Wednesday, August 8, 2012

கோகுலாஷ்டமியும் குலாம்காதரும்

அலமேலு மாமிக்கு ஒரே சங்கடம்.ஜன்மாஷ்டமி இன்னும் ஒரு வாரத்தில வருகிறது.மாமியின் பெண் உஷாவிற்கும் அதே வேளையில் தான் குழந்தை பிறக்கும்நு டாக்டர் சொல்லியாச்சு.

மாமிக்கு ஒரே பிள்ளை ரகு கோயமுத்தூரில குடும்பத்தோட இருக்கான்..ஆண்பிள்ளையா ஜன்மாஷ்டமில பிறந்தா மாமனுக்கு ஆகாது என்று ஒரு பயம்.

அலமேலுவின் கணவர் சந்தானம் "இதென்ன பைத்தியக்கார மூட நம்பிக்கை.கிருஷ்ணர் கம்சனை கொன்னால் எல்லா மருமானும் மாமாவை கொல்ல போகிறார்களா?அசட்டுத்தனமா கவலை பட்டுண்டு இருக்காதே" என்று கடிந்து கொண்டார்.

"உங்களுக்கு ஒன்னும் தெரியாது.எதிலும் ஒரு இளப்பம்.எங்க அம்மா சொல்லியிருக்கா தன்னோட கிராமத்தில பட்டாமணியம் பெண் வயத்து பேரன் கிருஷ்ண ஜெயந்தி அன்று பிறந்து மாமனை வாரிடுத்தாம்.ஒரு உடம்பு, உபாதை இல்லை.. நெஞ்சுவலின்னு மாரை பிடிச்சானாம்.பட்டுன்னு அடுத்த நிமிஷமே உயிர் போயிடுத்தாம்..அதே சமயம் பிறந்த குழந்தை வாயை திறந்துண்டு சிரிச்சுண்டு இருந்துதாம்.உங்களுக்கு என்ன தெரியும் நான் வயத்தில நெருப்பை கட்டிண்டு இருப்பது பற்றி?." என்று அங்கலாயித்தாள்.

"டாக்டர் கிட்ட உன்னோட பயத்தை சொன்னயா?"

"அவள் அதெல்லாம் முன்னாடியே பிறக்க வைக்க முடியாது. உஷாவிற்கு சுக பிரசவம் ஆகுமாம். .நடுவில போயி குழப்பக்கூடாதுன்னு சொல்லிட்டாள்"

"பெருமாளை வேண்டிக்கோ.எல்லாம் நல்ல படியாக ஆகும்" என்றார்.

"ரகுவை அங்கப்ரதக்ஷினம் பண்ண சொல்றேன்னு வேண்டி கொண்டிருக்கிறேன்.ஹனுமாருக்கு வடை மாலை சாத்தரதாகவும் பிரார்த்தனை"

"அவனை பண்ண சொல்லி நீ எப்படி வேண்டி கொள்ளலாம்?வேடிக்கையாக இருக்கே"என்று சிரித்தார்.சந்தானம்.

மாமி முகத்தை தோளில் இடித்து கொண்டு உள்ளே சென்றாள்.

உஷாவிற்கு சரியாக ஆவணி கிருஷ்ண பக்ஷத்தில அஷ்டமி திதியிலே ரோஹிணி நக்ஷத்திரத்தில் இரவில் ஆண் குழந்தை பிறந்தது. களையான முகம்,சற்று மா நிறத்திற்கும் கம்மி தான். சம்மந்திக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம்.மாமி முகத்தில் ஈயாடவில்லை.ஒரே கலவரம்...

மறு நாள் காலையில் அலமேலுக்கு போன்..'"அம்மா, ரகு பேசறேன்.கமலாவையும்

பசங்களையும் அழைச்சுண்டு குருவாயூருக்கு வந்தேன்.நன்னா தரிசனம் ஆச்சு. ஆனால் ஒரே கும்பல்.தாள முடியலை.. உஷாவிற்கு பையன் பிறந்து இருக்கானாமே. ரொம்ப சந்தோஷம்..

அவகிட்ட எங்க வாழ்த்துகளை சொல்லு..சற்று இரு கமலா உன்கிட்ட ஒரு வார்த்தை பேசறா."

"அம்மா,ரொம்ப சந்தோஷம். உஷாக்கு பிரசவம் சௌகரியமாக ஆச்சா?தொட்டில் விடற அன்னிக்கு வர பார்க்கிறோம்.இவர் கால் அதுக்குள்ள சரியாகிவிடும்"

அலமேலு பதறிக்கொண்டு "அவன் காலுக்கு என்ன?அவன் ஒன்னுமே சொல்லலையே..எப்படி இருக்கான் இப்போ?"என்றாள்

"பயப்பட ஒண்ணுமில்லை.நேற்று ராத்திரி தடுக்கி விழுந்தார் கோவிலில்..காலில் சற்று முறிவு..இங்க டாக்டர் பிளாஸ்திரி போட்டாச்சு.இப்போ கோயமுத்தூருக்கு கிளம்பிண்டு இருக்கோம்.நானே வண்டியை ஓட்டறேன்.கவலைப்பட ஒன்னுமே இல்லை". ..

"இவர் கிட்ட ஒரு வார்த்தை பேசு" . .

சந்தானம் பேசின பிறகு "இப்போவாவது ஒப்புகொள்ளுகிறீர்களா?நல்ல வேளை குருவாயூரில் இருந்ததால் தலைக்கு வந்தது தலைப்பாயோடு போச்சு.நானும் வேண்டி கொண்டிருந்தேன்" என்றாள் அலமேலு.

"கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சு போடறியே. இவன் தடுக்கி விழுந்ததுக்கும்,நீ வேண்டிகொண்டதற்கும் என்ன சம்பந்தம்?

'உங்களுக்கு எதிலும் இளக்காரம்தான்.எங்க அம்மா சொன்னால் தப்பே இருக்காது.நல்ல வேளை நான் வேண்டி கொண்டேன்." .

மாமியின் வேண்டுதல்களோ,ரகுவின் குருவாயூரின் கிருஷ்ண தரிசனமோ,அல்லது சந்தானத்தின் திடமான நம்பிக்கை இன்மையோ எல்லாம் நல்லபடியாக அமைந்தது . .
.