, நான் மாமியிடம் பேசறேன். உனக்கு அப்புறம் தகவல் கொடுக்கிறேன்.”
மாமா வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. வீட்டில் யாருமில்லை போல தெரிந்தது. என்னோட சித்தி பெண்ணுக்கு ஃபோன் பண்ணேன். தனக்கு முழுசா விவரம் தெரியலை என்றும் ஆனால் மாமா அப்போலோல அட்மிட்டாகி இருக்கார் என்று பெரியம்மா பெண் சொன்னதாக தெரிவித்தாள். அவளுக்கு யார் சொன்னா என்று தெரியலை. “சாரங்கா, மாமா இன்டென்சிவ் கேர்ல இருக்கிறாராம்,” எனக் கூடுதல் தகவல் கொடுத்தாள்.
நேரிலேயே போய் பார்த்துவிடுவது என்று தீர்மானித்து அப்போலோ ஆஸ்பத்திரிக்கு மாலை நான்கு மணிக்கு போய் சேர்ந்தேன். ஹாலில் திருவிழா மாதிரி கச கசன்னு கூட்டம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று சுற்றி நோட்டமிட்டேன். மாமியோட அண்ணா பிள்ளை, பெயர் ஞாபகமில்லை, கண்ணில் பட்டார். “கோதண்டம் மாமாவை பார்க்க வந்தேன். எப்படி இருக்கார்? ஏதாவது தெரியுமா?” என வினவினேன்.
“அத்திம்பேர் இங்க இருக்காரா என்ன? எனக்கு தெரியாதே. என் கூட வேலை பண்ணுகிற ஆபீஸ் ஆசாமியை பார்க்க வந்தேன்.” என்று நகர்ந்தார்.
“இங்க கோதண்டராமன் என்பவர் ஹார்ட் ஆபரேஷனுக்காக இன்டென்சிவ் கேர்ல அட்மிட் ஆகி இருக்காராம். என்ன நம்பர்நு சொல்ல முடியுமா “என்று ரிசப்ஷன்ல கேட்டேன்.
‘கம்ப்யூடெரில் பார்த்துவிட்டு” அந்த பேரில யாரும் அங்க இல்லைங்க. ஆனால் அதே பேரில நாலாவது மாடியில 1509வது ரூமில ஒருத்தர் இரண்டு நாள் முன்னே அட்மிட் ஆனார். அங்க விசாரியுங்க,” என்றாள்.
மாமி ரூமிற்கு வெளியில் ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் சிரித்த முகத்துடன் அருகில் வந்தாள்,
“மாமி, ஏன் எனக்கு முன்னாடியே சொல்லலை? பெரிய ஹார்ட் ஆபரேஷனாமே? யாரு கார்டியாக் சர்ஜன்? ரிஸ்க் இருக்காமே. கூட யார் உதவியும் இல்லாம நீங்க தனியாக இப்படி பண்ணலாமா?” என்று சற்று கோபமாக கேட்டேன்.
“என்னடா சாரங்கா உளர்றே? உனக்கு யார் சொன்னா மாமாக்கு ஹார்ட் ஆபரேஷன் என்று? உள்ளே போய் நீயே கேளு. தட்டு நிறைய வெங்காய, வாழைக்கா பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்,” என்றாள்.
மாமா என்னை பார்த்துவிட்டு, வாய் நிறைய பஜ்ஜியுடன், “வா வா, சாங்கா. பஜ்ஜி சாப்றயா, ஒழத்தி,” என குழறினார். டி வி உரக்க அலறி கொண்டு இருந்தது.
“என்னது இந்த பைத்தியக்காரத்தனம்? நாளைக்கு ஹார்ட் ஆபரேஷனும் அதுவுமா பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டு” என்று சள்ளென கத்தினேன்.
“உனக்கு எந்த மடையன் எனக்கு ஹார்ட் ஆபரேஷன் என்று சொன்னான்?”
“மாமா, முதலில் மாது சொன்னான். உனக்கு யார் சொன்னது என்று கேட்டதற்கு, மனைவி, அவளுக்கு சித்தி பெண், அவளுக்கு, பெரியம்மா பெண் என்று ஹனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே இருந்தது. உங்க வீட்டிற்கு ஃபோன் பண்ணேன். யாரும் எடுக்கலை. ஒரே கவலையாக போய்விட்டது.,” என்றேன்
“அசடாக இருக்கையே, உங்கிட்ட சொல்லாம இருப்பேனா? பசங்க எல்லாம் கோயமுத்தூருக்கு ஏதோ கல்யாணத்திற்கு போய் இருக்காங்க. ரொம்ப நாளாக மூல (பைல்ஸ்) வ்யாதி கஷ்டப் பட்டுண்டு இருந்தேன். வெள்யில் சொல்ல தயக்கமாக இருந்தது. சப்தமில்லாமல் நாளைக்கு ஆபரேஷன். இரண்டு நாள்களில் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. கோவிச்சுக்காதே, சாரங்கா.
இந்த குழப்பத்திற்கு யார் காரண்ம் என்று தெரிஞ்சு போச்சு. அந்த மர மண்டை கோபுவுடன் ஒரு நாள் நான் நாயர் கடையில மொளகா பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பொ நாயர் கிட்ட மொளகா ரொம்ப காரமா இருக்கு. நெஞ்சு எரியறது, மிளகாயை மாத்துநு சொன்னேன். அந்த பைத்தியதிற்கு நான் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனது எப்படி தெரிஞ்சுதோ தெரியலை. ஆனால் காது, மூக்கு, கண்ணு வைக்சு ஹார்ட் ஆபரேஷனு புரளி கிளப்பிடுத்து. இந்த மூல ஆபரேஷனை பத்தி யாரிடமும் மூச்சு விடாதே. நல்ல வேளை, நீ என்னை இப்பொ பார்த்தே, இல்லாவிட்டால், அந்த அசட்டு கோபு கோண்டு மாமா திடீரென்று போயாச்சுன்னு கூட வதந்தி கிளப்பி இருப்பான்,” என்று சொல்லி கலகலவென்று சிரித்தார்.
“ஒன்னு ஞாபகம் வைச்சுக்கோ. கேள்விப்படற பேச்சில் பாதிதான் நிஜம். கேட்ட தையெல்லாம் நம்பாதே, நம்பினதையெல்லாம் சொல்லாதே. சரிதானே நான் சொன்னது” என்றார்.

Sunday, May 7, 2017

முள்ளும் மலரும்

மணி கிட்டதட்ட மூணாகப்போறது. இப்பொழுதான் சாந்திக்கு சற்று ஓய்வு கிடைத்தது. இன்னும் அரை மணியில் குழந்தைகள் ஸ்கூலிலிருந்து வந்து விடுவார்கள். ஒரு க்ஷணம் உட்காரவில்லை. காலை ஆறு மணியிலிருந்து ஒரே ஓட்டம்தான். ப்ரேக்ஃபாஸ்ட். மதிய உணவு, குழந்தைகளை தயார் படுத்துவது, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றுவது, பேங்க் வேலை, டிஷ் வாஷர், வாஷிங் மெசின் என பல வேலைகள் ஒரே சமயத்தில் நெருக்கும். வேலைக்கு ஆள் இருந்தாலும் சில வேலைகளை தானே செய்தால் தான் அவளுக்கு சரிப்படும். கணவன் ராகவனோ எதிலும் பட்டுக்கொள்ளாமல் மொபைலும் கையுமாக இருப்பான். நிறைய தடவை சொல்லிப்பார்த்தும் பலனில்லை. சிடுசிடுத்தாலும் அவன் லக்ஷியப்படுத்தமாட்டான். அதில் அவளுக்கு பெரிய குறை. அடிக்கடி சண்டையும் போடுவாள். குழந்தைகளிடமும் கொஞ்ச மாட்டான்.
ஏ சி யை போட்டு படுக்கையில் சாய்ந்தவண்ணம் கண்களை மூடி கொண்டு சாந்தி சற்று ஓய்வு எடுக்க படுத்தாள். அந்த சமயம் மெலியதாக மென்மையான குரலில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாட்டு அவள் காதில் விழுந்தது. கோடியில் முனியம்மாவின் அறையிலிருந்து தான் வந்தது. சப்தம் போடாமல் அங்கு சென்று கதவின் வெளியிலிருந்து உள்ளே பார்த்தாள். தரையில் பாயின் மேல் படுத்துக்கொண்டு சன்னமான குரலில் முனியம்மா பாடிக்கொண்டிருந்தாள். கிராமீய மணத்துடன் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் தன் பாட்டையே ரசித்து கொண்டிருந்தாள்.
அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்டக் கூடாதோ
பழகும் போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ

என்ன கருத்து செறிந்த பாட்டு. அர்த்தம் புரிந்துதான் பாடுகிறாளோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவள் வாழ்வில் வசந்தம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்திருக்கிறாள். அதை பிறகு பார்ப்போம்.
“முனியம்மா, இவ்வளவு அழகாக பாடுவாய் என்று எனக்கு தெரியவே இல்லையே. குரல் வேறு ரொம்ப இனிமையாக இருக்கு. சிறு வயதில் பாட்டு கற்று கொண்டிருக்கிறாயா??யார் சொல்லிக்கொடுத்தது? கொஞ்சம் பாடி காண்பியேன்” என்றாள் சாந்தி.
சட்டென பாயை சுருட்டி எழுந்து நின்றபடியே லேசான வெட்கத்துடன்,” என் அம்மா நன்னா பாடுவாங்க. அதை கேட்டும், அவங்களோட பாடியும் கொஞ்சம் கத்துண்டேன். அம்பிட்டுதான். ” என்றாள்.
“என்ன மாதிரி பாட்டு தெரியும் உனக்கு?”
” நலங்கு, தாலாட்டு, கும்மி, கோலாட்டம்நு கொஞ்சம் தெரியும். மறந்து போகக்கூடாதுனு இப்படி பாடிண்டு இருப்பேன். சின்ன வயசுலே எங்க ஊரிலே ஏதாவது விசேஷம்னா என்னைத் தான் பாடச் சொல்லி கூப்பிடுவாங்க இப்ப பசங்க ஸ்கூல்லேந்து வந்துடும். இன்னொரு நாள் உனக்கு பாடி காண்பிக்கறேன்,” என்றாள். ஒருமையில்தான் பேசுவாள்.
முனியம்மா வேலைக்கு சேர்ந்துஆறு மாதங்கள் தான் ஆகிறது. அவளுக்கு முன்னே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆள் ஏதாவது ஒரு காரணத்துக்கு அல்லது நொண்டிசாக்குடன் மாறிகொண்டே இருந்தார்கள். இவள் ஸ்திரமாக வேலையையும் செவ்வனே செய்துகொண்டு அனாவசியமாக பேசாமல் குறிப்பறிந்து நடந்து கொண்டாள். சாந்திக்கு பரம திருப்தி. அவளுக்கு கடைசி அறையை கட்டில் படுக்கை ஃபேன் வசதியோடு கொடுத்திருந்தாள். காபி சாப்பாடு பாகுபாடுமில்லாமல் உண்டு. நாள்கிழமை என்று அடிக்கடி துணிமணியும் வாங்கி கொடுப்பாள். இது தவிர மாத சம்பளமும் கொடுப்பாள். முனியம்மாக்கும் சந்தோஷம்தான். இவள் வந்ததிலிருந்து சாந்தியும் தனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிட முடிந்தது.
முனியம்மாவுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கலாம். சற்று ஒல்லியாகவும் உயரமாகவும் களையாக இருப்பாள். சிரித்த முகம். அதிர்ந்து பேசமாட்டாள். எந்த நேரமும் தலையை சீவி சுத்தமாக இருப்பாள். தன்னுடைய கஷ்டங்களை எளிதில் வெளியே சொல்லமாட்டாள். இருந்தும் அவளிடம் விதி படு கொடூரமாக விளையாடி விட்டது.
18 வயதிலேயே திருமணம். அவள் கணவன் மூன்று குழந்தைகளைத்தவிர வேறு சுகத்தையோ காசையோ அன்பையோ கொடுத்ததில்லை. மொடாக்குடியனிடம் கண்டது எல்லாம் அடியும் ஒதையும் தான். விடிவு காலமோ என்னவோ சில வருடங்களிலேயே வயிற்றில் அல்சர் வந்து போய் சேர்ந்தான். இரண்டு பிள்ளைகள் ஒரு பெண். மூத்த மகன் ஸ்கூலில் குழந்தைங்க சவாரி பண்ணுகிற சின்ன வண்டி ஓட்டற வேலை. ஏதோ ஒரு சின்ன பெண் குழந்தையிடம் த்காத முறையில் தப்பாக நடந்ததில் ஜெயிலில் ஏழு வருஷங்கள் இருந்தான். அப்புறம் அவனை பற்றி தகவலே இல்லை. அவளுடைய பெண்ணோ யாரோ இவளைவிட 20 வயது மூத்த ஆட்டோக்காரனுடன் ஓடிவிட்டாள். கடைசியாக கேள்விபட்டது அவளுக்கு அவன் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு மறைந்து விட்டானாம். கொஞ்ச நாட்கள் அல்லோலபட்டுவிட்டு குழந்தையுடன் மும்பாயில் ஈன வாழ்க்கையில் உழண்டு கொண்டிருப்பதாக அரசல் புரசலாக செய்தி. கடைசி மகன் வடக்கே சென்றவன் தான். எங்கே இருக்கானோ என்ன பண்ணுகிறானோ கடவுளுக்குதான் வெளிச்சம். முனியம்மா பல வருஷங்கள் தனியாக கஷ்டப்பட்டு கடைசியாக சாந்தியிடம் வந்து சேர்ந்தாள். இப்பொழுதுதான் அவள் வாழ்க்கை சீராகத் தொடங்கியது.
எப்படி இவளால் எல்லாக் கவலைகளையும் மறந்து இப்படி சந்தோஷமாக பாட முடிகிறது என்று சாந்திக்கு ஒரே ஆச்சரியம். வேறு யாராக இருந்தால் இத்தனை கஷ்டங்களை தாங்க முடியாமல் மனம் ஒடிந்து நிதானத்தையே இழந்திருப்பார்கள். சாந்தி தன்னையே யோசித்து பார்த்தாள். அன்பான வசதியான தாய்தந்தையர், நல்ல படிப்பு, அழகான நல்ல வேலையிலுள்ள கணவன், அருமையான இரு குழந்தைகள், பெரிய வீடு, தனக்கென தனி கார் எல்லாம் இருந்தும் சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கு, குறைகளுக்கு சலிப்பும் கோபமும் அடிக்கடி வருகிறது. ராகவன் அவளை ஏன் இப்படி எப்பொழுதும் சிடுசிடுப்பாய் இருக்கிறாய் என கடிந்து கொள்வான். ஆனால் வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் காணாத இந்த முனியம்மாவால் எப்படி இவ்வளவு விவேகமாய் எல்லாவற்றையும் மறந்து குயிலைப்போல பாட முடிகிறது. சாந்தி அவள் முகத்தையே விந்தையாக பார்த்தவண்ணம் இருந்தாள்.
“ஏன்ன அம்மா அப்படியே உற்று பார்த்துண்டு இருக்கே? ஏதாவது யோசனையா?” என்றாள்
“ஒன்னுமில்லை. நீ அடிக்கடி இப்படி பாடுவாயா?”
பாடுவேனே. மனம் சந்தோஷமாக இருந்தால் பாடுவேன். உன்னோட வீட்டுக்கு வந்ததிலிருந்து எனக்கு ஒரே சந்தோஷம்தான்,”
“அட அப்படி என்ன சந்தோஷம் இங்கே?” என பிரமிப்புடன் கேட்டாள்.
“என் வாழ்க்கையில் பார்த்து அறியாத அன்பை இங்கதான் முதல் தடவையாக பார்க்கிறேன். என்னை உன்னோட வீட்டு மனுஷியாக நடத்தறே. நான் கட்டிலை கண்டேனா ஃபேனை கண்டேனா, சூடான சாப்பாடை பார்த்து இருக்கேனா. ஒரு பொண்ணு அம்மாவை எப்படி ஆசையா பார்த்துக்கோமோ அப்படி பார்த்துக்கறே. பழைய துணியையே கட்டின எனக்கு புதுப்புது சேலையா வாங்கி கொடுக்கறே. என்னை வேலைக்காரியா நடத்தலை. உன்னோட பசங்க இரண்டும் எங்கிட்ட பாசமா இருக்குங்க. உன்னோட புருஷன் உங்கிட்ட அன்பாய். பார்த்து வசதியெல்லாம் பண்ணி கொடுக்கராரு. இந்த மாதிரி அன்பும் பாசமும் இல்லாத என் வாழ்க்கை இத்தனை வருஷங்கள் பாலைவனமாகி போச்சு. இங்க உங்கிட்ட வந்த பிறகுதான் பசுஞ்சோலையாக மாறியது. எனக்கு வேற என்ன தேவை நீயே சொல்லு,” என்றாள்.
கண் கொட்டாமல் அவளையே பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்த சாந்திக்கு சட்டென்று ஞானோதயம் ஏற்பட்டது. அல்ப விஷயங்களுக்கெல்லாம் அலுத்துகொள்கிற தன் சுபாவம் எப்படி வாழ்க்கையை கெடுக்கிறது என புரிந்தது. சந்தோஷம் என்பது சின்ன துன்பங்களிலேயே மனதை உழல விடாமல், கடவுளின் அருளால் கிடைத்த நன்மைகளுக்கு நன்றி செலுத்துவதில் தான் உள்ளது என புரிந்தது.
“சரி, ஒரு பாட்டு எனக்காக பாடேன்,” என்று தரையில் உட்கார்ந்தாள். குழந்தைகளும் கும்மாளத்துடன் குதித்து அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தன. முனியம்மாவும் குதூகலத்துடன் பாட ஆரம்பித்தாள்.
ஆராரோ ஆரிரரோ
ஆராடிச்சா என் கண்ணே
அடிச்சாரைச் சொல்லி அழு
அவராதம் போட்டிருவோம்
மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டாலே
அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலேFriday, April 28, 2017

ஆதியின் நம்பிக்கை

சூரியனே உதிக்க தாமதமானலும், இடியும் மின்னலும் சேர்ந்து கன மழையும் பொழிந்தாலும் காலை 6 மணிக்கு சற்றும் பிசகாமல். டிங் டாங், டிங் டாங், டிங் டாங், டிங் டாங் என்று கணீரென்றுபெருமாள் கோவில் மணியை ஆதி அடிப்பது தவறாது. அந்த மணி ஓசையின் சுனாதத்தில் திளைந்து கக்சிதமாக ஒரே கதியில் சற்றும் பிசறாது அபஸ்வரம் தட்டாமல் நீண்ட நேரம் அவன் அடிப்பதை கேட்பது ஒரு சுகமான அனுபவம். கூர்ந்து கேட்பவர்களுக்கு அதில் உள்ள அந்த ஓம் என்கிற தைய்வீக ஓசை மனதை சில க்ஷணமாவது இறைவன் பால் திருப்பும். ஆதிக்கு அது தொழிலாக இருந்தாலும், அவன் அதை பெருமாளுக்கு செய்யும் ஒரு கைங்கர்யமாகவே கருதினான். அந்த கோவில் மணியை இறைவன் கைகளில் இருக்கும் சங்கு சக்கரம் கதைக்கு ஈடாக தொழுதான்.
ஆதி சிறுவனாக இருந்த போது அவன் அப்பாவின் கூட மணி அடிக்க தொடங்கி அவரின் மறைவுக்கு பிறகும் அதையே செய்து கொண்டிருந்தான். மணி அடிக்காத நேரங்களில் கோவில் வாசற்காப்போனாக வேறு அவதாரம். மாத சம்பளம் குறைவு. 24 மணி நேரமும் கோவிலிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தத்தால் ஒரு சிறிய வீடு கோவில் வளாகத்திலேயே கொடுத்து இருந்தார்கள். மதியம் கோவில் ப்ரசாதம் கிடைக்கும். ஆனால் அது அவனுக்குதான் போதும். மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு போறாது. கஷ்ட ஜீவனம் தான். மனைவிக்கு தன் கணவனுக்கு அர்ச்சகர்கள் போல கோவிலுக்கும் வரும் ஜனங்களிடம் பணம் வசூல் பண்ண சாமர்த்தியம் இல்லையே என ஒரு ஆதங்கம். அதை சொல்லவும் செய்வாள். அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
இந்த ஊர் ஒரு பெரிய நகரமும் இல்லை, சிறிய கிராமமுமில்லை. இந்த கோவிலை விட்டால் வேறு கோவில் அருகில் கிடையாது. ரொம்ப பெரிய கோவிலுமில்லை. சீனுவாச பெருமாள் தான் மூலவர். பக்தர்களை கட்டி ஈற்கும் அளவு ரொம்ப அழகு. தவிர இந்த பெருமாளுக்கு ஒரு கியாதி உண்டு. தீராத வியாதிகளையும், ப்ரச்னைகளையும் பக்தியுடன் வேண்டிகொண்டால் இந்த வரப்ரசாதியால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. ஆகையால் பக்தர்களின் கூட்டம் எப்போதுமிருக்கும்.
ஆதிக்கோ பெருமாளை விட மணியிடம் தான் ஒரு சுவாதீனம். தன் கஷ்டங்களை இரவில் அருகில் யாருமில்லாத போது மணியிடம் முறை இடுவான். சில சமயம் பேசவும், கோபித்து கொள்ளவும் செய்வான். மணியிடமிருந்து ஒரு பதிலும் வராது. இருப்பினும் ஆதியின் மனம் லேசாகிவிடும்.
“குழந்தைங்க பள்ளிகூடத்தில இந்த வார கடைசிக்குள்ள பீஸ் கட்டாவிட்டால், ஸ்கூலை விட்டு அனுப்பிவிடுவாங்களாம். மணி அடிச்சுகிட்டிருந்தா பைசா வராது. ஏதாவது வழி பண்ணுங்க” என்றாள் ஆதியின் மனைவி குமுதா.
“யாரை கேட்பது என்று தெரியல. ஆனால் ஒன்னு நிச்சயமாக தெரியும். அது யாரை கேட்டாலும் கொடுக்கமாட்டாங்கன்னு. நாளையிலிருந்து மூன்று நாள்கள் உற்சவம். அது முடிந்தவுடன் ஏதாவது வழி பண்ணுகிறேன். கவலைப்படாதே. ஒன்னும் சரியாக வரலை என்றால் என்னோட மணி இருக்கவே இருக்காரே. அவர் பெருமாள் கிட்ட சொல்லி வழி பண்ணுவார். நாற்பது வருஷமா கைங்கர்யம் பண்ணிகொண்டு இருக்கேனே, என்னை கை விடமாட்டார்,” என்று திட நம்பிக்கையுடன் கூறினான் குமுதா ஒரு எகத்தாளத்துடன் கழுத்தை திருப்பி தோளில் இடித்துகொண்டே உள்ளே சென்றாள்.
அன்றிரவு ஆதி கோவில் வாசலில் மணியின் கீழே தூக்கம் வராமல் படுத்து இருக்கையில் துக்கம் பீறிட அந்த பெரிய மணியை பார்த்து முறையிடலானான்
“நாற்பது வருஷமா இந்த கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்கேனே, உன்னை விட்டால் எனக்கு வேறு யார் கதி? ஒரு நாள் விடுமுறை எடுத்து இருக்கேனா? ஜுரமோ வலியோ கை வலிக்க எல்லா நாளும் அடிக்கறேனா இல்லையா? என்னோட கஷ்டம் உனக்கு புரியலையா? நீ தான் என்னோட தைய்வம். அந்த பெருமாள் கிட்ட கூட நான் சொல்றது இல்லை. குழந்தைங்க பீஸ் கட்டியாகணும். நீதான் பெருமாள் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணணும்,” என புலம்பி கொண்டே தூங்கி விட்டான்.
மறு நாள் உற்சவம். மாவிலை தோரணமும் மேளமும்அதுவுமாக கோவில் வாசல் களை கட்டி இருந்தது. ஜனங்களும் சாரி சாரியாக வர ஆரம்பித்து விட்டனர். தங்க வண்ணத்தில் மின்னி கொண்டிருந்த த்விஜ ஸ்தம்பத்தின் கீழேவிழுந்து சேவித்து கோபுரத்தின் உச்சியை பார்த்து கொண்டும், ஆதி கோவில் மணியை அடிக்கற லாகவத்தையும் குழந்தைகள் சூழ ரசித்து கொண்டும் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
அந்த சமயம் ஆதியின் அருகில் ஒரு குட்டையான பெருத்த இடையுடன் சிறுத்த சூம்பின தலையுடன் வயது நிர்ணயிக்க முடியாத ஒரு விசித்திரமான ஆள் மற்றவர்களுடன் ஆதி மணி அடிப்பதை ரசித்து கொண்டிருந்தான். எல்லோரும் அவனையும் ஆதியையும் சேர்த்து பார்க்கலாயினர். ஆதியோ பக்கத்தில் நடப்பது எதுவும் அறியாமல் மணி அடிப்பதிலேயே திளைத்து இருந்தான். திடீரென்று அந்த ஆள் கோவில் மணிக்கு கீழே உள்ள ஒரு பென்ச்சின் மேல் ஒரு பித்தளை செம்பை வைத்து அதில் ஒரு பத்து ரூபாய் நாணயத்தை கணீரென்று சப்தத்தோடு போட்டான். அதை பக்கத்தில் உள்ளவர்களும், த்விஜஸ்தம்பத்தினருகில் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துபவர்களும் கேட்டு தாங்களும் அந்த பாத்திரத்தில் காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் போடத்தொடங்கினர். மாலையில் கணிசமான அளவு சேர்ந்து இருந்தது.
மாலையில் இவ்வளவு பணத்தை பார்த்ததும் இதை யாரை சேர்ந்தது என்கிற குழப்பத்தில் தலைமை அர்ச்சகரிடம் சென்றான். அவருக்கு ஆதியின் தொழிலில் உள்ள நேர்மையும், பண பற்றாகுறையும் நன்கு தெரியும்.
“ஆதி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். தட்டில் போடுவதை அர்ச்சகர்களாகிய நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதே மாதிரி உன்னருகில் உள்ள பாத்திரத்தில் போடும் பணம் உன்னை சேர்ந்தது. கவலைப்படாமல் நீயே எடுத்து கொள்,” என்றார்
அடுத்த இரண்டு நாட்களும் அந்த விசித்திரமான ஆள் வந்து அதே போல் காசை போட்டு மற்றவர்களையும் ஆதி பால் ஈர்த்தான். குமுதாவிற்கு ஒரே சந்தோஷம். ஆதிக்கும் கஷ்டம் ஓரளவு தீர்ந்ததே என்பதில் திருப்தி.
உற்சவத்தின் கடைசி நாள். ஆதி அந்த ஆளை பார்த்தவுடன் அருகில் சென்று கைகளை கூப்பி வணங்கி,” அய்யா, நான் வருஷ கணக்காக இங்கு வேலை செய்கிறேன். இதுவரை உங்களை பார்த்தது இல்லை. எதற்காக என்னிடம் இந்த கருணையை காண்பித்து உங்களுடைய பாத்திரத்தை வைத்து பணத்தையும் போட்டு மற்றவர்களையும் போட வைத்தீர்கள்?” என தாழ்மையுடன் வினவினான்
“உங்கள் நம்பிக்கை வீண் போகக்கூடாதென்று தான்,” என சொல்லி சிரித்தார்.
“என் நம்பிக்கையா? யார் பேரில் என்று எப்படி உங்களுக்கு தெரியும். நீங்க எந்த ஊர்? இந்த மூன்று நாட்களாகத்தான் உங்களை பார்த்தது,” என்றான் ஆதி
கணீரென்று சிரித்தபடியே” எனக்கு தெரியும். நானும் உன்னைப்போலவே இதே ஊரில் வருஷ கணக்காக வாசம். உன்னை எனக்கு நன்றாக தெரியும்,” என சொல்லி வேகமாக கூட்டத்தில் மறைந்து விட்டார்.
அன்றிரவு ஆதி குமுதாவிடம்,” எனக்கு இந்த ஆள் யாரென்று நன்றாக தெரிந்து போச்சு. மாறு வேஷத்தில் என் கஷ்டத்தை தீர்க்க வந்த என் அப்பன், கண்கண்ட தைய்வம் தெய்வீக மணிதான்,” என பரவசத்துடன் சொன்னான். குமுதாவின் நக்கலான சிரிப்பில் அவள் அதை ஏற்று கொண்டாளா இல்லையா என்று தெரியவில்லை.
.


Tuesday, April 25, 2017

நிழலாடிய நிஜம்

மாலை ஏழு மணி இருக்கும். லேசாக தூறிகொண்டும் இருக்கிறது. தெருவில் ஜன நடமாட்டம் இல்லாமல் விரிச்சோடிருந்தது. தெரு விளக்குகளும் சூரியகுஞ்சாக மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அதில் சில விளக்கு கம்பங்கள் மாத கணக்கில் எரியவில்லை. நல்ல வேளை என் வீட்டு வாசலில் உள்ள விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  நான் இருக்குமிடம் ஊருக்கு சற்று ஒதுப்புரமாக உள்ளது. பரவியிருந்த நிசப்தம் சொல்ல தெரியாத மனக்கிலேசத்தை உண்டாக்கியது. நான் வீட்டில் தனியாக வரவேற்பறையில் விளக்கை போடாமல் டி வி பார்த்துகொண்டு இருந்தேன். அம்மா அப்பா பக்கத்து ஊரில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தார்கள். வர இரண்டு நாட்கள் ஆகும். நான் யார் என்று சொல்ல மறந்து விட்டேனே, என். பெயர் கோகிலா, வயது இருபது காலேஜில் கடைசி வருஷம்.
தெருவில் திடீரென்று வேகமாக வந்துகொண்டிருந்த ஏதோ ஒரு காரின் டயர்கள் தரையை தேய்த்துகொண்டு க்ரீச்சென்ற சப்தத்துடன் நின்றது. சட்டென்று முன்பக்கமுள்ள அறைக்கு விரைந்து விளக்கை போடாமல் ஜன்னல் திரையை லேசாக தள்ளி பார்த்தேன்.ஒரு பெரிய கார்,,ஸ்கார்பியோவோ என்னவோ, ஒரு சின்ன மாருதி காரின் முன் வந்து  வழிமறித்து நின்றது.மாருதி காரின் ட்ரைவரை வெளியே இழுத்து நான்கு ஆட்கள் சரமாரியாக சவுக்கு கட்டையாலும் அரிவாளாலும் சைக்கிள் சையினாலும் தாக்க தொடங்கினார்கள்.தப்பிக்க முடியாமல் கூக்குரலிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை.எல்லோர் வீட்டு கதவுகளும் மூடியே இருந்தன...அவர்களை கெஞ்சி கொண்டு இருந்தபோதிலும்,அந்த குண்டர்கள்  அவனை வெறி பிடித்தாற்போல் இன்னும் பலமாக தாக்கி அவனை குற்றுயிரும்கொலையுயிருமாக கீழே ரத்த வெள்ளத்தில் விட்டுவிட்டு சற்று நேரம் அவன் உடல் அசைவுகள் நிற்கும் வரை காத்திருந்தனர்.பிறகு சுற்றுமுறறும் யாரும் பார்க்கவிலலை என நிச்சயித்த பின்னர் காரில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.ஒரு விளக்கு கம்பத்தின் கீழே இந்த அட்டூழியம் நடந்ததால் என்னால்  ந்ன்றாக பார்க்க முடிந்தது.சில வீடுகளில் விளக்கு எரிந்தும் யாரும் வெளியில் வரவில்லை. வெளியே வர பயம்தான் காஈணமாக இருக்கலாம்
வெளிச்சம் சற்று குறைவாக இருந்த போதிலும் அடியாட்கள் உள்ளூர் வாலிபர்கள் மாதிரி இருந்தது. தலையை சிகப்பு துணியால் மூடி   இருந்தனர். காரில் ஏறும்போது விளக்கு வெளிச்சத்தில் அவர்களின் கொடூர முகங்களை என்னால் ஒரு க்ஷணம் பார்க்க முடிந்தது.
சின்ன பெண்ணாக இருப்பதால் உடனே வெளியில் வந்து அந்த ட்ரைவரை பார்க்க இயலவில்லை. அச்ச்த்தாலும் மிருகத்தனமான் தாக்குதலாலும் ஒரே ஆடிப்போய் நெஞ்சம் படபடத்தது. சில தெரு நாய்கள் அடிபட்ட ஆளை சுற்றி குரைத்து கொண்டிருந்தன. வெகு நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராக வீடுகளிலிருந்து வெளியே வரத்தொடங்கினர். யாரோ போன் போட்டதாலோ என்னவோ சற்று நேரத்தில் போலீஸ் வண்டி ஒரு ஆம்புலன்ஸ் பின் தொடர வந்தது. உடலை வண்டியில் ஏற்றிய பிறகு எதையோ அளந்து கொண்டும் சாக்கு பீஸால் கோடுகள் போட்டவண்ணம் இருந்தனர். போலீஸார் சூழ்ந்துள்ளவர்களை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்க தொடங்கினர். சிலர் நழுவ தொடங்கினர். மாட்டிகொண்டவர்கள் தங்களுக்கு டிவி சப்தத்தில் ஒன்றும் காதில் விழவில்லையென்றும் நாய்கள் குரைத்த பிறகு தான் எட்டி பார்த்ததாகவும் ஒரே மாதிரி சொன்னார்கள். வீணாக வம்பில் மாட்டி கொண்டு போலீஸுக்கும் கோர்ட்டிற்கும் அலைய வேண்டாமே என்கிற முன் ஜாக்கிரதை தான் காரணமாக இருக்கலாம்.
 மறு நாள் எல்லா பத்திரிகைகளிலும் கொட்டை கொட்டையாக இந்த கொலை பற்றி சைய்தி வந்தது. ஒரு வாரம் ஆன பின்னரும் எந்த தடயங்களும் கிடைககாததால் கேஸில் ஒரு முன்னேற்றமுமில்லை. பழைய விரோதமோ, கொடுக்கல் வாங்கல் ப்ரச்னையோ கூலிப்படையின் கொலைக்கு காரணம் தெரியவில்லை.
கிடப்பில்போட்டுவிட்டார்களோ என எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் ஒரே ஒரு லாபம். தெரு விளக்குகள் எல்லாம் எரிய ஆரம்பித்து விட்டன.
ஒரு வாரம் கழித்து ஒரு ஞாயிறு மாலையில் நான் தனியாக வீட்டில் வரவேற்பறையில் டி வி பார்த்து கொண்டிருந்தேன், வாசல் வராண்டாவில் ஏதோ நிழலாடியது போல தோன்றியது. ஜன்னல் திரையை விலக்கி பார்த்ததில் ஒரு முப்பது வயதுள்ள சற்று குள்ளமான ஆண் கூர்மையான மூக்குடன் கமல் உடல்வாகுடன் அங்கு நிற்கிற மாதிரி தெரிந்தது. யூனிபார்ம் மாதிரி வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சொககாயும் அணிந்த உருவத்தின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த உருவம் ஏதோ சொல்ல தெரியாத விசித்திரமாக பட்டது, ஏன்னவென்று சரியாக அனுமானிக்க முடியவில்லை.
“யாரு நீங்க, என்ன வேண்டும்?” என வினவினேன் கதவை திறக்காமல்.
“உங்களுக்கு என்னை தெரியாது. ஆனால் உங்கள் சின்ன உதவி அவசரமாக தேவை,” என சற்றே கீச்சு குரலில் கேட்டான். புரிவதற்கு சற்று கடினமாக இருந்தது.
“ஏன்ன உதவி?”
“ஒரு வாரம் முன்னால் இங்கு நடந்த கொலை பற்றி சின்ன தகவல் தருகிறேன் தயவு செய்து போலீஸுக்கு அதை தர இயலுமா? அதை வைத்துகொண்டு அவர்களால் குற்றவாளிகளை உடனேயே எளிதில் கைது செய்யமுடியும்.”
“நீங்களே அந்த தகவலை அவர்களிடம் கொடுப்பது தானே. நீங்க யாருன்னு சொல்லலியே”
“இரண்டு காரணங்கள் உண்டு. நான் சொன்னால் எடுபடாது. தவிர என்னால் அங்கு போகும் நிலையில் நான் இல்லை. நீங்களே போக அவசியமில்லை. யாரென்று சொல்லிகொள்ளாமல் கூட தகவலை சேர்ப்பித்தால் போதுமானது. அந்த குண்டர்கள் தப்பிக்க கூடாது.” என்றான் ஆத்திரத்துடன்.
“நான் சொல்வேனென்று நிச்சயமாக கூற முடியாது. தகவலை பொறுத்தது. இஷ்டமிருந்தால் சொல்லுங்க” என்றேன்.
“சரி நான் அவங்க யார்யாரென்று சொல்றேன். இது உண்மை. மறக்காம போலீஸிடம் சொல்லிடுங்க. கவனமாக கேளுங்க” என நான்கு குண்டர்களின் பெயர்களையும், தங்கும் விவரங்களையும், அவர்களின் வேலை பற்றியும் கூறினான்.
“கொஞ்சம் இருங்க. காகிதத்திலே எழுதிக்கறேன்” என்று சொல்லி உள்ளே ஓடினேன். ஒரு நிமிஷத்தில வந்து பார்த்தால் ஆளை காணவில்லை. நல்ல வேளை ஒரு ஆள் விலாசம், ஒரு ஆள் வேலை தவிர. ஒன்றையும் மறக்கவில்லை. ஏழுதி வைத்துகொணடேன்.
அடுத்த நாள் அப்பாவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்தேன். என்னிடம் சில முக்கிய தகவல்கள் உள்ளன என்றும் அதை பரிமாறிக்க என்னுடைய பெயர் வெளியே வரக்கூடாது என்றும், நான் சாக்ஷியாக வர இயலாது என்றும் அதற்கு ஒப்புகொண்டால் தகவல்களை கூறுவதாக சொன்னேன்.
இன்ஸ்பெக்டர் சரியென்று சொல்லவே என்னை வந்து பார்த்த ஆள் பறறியும், அவன் கூறின விஷயங்களையும் சொனனேன்.
இன்ஸ்பெக்டர் அந்த ஆளை பற்றி விரிவாக விவரிக்கும்படியாக கேட்டுகொண்டார். முக்கியமாக உயரம், வயது, குரல், வேறு ஏதாவது வித்தியாசமாக பட்டிருந்தால் அதையும் சொல்ல சொன்னார்.
ஏல்லவரற்றையும் சொல்லிவிட்டு, அவன் கூர்மையான மூக்கை பற்றி சொன்னேன். அசப்பில் கமலை போல உடல் வாகு என்பதையும் கூறினேன். ஆனால் அந்த ஆள் அவ்வளவு பளிச்சென்று தெரியலை ஏதோ மங்கலாக சோகையாக தென் பட்டான் என்பதையும் தெரியப்படுத்தினேன்.
“இதை பாருங்க. இந்த ஆளை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா? நிதானமாக பார்த்து சொல்லுங்க,” என சொல்லி மேஜை ட்ராயர்லேந்து ஒரு போட்டோவை கொடுத்தார்.
அதை பார்த்தவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படியே நாற்காலியிலேந்து எழுந்து” இதே ஆள் தான் தகவல்களை கொடுத்தான். உங்களுக்கு எப்படி இவனை தெரியும்?” என ஆக்சரியத்துடன் கேட்டேன்.
மெலிதாக ஒரு சிரிப்புடன் “ஓரு சின்ன ஷாக்கு உங்களுக்கு தரப்போகிறேன். ஒரு தரம் மூச்சை இழுத்து விடுங்க” என்றார்.
“இந்த ஆள்தான் கொலை செய்யபட்ட நபர். நீங்க சொன்னது நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும், நான் இதை வைத்துகொண்டு துப்பு துலக்க போகிறேன். மேல உயர் அதிகாரிகளுக்கு சொன்னால் சிரிப்பாங்க. எனக்கு உங்க பேரில பொய் சொல்லமாட்டீங்க என முழு நம்பிக்கை இருக்கு. கவலைப்படாதீங்க. இது ரகசியமாகவே இருக்கும்,” என்றார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் கொட்டை கொட்டையாக எப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரித வேகத்துடனும், சாமர்த்தியமாகவும் செயலாற்றி ஒரு தடயமும் இல்லாத இந்த கொலையை செய்த ரவுடிகளை பத்தே நாட்களில் கண்டு பிடித்து உள்ளே தள்ளினார் என்கிற விவரம் விலாவாரியாக வந்திருந்தது. குற்ற்வாளிகளே விசாரணையின் போது குற்றத்தை ஒப்புகொண்டுவிட்டது இன்ஸ்பெக்டருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.
என் அம்மா எனக்கு த்ருஷ்டி கழித்து போட்டது ஒரு சின்ன உபரி விஷயம்.

Wednesday, April 19, 2017

பார்வையின் நிறங்கள்

பார்த்தவுடனேயே கண்களை கட்டி இழுக்கும் அந்த அழகான அபார்ட்மென்ட்ஸ் திருவான்மியூரை  தாண்டி சமுத்ர கரைக்கு வெகு அருகில்  இருக்கிறது.கிட்டதட்ட  100 அபார்ட்மென்ட்ஸ் இருக்கும்.சுற்றிலும் நடை பாதையும் நடுவில் புல்வெளியும்அதற்கு அழகூட்டின.ஒரு மூலையில் சின்ன பிள்ளையார் கோவில் வேறு..கேட் வாசலில் நேபாளி தர்வான்கள்..மாலையில் குளிர்ந்த காற்றும் இரவின் நிசப்தத்தில் அலையோசையும்  அந்த இடத்தின் சிறப்பு அம்சங்கள்.
சாதரணமாக இந்த மாதிரி அபார்ட்மென்ட்ஸ்களில்,ஒற்றுமை குறைவாகவும்.வம்பும் சக்சரவும் அதிகம் இருக்கும்.எல்லாவற்றிலும் போட்டியும் விதண்டா வாதமும் தான் மேலோங்கி இருக்கும். ஆனால் சமுத்ராவிலோ பெண்மணிகளுக்குள்  ஒரே பரஸ்பர நட்பும் அன்யோன்னியமும் தான்.வேலைக்கு போகும் சிலரை தவிர மற்றவர்கள் அனேகமாக எல்லா  வார நாட்களிலும்  பிற்பகல் கூடி பேசுவார்கள்.குழந்தைகள், ஸ்கூல்,அளவுக்குமீறிய ஹோம்வொர்க் ப்ரச்னை,டீச்சர்களின் பாரபக்ஷத்துடன் கூடிய கெடுபிடி, தவிர அஸ்ஸோஷியனின் மெத்தனம் என்று பலதரபட்ட விஷயங்கள் அலசப்படும்.பிள்ளையார் சதுர்த்தி விமரிசையாக  கொண்டாடப்படும்.ஓரொரு தடவை கிட்டி பார்ட்டியும் உண்டு.ப்ரவீணா ஒரு பஞ்சாபி.மிக நன்றாக பாடுவாள்.குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு எடுக்கிறாள்..சுஜாதா ராவ் கேக் வகுப்பு எடுப்பாள்.அமிர்தம் மாமி ரங்கோலி போட சொல்லித்தருவாள்.வனிதா ஜேம்ஸ் ஆங்கிலம் வகுப்பு எடுப்பாள்.இப்படி பல தர பட்ட வகையில் நெருக்கமாக இருந்தார்கள்.
சகுந்தலா மாமிதான் இவர்களுக்கு தலைவி போல. உயரமா தாட்டியான உடல் வாகுடன்.வெளுப்பாக  நெற்றியில் பெரிய குங்கும பொட்டுடன் கம்பீரமாக இருப்பாள் உரக்க அதட்டுவது போல இருக்கும் அவள் குரல்.நிறைய விஷயங்கள் தெரியும்.மாமியின் கணவர் புஜங்க ராவ்  வக்கீல்.கக்சலாக மாமியைவிட உயரம் குறைவு.மெள்ள பேசுவார்.சட்ட நுணுக்கங்களை கரைத்து குடித்தவர் அவரை பேக்சில் ஜெயிக்க முடியாது. அவர்தான் ஆரம்பத்திலிருந்தே ப்ரெசிடென்ட்.அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.மாமியின் பேக்சுக்கு மறு பேக்சு கிடையாது.எல்லோருக்கும் புஜங்க ராவையும் சேர்த்து அவளிடம் ஒரு பயம் கலந்த மரியாதை.
சமீப காலம் வரை முக்கியமாக மல்லிகா A ப்ளாக்கில் முதல் மாடியில்  குடி வரும்வரை பெரிய ப்ரச்னை இல்லாமல் நாட்கள்  ஓடிகொணடிருந்தது.இத்தனைக்கும் மல்லிகா தன் வீட்டிற்கு வருவதும் போவதும் யாருக்கும் அதிகமாக தெரியாது. முப்பத்தைந்து வயது மேல் இராது.உயரமாக பார்க்க லக்ஷணமாகவும் வசீகரமாகவும் இருப்பாள்.கண்களின் கோடியில் ஒரு இழை புன்முறுவல் அவளை எல்லோரையும் திரும்பி பார்க்க தூண்டும். மாலை வேளையில் அபார்ட்மென்ட்டை சுற்றி நடக்கும் போது ஆண்களிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டே இருப்பாள்.இவர்களும் அவள் பின்னாடியே அசட்டு சிரிப்புடன் குழைந்து கொண்டு போவார்கள். ஆனால் பெண்களிடம் ஒதுங்கியே இருப்பாள் உதாசீனகூட படுத்துகிறாளோ என ஒரு எண்ணம். மற்ற பெண்மணிகளுக்கு காரணம் தெரியாமலேயே அவள் மேல் சற்று வெறுப்பும் சந்தேகமும் இருந்தன..அவள் எங்கு வேலை செய்கிறாள்,கணவர் யார்,குழந்தைகள் உண்டா இல்லையா என்று எல்லாம் ஒரு மூடுமந்திரமாகவே இருந்தது.
இந்த சூழ்நிலையில் தர்வான் ஒருவன் ப்ரவீணாவிடம் ஹிந்தியில் யாரோ முன்பின் தெரியாத ஆண்கள் இரவில் மல்லிகாவின் வீட்டிற்கு தினம் வருவதும் அங்கேயே இரவு தங்குவதும் பற்றி சொல்லி இருக்கிறான்.அது காட்டு தீயாக பரவி பெண்களுக்கு ஒரு அக்சத்தை  உண்டாக்கியது.
“நீங்கதான் உங்க கணவரிடம் சொல்லி இதற்கு ஏதாவது வழி பண்ணனும் ,”என எல்லா பெண்களும்  சகுந்தலா மாமியிடம் கேட்டு கொண்டார்கள்.
 “இன்று இரவே ஏன் கணவரிடம் பேசி இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கிறேன்” என்று  அவர்களின் பயத்தை நீக்கினாள்.
அன்று இரவு இதை  ப்ரஸ்த்தாபித்த பொழுது புஜங்க ராவ்  மல்லிகாவை வெளியேற்ற அனுமதிக்கவில்லை.அவளால் யாருக்கும் ஒரு தொந்திரவு இலலாத போது ஒரு தர்வானின் வம்பு பேச்சை கேட்டு கொண்டு அவளை அப்புறபடுத்துவது நியாயம் இல்லை என திட்டவட்டமாய் கூறி விட்டார். மல்லிகாவின் கூட அவள் கணவன் இருக்கானா இல்லையா பற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்றும் .இங்கு அவளால் யாராவது பாதிக்க பட்டால் மட்டும் சொல்லட்டும் என்றார். மேலும் குறும்புத்தனமாக பெண்களுக்கு மற்றவர் யாராவது சற்று அழகாக இருந்து விட்டால் பொறுப்பதில்லையே என்று சொல்லி சிரித்தார்.
மறு நாள் சகுந்தலா தன் கணவர் சொன்னதை அப்படியே கூறி தானும் அவருடன் ஒத்து போவதாகவும் சொன்னாள்.”வீண் சந்தேகத்தின் பேரில் வெளியேற்றம் செய்வது சரி இல்லை.நாம்தான் நம் கணவர்களின் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.நீங்க தான் உங்க கணவரின் கண்கள் அலையாத மாதிரி பார்த்து கொள்ளனும்.என் கணவரின் பேரில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு.அவர் ராமரை போல ஒரு ஏக பத்னிவ்ரதன்”என்று பெருமையாக சொன்னாள்.
மாமியின் பதில் த்ருப்தி அளிக்காததால், அவர்கள் தங்கள் கணவர்களிடம் முறையீட்டதில் ஒரு பயனுமில்லை. அபார்ட்மென்ட்ஸ்ல ஒருத்தி அழகாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே என்று கேலி பண்ணார்கள்.இது மேலும் சலிப்பூட்டியது.மல்லிகாவும் ஒரு இடைஞ்சலுமில்லாமல் தான் உண்டு தன்  வேலை உண்டு என இருந்தாள்.
ஒரு மாதம் பிறகு சகுந்தலா மாமி கோயமுத்தூருக்கு ஒரு கல்யாணத்திற்கு ஒரு வாரம் போயிருந்தாள்.கணவர் புஜங்க ராவ் வேலை நிமித்தமாக போகவில்லை.மாமி இல்லாமல் பகல் கூட்டத்தில் உற்சாகமில்லை.நாளை காலை வரணும் என்று ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் அன்றிரவே ஒரு மணி அளவில் அபார்ட்மென்ட்ஸ்க்குள் ஒரு ஆம்புலன்ஸ் உரக்க சைரன் சப்தத்துடன் நுழைந்தது. A ப்ளாக்கின் முன்னால் நின்றது.யாருக்கு என்ன உடம்போ என்கிற கவலையில் பல ஜன்னல்கல் வழியே பல கண்கள் இந்த ப்ளாக்கையே  கண்காணித்து கொண்டு இருந்தன.இரண்டு ஆட்கள். ஸ்ட்ரச்சரை எடுத்துகொண்டு முதல் மாடிக்கு விரைந்தனர்.மல்லிகாவின் வீட்டு கதவு சற்று லேசாக திறந்து இருந்தது.அவள் வாயிலில் இறுக்கமான முகத்துடனும்,கவலையுடனும் காணப்படடாள்.
கீழே கூடியிருந்த சிலரிடம் அநத ஆம்புலன்ஸ் ட்ரைவர் மாடியில் யாருக்கோ ஹார்ட் அட்டாக் என்றான்.சில வினாடிகளில் ஸ்ட்ரச்சரைபிடித்தவாறே இரண்டு ஆட்கள் கீழே இறங்கி வந்தனர்.யாராக இருக்கக்கூடும் என்கிற ஆவலினால் உந்தபட்ட சிலர் கழுத்தை தூக்கி பார்த்தனர்.ஜன்னல்கள் வழியே கூட சிலர் நோக்கினர்.கழுத்து வரை வெள்ளை போர்வையால் மூடப்பட்டுள்ள மதிப்புக்குரிய புஜங்க ராவை பார்த்து திடுக்கிட்டனர்.
ஏன், இவர், எதற்கு, இங்கே, இந்த அர்த்த ஜாமத்தில் என பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இரவை தூக்கமிலலாமல் கழித்தனர்.மாமியை நினைத்தால் பாவமாக இருந்தது.

Saturday, April 15, 2017

இன்பக்கனா கண்டேன்

நான் ஒரு சராசரி மனிதன். நாத்திகன் அல்ல.கடவுள் நம்பிக்கை உண்டு.
குளித்தவுடன்விளக்கேற்றி   ஒன்றிரண்டு ச்லோகங்கள்சொல்வதோடுசரி. மறுபடியும் கடவுளை பற்றிய எண்ணம் அடுத்த நாள்தான். கதை காலக்ஷேபத்திற்கு போவது கிடையாது.ஆன்மீகத்தில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.
டில்லியில் என் மனைவியுடன் வாசம். சினிமா,ஹோடட்டல் ,மால் தவிர வேற எங்கும்  போவது இல்லை.
திடீரென்று ஒரு புதன் இரவு கனவில் கடவுள் தோன்றி  “ இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ என்னை சந்திப்பாய்” எனக்கூறி  மறைந்து விட்டார்.கனவில் வந்த பகவான் எந்த ரூபமென்று சரியாக புலப்படவில்லை.ஒருவேளை கிருஷ்ணராகவோ ராமராகவோ இருக்கலாம் என சந்தேகம். நான் ராமயணத்தையோ பாகவதத்தையோ சமீபத்தில் படிக்கவில்லை. ஒவ்வொருவன் கோவிலென்ன குளமென்ன என்று சுற்றுகிறான்.அவங்களை விட்டு விட்டு பின் ஏன் எனக்கு  இந்த கனவு என்கிற குழப்பம்.மனைவியுடன்  இதை  பற்றி மூக்சு விடவில்லை. அவள் ஏதாவது விபரீதமாக அர்த்தம் பண்ணி கொண்டால் என்கிற பயம்தான். கனவை மறந்துவிட்டு என் வேலையில் மூழ்கிவிட்டேன்.
வெள்ளி இரவு மனைவியுடன் டி வி பார்த்துகொண்டு இருந்தேன்.என் நெருங்கிய நண்பன் கந்தசாமியிடமிருந்து ஃபோன்.”நாளை ஆபீஸ் விஷ்யமாக டில்லி வரேன். சன்டே  அன்றைக்கு காரில் ப்ருந்தாவன்  அழைத்துகொண்டு போகமுடியுமா? ரொம்ப நாட்களாக ஆசை. ஆக்ரா, மதுராவெல்லாம் இப்பொழுது வேண்டாம்.அதற்கு நேரமில்லை.”என்றான்.சம்மதத்தை உடனே தெரிவித்தேன்.
மனைவி தான் வரவில்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டாள் .
அங்கே போன பிற்குதான் அங்கு நூற்று கணக்கான க்ருஷ்ணர் கோவில்கள் உள்ளன என்று தெரிந்தது. மேலும் விசாரித்ததில் அங்குள்ள பங்கே பெஹாரி கோவில் தான் ப்ரசித்தம் என்கிற விஷயம் தெரிய வந்தது. அந்த கோவிலொரு குறுகலான சந்துக்குள் 100 மீடர் உள்ளே இருந்தது. இங்கே என்ன விசேஷம் என்றால் விக்ரஹங்களுக்கு  முன்னால் இருக்கும் திரை மற்ற கோவில்கலில் உள்ள மாதிரி எப்பொழுதும்  திறந்து வைக்கப்படுவதில்லை. கொஞ்ச நேர இடைவெளியில் அடிக்கடி திறப்பார்கள்.பகவானின் கண்களின் தீக்ஷண்யம் சிறிது நேரம் பார்த்தாலே மயக்கமடைய செய்யுமாம். இங்கு மணிகளை அடித்தோ சங்கை ஊதியோ ஒலிப்பதில்லை..ஒரே நெரிசலான மூச்சு முட்டும்படியான கூட்டம்.எப்படியோ முண்டியடித்து முன்னேறி ஒருவழியாக தரிசனத்தை முடித்துகொண்டு வெள்யில் வந்தோம்.கந்தசாமிக்கு நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதில்  பரம திருப்தி.
அந்த சமயம் எனக்குள் ஒரு எண்ணம் நிழலோடியது. இந்த தரிசனம் தான் கடவுள் அந்த கனவில் சொன்ன சந்திப்போ என்று. சப்பென்று சற்று ஏமாற்றபட்ட உணர்வு தான் மேலோங்கி இருந்தது. வெய்யிலும் பசியும் சோர்வடைய சைய்தது. .கனவை பற்றி நண்பனிடம் சொல்லவில்லை.
“ஏன்ன ஆக்சு?சுரத்தில்லாம இருக்கே.பசியா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இல்லை.லேசா தலைவலி” என்று சொல்லி சமாளித்தேன்.
அந்த குறுகலான சந்தின் மறு முனையில் காரை நிறுத்தி  இருந்தேன்.மெள்ளதான் நடக்க முடிந்தது.அப்பொழுது என் பின்னால் 60 வயதிருக்கும் தாடி மீசையுடன் கச்சலான உடல் வாகுடன் ஒரு மனிதன் ஹிந்தியில்”ஐயா,ஐயா என கூப்பிட்டு கொண்டே விடாமல்  தொடர்ந்தான்.தானாகவே பின்னால் வருவதை நிறுத்தி விடுவான் என நினைத்து  நான் திரும்பவேயில்லை. விடாமல் மெள்ள கூப்பிட்டு கொண்டே வந்ததால் ஒரு க்ஷணம் திரும்பி பார்த்து”ஓண்ணும் கிடையாது.தொந்திரவு பண்ணாதே,” என கடிந்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டேன்.
 நான் சொன்னதை சிறிதும் லக்ஷியம் பண்ணாமல் அந்த பிக்சைக்காரன் “கொஞ்சம் திரும்பி பார்த்தால் குறைந்தா போய்விடுவாய்.மனதில் ஈரமே இல்லையா?கோவிலில் கடவுளை மாத்திரம் பார்த்தால் போதுமா?” என நச்சரித்து கொண்டே துரத்தி வருவதை விடவில்லை.நானும் விடாப்பிடியாக திரும்பவே இல்லை.
அந்த சந்தின் கோடியை நெருங்கி கொண்டிருந்தோம்.
”ஐயா,ஒரு தடவை நின்று பார்க்ககூட முடியாத அவசரமா? கருணை பக்சாதாபம் இல்லாமல்  கோவிலுக்கு வந்து  என்ன பலன்?”என்று  சொல்லிகொண்டே என்னுடைய சொக்காயை பிடித்து மெள்ள இழுத்தான். என்னுடைய கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது.என்ன தைரியம் இருந்தால் சொக்காயை பிடிப்பான்.
“உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? மரமண்டையா அல்லது திமிரா? உழைத்து சாப்பிடுவதுதானே. உனக்கு செல்லா காசு கூட  கொடுக்க மாட்டேன்.இதற்கு மேலும். என்னை பின் தொடர்ந்தால் நடப்பதே வேறு.போ’ என்று உரக்க கத்தினேன்.மற்றவர்கள் என்னை திரும்பி பார்க்கவே வேகமாக நடந்தேன்.
“உனனோட காசு யாருக்கு வேணும்? மனிதனேயம் இல்லாத உனக்கு கோவில் வருவது ஓன்றும் பலனளிக்காது,”எனக்கூறி ஒதுக்குப்புறமாக நகர்ந்து விட்டான்.
கொஞ்ச தூரம் நடந்த பிறகு திரும்பி பார்த்தேன்.அவனை காணவில்லை.மனதில் ஒரு குற்ற உண்ர்வு.ஏன் இப்படி    ஒரு ஏழையிடம் இத்தனை குரூரமாக நடந்து கொண்டேன் என ஒரு மன உளைச்சல்.அவனை தேடி நூறு ரூபாய் கூட  கொடுக்க தயாராக இருந்தேன்.ஆனால் என் துரதிர்ஷ்டம் அவன் கும்பலில் கரைந்து விட்டான்..என்னுடைய பசி போய்விட்டது.டெல்லி திரும்புகையில் பேசாமல் கண்களை  மூடிகொண்டு அவனை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.
” ஏன் தலை வலி அதிகமாகிவிட்டதா.காபி குடித்தால் சற்று குறையும்” என்றார் என் நண்பர் கந்தசாமி.
“வீட்டிற்கே நேர போய்விடலாம். மனைவி டின்னருக்கு  நமக்காக காத்துகொண்டிருப்பாள்”என்றேன்.
அன்று இரவு மனைவியுடன் தனிமையில் இருக்கும் பொழுது என் கனவை பற்றி சொன்னேன்.அவளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. கனவுகளை பற்றியும் அவைகளின் சாத்தியகூறுகளை பற்றியும் பொதுவாக பேசினதில் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. வெகு சிலதுதான் நடக்கிறது என்பதில் அபிப்ப்ராய பேதம் இல்லை.
ப்ருந்தாவன்கோவில் பயணம் பற்றி கேட்டபொழுது அன்றைக்கு நடந்தது பற்றி விவரமாக சொன்னேன்.நான் அந்த வறியவனிடம் நடந்து கொண்ட கீழ்த்தரமான முறை என்னை எப்படி வாட்டி எடுக்கிறது என்பதை பற்றியும் விவரித்தேன்.
அதை கேட்டவுடன் அவள் சடாரென்று எழுந்து உட்கார்ந்து”உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லையா? உங்களை பின் தொடர்ந்தவர் உங்களை ஒரு தடவையாவது காசு கேட்டரா?திரும்பி பாரேன் என்றுதானே பல தடவை சொல்லி கொண்டிருந்தார்.பிக்சைக்காரனாக இருந்தால் ஒரு  ஆள் பினனாடியே போய் நேரத்தை விரயமாக்குவானா?ஆந்த நேரத்தில் பல பேரை அண்டி பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பான் அல்லவா?,அது உங்களுக்கு விசித்திரமாக படவில்லையா?உங்களை பின்தொடர்ந்தவர் க்ருஷ்ண பகவானே தவிர வேரு யாருமில்லை.அவர் வாக்குறுதியை காப்பாற்றினார்.நீங்கள்தான் பகவான் என்றால் சங்கு சக்ரகதாபாணியாக மஞ்சள் பீதாம்பரத்தில் மாலை மணிகளுடன் வருவார் என எண்ணிக்கொண்டு கோட்டை விட்டு விட்டீர்கள்.வேறு ரூபத்திலும் வரக்கூடும் என உங்களுக்கு தோணவில்லையா?உங்களுக்கு கொடுப்பினை இல்லை.கவலைப்படவேண்டாம். இது ஒரு படிப்பினை.ஏழை எளிய மக்களிடம் கருணையும்,பச்சாதாபமும் காண்பிக்க வேண்டும்.கடவுளுக்கு தன்னை வந்து தரிசனம் செய்வதை விட வசதி இல்லதவர்களுக்கு செய்கிற உதவிதான் உவக்கும்."என்றாள்
அதற்கு பிறகு பல தடவை ப்ருந்தாவனுக்கு சென்ற போது அந்த நபர் என் கண்களில் புலப்படவே இல்லை.ஏமாற்றமாக இருந்தாலும் என்னை முற்றிலும் மாற்றி கொண்டு விட்டேன்

Wednesday, April 12, 2017

தாத்தாவின் ஆசை

சின்ன பார்க். பச்சை பசேல்னு புல் தரையும்,செடிகளும் பூக்களும் பார்க்க அழகாக இருக்கும்.  நடுவில் ஒரு குட்டை.அதை சுற்றி ஒரு நடைபாதை.
எண்பது வயது நெருங்கும்  ராமண்ணா தன எட்டு வயது பேரனுடன் மாலைகளில் வெகு அருகில் இருக்கும் இந்த இடத்திற்கு வருவது வழக்கம்.நிறைய கும்பல் இருக்காது. பேரன் சங்கர் சின்ன சைக்கிள் ஒட்டிண்டு வருவான்.ரொம்ப முன்னாடி தாத்தாவை தனியா விட்டுவிட்டு போகமாட்டான்.யாருக்கு யார் துணைன்னு ஒரு சந்தேகமே வரும்.
"சங்கர்,என்னை எப்பொழுதும்   ஞாபகம் வைத்து கொள்வாயா ?" என ராமண்ணா மூன்றாவது தடவையாக கேட்டவுடன் ,சங்கர் சைக்கிளை   நிறுத்தி காலை தரையில் ஊன்றி “தாத்தா,எப்பொழுது வெளியில் வந்தாலும்  ஏன்  கேட்ட  கேள்வியையே  திருப்பி  திருப்பி  கேக்கறே?உன்னை மறக்கவே மாட்டேன்னு சொல்லி இருக்கேனே" என்று சலிப்புடன் சொன்னான்.
"கோபித்துக்கொள்ளாதே கண்ணா,சும்மாதான் கேட்டேன்.நான் உனக்கு தினம் நிறைய கதைகள் சொல்றேன் ,உம்மாச்சி கதை,தெனாலி ராமன் கதை னு நிறைய சொல்றேனே"  என்பதற்குள் சங்கர் குறுக்கிட்டு " நான் ஒண்ணும் குழந்தை இல்லை. உம்மாச்சிக்கு  பதிலா காட்(god) னு சொல்லு.
" சரி இனி கடவுள் என்றே சொல்றேன் .அது தவிர நீ நன்றாக   படித்து  பெரிய பட்டமெல்லாம் வாங்கணும்னு ஆசை.  பெரிய வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் வாங்கணும். முக்கியமாக ஒரு விஷயம்  சொல்லி இருக்கேன். அதை மறக்க கூடாது," என்றார் ராமண்ணா.
"நான் ஒன்னையும் மறக்கமாட்டேன்.நீ ரகசியமா சொன்ன விஷயத்தை சரியான வேளையில் அம்மாவிடம் கட்டாயமா சொல்லுவேன்.தாத்தா இனிமேல்   இன்னொரு தடவை இப்படி கேட்டால் நான் உன்னோடு பார்க் வரமாட்டேன்" என கோபத்துடன் கூறினான்.
கொஞ்சம் தூரம் நடந்தவுடன் சங்கர்   தாத்தா அருகாமையில் வந்து "தாத்தா ,உனக்கு செத்து போய்டுவேன்னு பயமா?அப்புறம் எல்லாம் ஒரே இருட்டா இருக்குமா.இப்பவே உனக்கு இருட்டுல கண் சரியாக தெரியலையே. டார்ச் எல்லாம் கையில   எடுத்துண்டு போகமுடியாதே?எப்படி சமாளிப்பே.? தாத்தா,நீ செத்தே போகக்கூடாது.என் ப்ரண்டு முருகன் தெரியுமா? அவன் தாத்தா 90 வயதாம்.இன்னும் முறுக்கை பல்லால கடிச்சு சாப்பிடறாராம் .கண்ணாடி இல்லாம தினதந்தி படிப்பாராம்.ஆனால் முருகன் கொஞ்சம் பொய் சொல்லுவான். பயப்படாதே.அவருக்கு  90  என்றால் உனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு." என்றான் குழந்தைத்தனமாக.
ராமண்ணா அவனின் வெகுளித்தனைத்தை கண்டு குலுங்கி குலுங்கி சிரித்தவாறே ," நீ ஐ.ஐ.டீ (IIT) முடிக்கற வரைக்கும் இருப்பேன்.பயப்படாதே "என்றார்.
"இல்லை நீ முன்னாடியே போய்டுவே"
"நான் எப்போ போவேன்னு நீ  நினைக்கறே" என கேட்டார்.
"அடுத்த வருஷம்," என்றான், தான் முருகன் தாத்தாவை பற்றி சொன்னதை முற்றிலும் மறந்தவாறே."
"தாத்தா,எனக்கு பசிக்கறது. ஹோம் வொர்க் பண்ணனும்.வீட்டுக்கு போகலாம்.அதுக்கு முன்னாடி ஒன்னு கேப்பேன் .சரின்னு சொல்லுவியா  உன்னோட லேப்டாப் ஐ எனக்கு இப்போவே கொடுத்துடு.இல்லாட்டா அப்புறம் சரளா எடுத்து கொண்டு  விடுவாள்.
"இப்போ முடியாது.நான் அம்மா கிட்ட சொல்லிவிடுகிறேன்.. சரளாவிற்கு வேற ஏதாவது கொடுக்கிறேன். கொஞ்ச நாட்கள் பொறுத்துக்கோ.பகவான் எப்போ கூப்பிடுகிறாரோ தெரியலை," என்றார்.
"பகவானுக்கு உன்னோட மொபைல் நம்பர் தெரியுமா.நீ அவர்கிட்ட பேசுவியா? : என்றான் வெகுளியாக.
அதற்கு பதில் சொல்லாமல் வா,சீக்கிரமாக வீட்டுக்கு போகலாம்.எனக்கு சற்று முடியவில்லை "என்றார் மாரை பிடித்தபடி.மிக கஷ்டப்பட்டு வீடு வரை வந்தவர் வீட்டு வாசற்படியிலேயே  சாய்ந்து விட்டார். .
"தாத்தா, என்ன பண்ணுகிறது?ஒரேயடியாக வேர்த்து போகிறதே.அம்மாவை கூப்பிடறேன்," என்றான் சங்கர்,காலிங் பெல்லை அழுத்தியவாறே "அம்மா, அம்மா.சீக்கிரம் வா . தாத்தா என்னமோ மாதிரி  இருக்கிறார்,"என்று உரக்க கத்தினான்.
அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அவன் அப்பா,அம்மா காரில் கொண்டு வந்து எமெர்ஜென்சியில்   சேர்த்து விட்டார்கள்.
சில  நிமிஷங்கள் பிறகு ஒரு நர்ஸ்  வந்து"பெரிய மாரடைப்பு ஏற்பட்டிருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் ஒரு மணி நேரம் ஒன்னும் சொல்ல முடியாது.வெயிட் பண்ணுங்க"என  சொல்லி சென்றுவிட்டாள்.
நர்ஸ்கள் மும்முரமாக   அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
சங்கருக்கு அந்த சூழ்நிலையே அச்சத்தை கொடுத்தது."அம்மா தாத்தா செத்து போய்விடுவாரோன்னு பயமாக இருக்கு" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டான்.
"ஷ் அழக்கூடாது இங்க "என்று அவன் அம்மா வாயில் விரல்களை வைத்து செய்கை செய்தாள். அக்கா சரளா அவன் தோளில் கை போட்டுகொண்டு "அழாதே.தாத்தா சரியாகி விடுவார் "என ஆறுதல் கூறினாள்.
சற்று நேரத்திலேயே பெரிய டாக்டர் வந்து "எங்களால் முடிந்ததை செய்தோம்.பலனளிக்க வில்லை.ஏற்கனவேயே அவர் இருதயம் வீக்காக இருந்திருக்கிறது.எங்கள் வருத்தத்தை    தெரிவித்து கொள்கிறோம். வேறு  ஏதாவது  உதவி தேவையா,  சொல்லுங்கள்  " என்றார்
அப்பொழுது சங்கர் திடீரென்று அவர்கள் முன்னே வந்து,"அம்மா இன்று கூட தாத்தா என்னை ஞாபக படுத்தினார்.உன்னிடம் சொல்ல வரும்போதெல்லாம் நீ தடுத்து விடுவாயாம். அவர் கண்கள் வேற என்னவெல்லாம் இருக்கோ அதை யாருக்காவது   கொடுக்கணுமாம்..இந்த டாக்டர் கிட்டே சொல்லேன்" என்றான்
"குட் பாய் "என்று டாக்டர் அவன் முதுகை தட்டி கொடுத்து ,அவன் அம்மாவிடம் " விண்ணப்பம் கொடுங்கள்.அதற்குள் நாங்கள் ஆவன செய்கிறோம்" என்றார்.
சங்கரின் அம்மா தன்னுடைய அப்பா கண்தானத்தை பற்றி பேச வரும்போதெல்லாம் தான் தடுத்தது   ஞாபகம் வந்து மேலும் அவளை துக்கத்தில் ஆழ்த்தியது.
"அம்மா,தாத்தாவின் கடைசி ஆசையை  பண்ணி முடிச்சோம். அவருக்கு மொபைலில் கடவுள் கிட்டேந்து இன்னிக்கி கால் வந்து இருக்கும்.  அதுதான் என்னை ஞாபப்படுத்தினார்.'என்றான் சங்கர்.
"உளறாதே.வாயை மூடிண்டு சரளாவோட வா."என அதட்டினாள்.
நான்கு நாட்கள் கழித்து சங்கர் அவன் தாத்தா படத்தின் முன் நின்றுகொண்டு "தாத்தா,நீ அடிக்கடி சொல்வதை நான் மறக்கவில்லை...உன்னோட கண்கள் மற்றதெல்லாம் ஆஸ்பத்திரியில் கொடுத்தாச்சு  .நான் .உன்னோட லாப்டாப்ல     உன்னோட   படம் தான் ஸ்க்ரீன் சேவரா (screen saver) போட்டு இருக்கேன்.சரளாக்கு உன்னோட ஐபேடை (I Pad) அம்மா கொடுத்தாங்க .நான் நன்னா படிக்கறேன் உனக்கு அங்க இருட்டா இருந்தா கூட உனக்கு தெரியாது.  ஏன் தெரியுமா,உன்னோட இரண்டு கண்களையும் எடுத்தாச்சே ? நீ இல்லாம எனக்கு பிடிக்கலை..நீயும் முருகன் தாத்தா மாதிரி 90  வயசு இருந்து இருக்கணும், "  என சொல்லி லேசாக விசும்ப ஆரம்பித்தான்
பின்னாலிருந்து  அதை கவனித்து கொண்டிருந்த அவன் அம்மா அவனை அணைத்து ஆறுதல் கூறினாள்Sunday, April 9, 2017

இங்கே எல்லாம் கோணங்கிகள்

மரங்களும் செடிகளும் கூடிய இந்த நிழலான இடம் எனக்கு பிடித்து விட்டது. விசாலமாகவும் வெளிச்சமாகவும் உள்ள. இந்த சூழ்நிலை மனதுக்கும்   இதமாக அமைந்துள்ளதில் ஒரு திருப்தி. நான் என்  வேலை உண்டு என்  ஜோலி உண்டுன்னு இருப்பேன்.யாரிடமும்அனாவசியமாக பேச மாட்டேன். எப்பொழுதும் ஏதாவது  சிந்தித்து கொண்டே இருப்பேன். எண்ணங்கள் கோர்வையாக இருந்தாலும், அதை சரியாக எடுத்து சொல்ல வருவதில்லை.நடுவில்  மறதி வேறு கொஞ்சம் தொந்திரவு படுத்துகிறது எப்போதும் ஏதாவது யோசித்து கொண்டிருப்பது கஷ்டமாக இருக்கு.தலை மயிரை பிய்த்து கொள்ளணும் போல ஒரு வெறி.தலை வலியும் கூட சேர்ந்துகொள்கிறது   ஆனால் யோசிக்காமல்   இருக்கமுடியலை.
எப்போதாவது  யாரையாவது ஏதாவது கேட்டால் நான் சொல்வது அவர்களுக்கு புரியாத    மாதிரி  அவர்கள்  பதில் சொல்வதில்லை. . சிலர் விசித்திரமாக பார்ப்பது உண்டு. சிலர்    லேசாக   சிரித்துக்கொண்டே போய்விடுவார்கள்..வயசானவன் என்றோ அல்லது பேச்சில் குழறலோ என்னவோ, காரணம் தெரியலை.நானும் லக்ஷியம் பண்ணுவதில்லை. உலகத்தில சில கோணங்கிகள் இருக்கத்தான் செய்யும். மொத்தத்தில் எனக்கு ஒரு விஷயத்தை தவிர   குறையேதும் இல்லை.
இங்கே நிறைய வெள்ளை உடை போட்டுக்கொண்டு  ஆட்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள் அவர்கள் நல்லவர்கள் அல்ல.விச்ராந்தியாக மாலை நேரம் கொஞ்சம் இருட்டின பிறகு இங்கே இருந்தால் முரட்டுத்தனமாக  காற்றோட்டமில்லாத சின்ன அறைக்குள் தள்ளிவிட இழுத்துக்கொண்டு போவார்கள்.என் மேல் கையை  வைக்காதே நானே வருகிறேன் என்றால் கூட ஆடு மாட்டை தள்ளுகிற   மாதிரி விரட்டுவார்கள். பேச்சில்    துளிக்கூட நயமே கிடையாது..அவர்களை பார்த்தால் எம கிங்கரர்கள் எண்ணம்தான் வரும்.என்னிடம் மாத்திரம் பாரபக்ஷம் காட்டுகிறார்கள் என்று எனக்கு   நிச்சயம் தெரியும்  .யாரிடம் சொல்வது யார் என்னை கேட்க போகிறார்கள்.
உங்களுக்கெல்லாம்  நான் எழுத்தாளன்னு நன்றாக தெரியும்.இருந்தும் இந்த கிங்கரர்கள் என்னை தினசரிகளையோ புத்தகங்களையோ படிக்க விடுவதில்லை.கிழித்து விடுவேனாம் ஒரு     தடவை  நான் தினசரியை  தலை  கீழாக  படித்து  கொண்டிருந்தேனாம் .அதற்கு அவர்கள் சிரித்ததிற்கு கோபத்தில்  தினசரியை கிழித்து போட்டேனாம்.பொய்களுக்கும் அளவே கிடையாதா ?  எனக்கில்லாத தரிசனமா  புத்தகங்கள் மீது இந்த கற்பூர வாசனை தெரியாத கழுதைகளுக்கு. விட்டு தள்ளுங்கள். தோணுவதை எழுத கொஞ்சம் வெற்று காகிதம் ஒரு பென்சில் கொடு என்று கேட்டதற்கு நான் பென்சிலால் மற்றவர்களை குத்திவிடுவேனாம்.சிரிப்புதான் வருகிறது
இந்த பைத்தியங்களுக்கு நடுவில் ஒரு நல்ல சமாச்சாரமும் உள்ளது.அதையும் கேளுங்களேன். வாரத்திற்கு மூன்று அல்லது  நான்கு   தடவையாவது .அந்த நாற்பது வயது  பெண்மணி இங்கு வருகிறாள்.ஒரு வேளை என்னை பார்க்கத்தான் வருகிறாளோ என் யோசிப்பேன் .ஏனென்றால்   வேறு யாரையும்  அவள் பார்ப்பதில்லையே.களையான முகம். ஏதோ   துக்கத்தில் உள்ள மாதிரி  சற்றே வாடின முகம். என்னை உற்று கவனிப்பாள் ஆனால் துளி   சிரிப்பு இருக்காது. வீட்டில் என்ன கவலையோ அல்லது யாருக்காவது உடல் சுகவீனமோ  தெரியவில்லை. ஒன்றும் சொல்ல மாட்டாள்.என் கைகளை பிடித்து கொள்வதும் தடவி கொடுப்பதிலுமே நேரம் செல்லும்.ஏதாவது பழங்களோ இனிப்போ பக்ஷணமோ மறக்காமல்   கொண்டுவருவாள்.எனக்கு சில சமயம் தெரியாதவர்களிடம் வாங்கி சாப்பிட  தயக்கமாக இருக்கும். வேண்டாம் என்றால் முகம் வாடிவிடும். எங்கேயோ பார்த்த பழகின முகம் மாதிரி இருக்கு.ஆனால் எங்கே யாருன்னு தெரியலை. அந்த சமயம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டால் அவள் எதிரில் இருப்பதையே மறந்து பேசாமல் இருப்பேன்.ரொம்ப நேரம் பொறுத்திருந்து  பார்த்துவிட்டு தன்  கண்களை துடைத்து கொண்டு  கிளம்பி விடுவாள்.
எனக்கு இன்று ஒரே கோபம்.வழுக்கை தலையோட தாட்டியா  இருக்கானே    அந்த வெள்ளை உடை என்னை வேண்டுமென்றே   கீழ தள்ளிவிட்டு , "கண் இல்லையா   பார்த்து போவதுதானே"  என்று சலிசசு கொள்கிறான்.
அவள் வந்தவுடன் "எனக்கு இங்க இருக்கவே பிடிக்கவில்லை. தயவு செய்து .என்னை உங்க வீட்டுக்கு அழைத்து கொண்டு போயேன் .நான் உனக்கு எல்லா உதவியும் பண்ணுகிறேன்"என்று சொன்னேன்.
"உங்களை இங்கிருந்து போக விட்டால் கட்டாயமா அழைத்து போகிறேன் .கவலை படாதீங்க.கேட்டு பாக்கறேன் என்று :”அன்பாக கூறினாள். 
ஒரு நாள் அவள் கிளம்புகையில் ஒரு வெள்ளை உடை அவளிடம் “உங்க  அப்பா எப்படி இருக்காரு? கொஞ்சமாவது தேவலையா?"பாவம் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறே"என  அங்கலாய்த்தான்.
அதற்கு அவள்"அப்படியேதான் இருக்கார்.சில சமயம் தான் தெளிவாக இருக்கிறார்.இதுவரை   என்னை அடையாளம்  .கண்ட மாதிரி தெரியலை. பார்க்க கஷ்டமாக இருக்கு" என சொன்னது என் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.  பாவம் அவள் அப்பா இங்க பக்கத்துல ஏதாவது ஆஸ்பத்திரியில் இருக்கார் போல.அதனால்தான் இங்கேயும் ஒரு நடை வந்துவிட்டு போகிறாள். எதுவாக இருந்தாலும் அவள் வருவதில் எனக்கு சந்தோஷம்தான்.
சில நாட்கள்   பிறகு என்னை பார்த்து விட்டு  அவள் கோடியில் இருக்கும் கட்டிடத்திற்கு சென்றாள் அவளை  இரண்டு வெள்ளை உடை பின் தொடர்ந்து செல்வதை பார்த்தேன்.எனக்கு ஒரே   பயம் .என்னை தள்ளின மாதிரி அவளையும் கீழே தள்ளி விட்டால் அடி படுமே.
படக்குன்னு பக்கத்தில் உள்ள ஒரு கிளையை ஒடித்தேன்.தடி மாதிரி பண்ணி நானும் பின்னாலயே போனேன்.
அவள் அங்க யாரோ புது கோட்டு ஆசாமியோட  பேசிக்கொண்டிருந்தாள் நான் தாழ்வாரத்தில ஒளிந்துகொண்டு ஒட்டு கேட்டேன்.கொஞ்சம்தான் கேட்டது. "கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு.இன்னும் சில மாதங்கள் ஆகும்னு நினைக்கிறேன்.கவலைப்பட  தேவையில்லை " யாரை பற்றி இந்த விவரம்,அவள் அப்பாவை பற்றியோ சரியாக தெரியலை.தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது.
அவளுக்கு தெரியாமல் திரும்பிப்போக யத்தனிக்கையில் அவள் என்னை பார்த்து விட்டாள்.நல்ல வேளை எம கிங்கரர்கள்  பார்க்கவில்லை.என் கையில் உள்ள தடியை பிடுங்கி போட்டுவிட்டு என்னை அணைத்துக்கொண்டு மரத்தடிக்கு நடந்தாள்.மனதில்  எனக்கு சொல்லதெரியாத குதூகலம்.
கண்ணம்மா, ஏதாவது சாப்பிட கொண்டு வந்து இருக்கையா?ஒரே பசிக்கறது” என்றேன்
நான் என்ன தப்பா பேசிவிட்டேன்.அப்படியே என்னை  கட்டிக்கொண்டு "அப்பா,திருப்பி சொல்லுங்க.என்ன சொன்னீங்க?கண்ணம்மா யாரு?  ? நான் யார் தெரியறதா? கடவுள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டார் .வாங்க  முதலில் சாப்பிடலாம்,"என்றாள்.
அந்த வெள்ளை உடை ஆசாமிகள் முதல் தடவையாக என்னை பார்த்து முகம் சிணுங்காமல் சிரித்தார்கள்.   எனக்கும் அவர்கள் எம கிங்கரர்கள் போல தென் படவில்லை.
இது என்ன  இடம் எல்லா கோணங்கியாக இருக்கேன்னு அவளிடம் கேட்டேன்.  அவள் குலுங்கி குலுங்கி சிரிப்பதற்கு நான்  என்ன வேடிக்கையாக பேசிவிட்டேன். ஆனால் அவள்  முகம் இன்னும் பிரகாசமானது.