Thursday, November 18, 2010

பொறுமையின்மை

காலை நேரம். ராகவன் டெலிபோனில் வாசல் ரூமில் ரொம்ப முக்கியமா பேசிக்கொண்டு இருக்கிறார்.அவர் ஆறு வயது குழந்தை அவருடைய காலை பற்றி "அப்பா,அப்பா "னு கூப்பிடறது.

"தூர போ.தொந்திரவு பண்ணாதே" னு சள்ளுன்னு விழுந்தார்.

குழந்தை நகராமல் 'அப்பா,அப்பா ,கொஞ்சம் கேளேன்' னு சொல்லறது.

"சனியனே,சொன்னா கேழ்கமாட்டே.இந்த க்ஷணம் போகலையானா
கொன்னுபுடுவேன்.ஜாக்கிரதை" னு கத்தறார்.

அதுவோ அடமாக "அப்பா கொஞ்சம் இங்க வா'னு . கையை பிடிச்சு இழுத்தது.

ராகவனுக்கு ஒரே கோபம் வந்துடுத்து."sorry,one second, will be right back"னு சொல்லிட்டு அந்த குழந்தை முதுகில சாத்தினார் ஒரு அறை.
"அப்பா,, சமையல் உள்ளே அம்மா மயக்கமா கீழ விழுந்துட்டா.gas ஒரே எரியறது .பயமா இருக்கு"னு அழுதுண்டே உள்ளே ஓடறது

Sunday, November 14, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்-4

தஞ்சை பெரிய கோவில்
நாங்கள் சமீபத்தில் குடும்பத்தோடு தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று இருந்தோம்.பார்த்தவுடனேயே அதன் கம்பீரமும் பிரம்மாண்டமும்.எங்களை ஒரு பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது..சரி,மிகவும் கவனமாகவும் உன்னிப்பாகவும் பார்க்க தீர்மானித்து யாராவது வழிகாட்டினர் (guide)அகப்படுவாரா என்று கண்களை சுழல விட்டோம்..ஒரு அறுபது வயதுள்ள நபர் அருகில் வந்து "கூட்டமாக வந்து இருக்கிறீர்களே, இதுதான் முதல் தடவையா" என்று கேட்டார்..

“ஆமாம்” என்றோம் '

“சரி என்னுடன் வாருங்கள். எல்லாவற்றையும் விவரமாக சொல்கிறேன். .நான் பல தடவை வந்து இருக்கிறேன்" என்றார். மிகவும் நல்லதாக போச்சு என்று அவருடன் வழி நடக்கலானோம்.

ஒரு ஒரு இடமாக நின்று அவசரப்படாமல் முக்யமான அம்சங்களை விவரித்தார்.. அவர் சொன்னதின் சாராம்சம் சுருக்கமாக இதுதான்.

.இது பழமையான சிவாலயங்களில் ஒன்று.. இந்த ஆலயம் சமீபத்தில் தனது 1000 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. .தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் கி.பி. 1010-ல் 216 அடி உயரமுள்ள இந்தக் கோவிலை கட்டினார்.

.ராஜராஜ சோழனால் கட்டப் பெற்ற கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற கோவிலாகத் கருதப்படுகிறது.. "கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது".இக்கோவில், உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, அமைந்துள்ளது இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது.

இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்ல உதாரணமாகும்.. இந்த கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்த நந்தி 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலம் கொண்டது.

இந்த கோவிலில் 35 உட்கோயில்கள் உள்ளது.. நான்கு திசைகளிலும் இந்த உட்கோயில்கள் உள்ளன.

இக்கோயிலின் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழாது.

எல்லாம் செவ்வனே சுற்றி பார்த்தபிறகு அவரிடம் மிகுந்த நன்றி சொல்லி 500 ரூபாயை நீட்டினோம்.அவர் சிரித்துகொண்டே "நான் guide இல்ல நான் ஒரு archealogist .குடும்பமாக ஆவலுடன் வந்து இருப்பதால் உங்களுக்கு உதவலாமே என்கிற எண்ணத்துடன் வந்தேன்..திருப்தியாக இருந்ததா?'என்றார்

ஒரு வெட்க உணர்ச்சியுடன் "தவறாக மதிப்பிட்டதற்கு மன்னிக்கவும்..உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..சென்னை வந்தால் கட்டாயமாக எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். "என்று விலாசத்தை கொடுத்தோம்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.. .


Sunday, November 7, 2010

பாட்டியின் வைராக்கியம்

ரங்கநாயகிக்கு 80 வயதுக்கு மேல இருக்கும்.நகரத்தில பெரிய பெண்ணோடு இருக்கிறாள். .கிராமத்தை விட்டு 21 ஆம் வயதுல வந்தது தான்,அப்புறம் அந்த பக்கம் காலை வைக்கவே இல்லை.சொந்த பந்தங்கள் எல்லாம் அங்கதான்.இருந்தாலும் ஒரு வைராக்யமா போகமாட்டேன்னு ஒரே பிடிவாதமாக இவ்வளவு வருஷங்கள் தள்ளியாச்சு..நல்லது கெட்டது எதுக்கும் போகலை.அவள் அப்பா,அம்மா போனப்போதுகூட எவ்வளவு சொல்லியும் மசியலை.

யாருக்கும் என்ன காரணம்னு சரியாகத் தெரியவில்லை..அரசல் புரசலாக காதுல விழுந்தது ஏதோ ஒரு மன வெறுப்பினால வந்தாள்னு மட்டும் தெரியும்.. கூடபிறந்தவர்களும் அவர்களாக வந்து பார்த்தால் தான் உண்டு. பாட்டியின் செல்லப்பேத்தி சரோஜாக்கும் தெரியாது.அவர்கள் இரண்டு பேரும் அவ்வளவு அன்யோன்யம்..எல்லா விஷயங்களும் பரிமாறிக்கொள்வார்கள்.

.இப்படி இருக்கையில் திடீரென்று போன வாரம் கொள்ளுப்பேரனுக்கு கல்யாணம்னு கிராமத்துக்கு போயிருக்கா. எல்லோருடைய மண்டைகளுக்குள் ஒரே குடைச்சல்.இத்தனை நாட்களாக போகாதவள் இப்போ மாத்திரம் ஏன் போனாள்னு. .சரோஜவிடமும் எதனால இப்படி மன மாற்றம்னு பாட்டி சொல்லவில்லை.

சரோஜாவின் மனதில் பாட்டியோட அண்ணன் கொஞ்சம் நாட்களுக்கு முன்னே வந்து போனதிலிருந்து பாட்டியிடம் ஒரு வித்தியாசம் தென்பட்டது. அவர்கள் இருவரும் ஏதோ கசமுசு வென்று பேசினது இவளுக்கு ஆச்ச்சர்யமாகக்கூட இருந்தது..ஆனால் பாட்டியும் ஒன்றும் சொல்லவில்லை,இவளும் கேட்கவில்லை.

பிறகு ஒரு நாள் மூட்டை முடிச்சோடு பக்ஷணம் பணியாரம் ,கறிகாய் நு ஏகப்பட்ட சாமான்களுடன் வந்து இறங்கினாள்.முகத்தில் ஒரு சிரிப்புடன் கூடிய சந்தோஷம்.

ஒரு வாரம் கழித்து பாட்டியும் பேத்தியும் தனியாக தாழ்வாரத்தில் இருந்தார்கள்.

."பாட்டி, உன்னை ஒரு கேள்வி கேட்பேன். .நமக்குள் ஒளிவு மறைவு இல்லையே. .பதில் சொல்வாயா?".

"தாராளமா கேளு,கண்ணு..உன் கிட்ட என்ன ரகசியம்?"

"இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறம் கிராமத்துக்கு கல்யாணம்நு சொல்லிட்டு போயிருக்கே .இத்தனை நாட்களாக ஏன் போகலை. .இப்போ ஏன் திடீர் என்று உன்னோட வைராக்யத்தை விட்டு கொடுத்தாய்?" .என சரோஜா கேட்டாள்.

கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு பாட்டி சொல்ல ஆரம்பித்தாள்.

"இந்த ரகசியத்தை அறுபது வருஷமா என் உள்ளேயே புதைச்சு வைத்து இருந்தேன்.உன்னிடம் சொல்வதில் எனக்கு ஒரு ஆக்ஷேபனையும் இல்லை..உன்னிடம் மாத்திரம் வைத்து கொள்..
அப்போ உன் வயது தான் இருக்கும்.ஒருவன் அழகில் மயங்கி அவன் பேச்சை நம்பி என்னை இழந்தேன்.நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் குழந்தை தன்னுடையது இல்லை என்று அபாண்டமாக புளுகினான்.எவ்வளவு கெஞ்சியும் என்னை மணம் புரிய மறுத்தான். அவன் முகத்தில் காரி உமிழ்ந்து 'உன் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இந்த ஊரில் என் ஆயாவிடம் வந்தது தான்..இங்குதான் உன்னோட பெரிய மாமன் பிறந்தான்.. அந்த கயவன் முகத்தை தப்பி தவறிகூட பார்க்க கூடாது என்று தன் நான் அங்கு போகவே இல்லை.' என்றாள்.

"இப்போ மாத்திரம் ஏன் போனாய்" என்று சரோஜா கேட்டாள்..

"அதுவா? கொஞ்சம் நாட்கள் முன்னாலே என்னோட அண்ணன் வந்திருந்தாரே. அப்பொழுது அவர் அந்த அயோக்யன் இறந்து விட்டதாகவும் இனி நான் அங்கு வர ஒரு தடையுமில்லை என்றார்..கல்யாணத்திற்கு நான் கட்டாயம் வரணும்நு வற்புறுத்தினார்.இதுதான் ரகசியம். இப்போ திருப்தியா?.உன் மண்டை குடைச்சல் போச்சா?' என்று சிரித்தவாரே கேட்டாள்.

பாட்டி தன்னுடைய திட வைராக்யத்தை எப்படி இவ்வளவு வருஷங்கள் காப்பற்றினாள் என்கிற எண்ணத்தில் சரோஜாவின் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.
. ..

Thursday, November 4, 2010

கோவில்களிலும் சூப்பர் ஸ்டாரா?

அண்மையில் கும்பகோணம் சென்று இருந்தேன்.அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமாக கோவில்களாம்..பல கோவில்கள்ஆழ்வார்களாலும் ,நாயன்மார்களாலும் பாடபட்ட முக்யமான பாடல் ஸ்தலங்கள்.. கிரமமாக பூஜை புனஸ்காரங்கள் நடந்து வருகிறது.

நான் போன சமயத்தில் பல கோவில்களில் கும்பல் அதிகமாக தென் படவில்லை. ஆனால் சில கோவில்களில் உதாரணத்திற்கு (ஸ்ரீரங்கம்) கூட்டம் அலைமோதுகிறது.பல இடங்களில் ஓரிருவர் தவிர யாரும் தென்படவில்லை.தைய்வங்களில் கூட அதிர்ஷ்டம் சிலருக்குத்தான் உண்டு போலும்!. .பாடல் ஸ்தலங்களில் கூட இந்த வித்யாசம் தெரிகிறது..ஏன் இப்படி?

சினிமா ஹீரோக்களில் தான் ஓரிருவருக்கு தனிப்பட்ட அந்தஸ்து கிடைக்கறது. நடிப்புக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லை.அழகிற்கும் பெயருக்கும் கூட சம்பந்தமில்லை.அதே மாதிரி கோவில்களிலும் சில இடத்திற்கு தான் தனி சிறப்பு.. நான் பார்த்த சில கோவில்களில் விக்ரகங்கள் மிக அழகாகவும் கண்ணை பறிக்கும் பொலிவோடு மிளிர்ந்தன.இருந்தும் கூட்டமே இல்லை.அழகுக்கும் கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை போலும்..அங்கும் ஒரு முக ராசிதானா?

திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற பணக்கார கோவில்களில் உண்டியல்கள் பக்தர்களால் போடுகின்ற காணிக்கையால் ரொம்பி வழிகின்றன. அதே சமயம் இன்னுமொரு கோவிலில் அர்ச்சகர் "தீபாவளி வருகிறது.புது புடவை வேஷ்டி தாயாருக்கும் பெருமாளுக்கும் தேவை படுகிறது.பத்தாயிரம் ரூபாய் ஆகும்.பக்தர்கள் உதவி தேவை" என்று கூறினார்..மனம் ரொம்ப சங்கடப்பட்டது.

வருமானம் உள்ள பெரிய கோவில்கள் தங்கள் வருமானத்தை தங்களுக்கே முழுவதையும் உபயோக படுத்தாமல் ஒரு சிறிய பாகத்தை ஏனைய சிறிய கோவில்களுக்கு(பாடல் ஸ்தலங்களுக்காவது உதவும்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை..இல்லாவிட்டால் இது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இன்னுமொரு எண்ணம்.கோவில்களைக்கூட டி கடைகள் போல அளவுக்கு மீறி ஒரே இடத்திலோ அல்லது ஊரிலோ .கட்டுவது சரியாகப்படவில்லை.ராஜாக்கள் கட்டின பழைய கோவில்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இனியாவது புதிய கோவில்கள் ஒரே இடத்தில் உருவாகுவதை அனுமதிக்க வேண்டுமா என்பது என் கேள்வி. ...

Friday, October 29, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர் -3

சாமந்தி பூ
தீபாவளிக்கு என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு புடவை எடுக்கலாமென்று கடைக்கு சென்றிருந்தேன்.ஒரே கூட்டம்,நெரிசல் தாங்க முடியவில்லை.சட்டென்று வாங்கி வருவதில் மும்முரம் காட்டினேன். ஆனால் புடவை எடுத்து போடுபவரோ " அம்மா இதை பாருங்கள், புது டிசைன் உங்களுக்கு எடுப்பாக இருக்கும்" என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மேலும் மேலும் பல புடவைகளை வலு கட்டாயமாக காண்பித்து கொண்டிருந்தார்.எனக்கு எரிச்சல் வந்தது.நான் எனக்கு புடவை வாங்க வரவில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.பாவம்,புடவை அதிகம் விற்றால் கூடுதல் பணம் விற்கும் நபர்களுக்கு கிடைக்கும் போலும்.இருந்தாலும் ஒரு தொந்திரவாக பட்டது.

அன்று மாலை கோவிலுக்கு சென்றிருந்தேன்.சுவாமிக்கு பூ வாங்கலாமென்று பூ விற்கும் கடைக்கு சென்றேன்.சின்ன பெண்.பதினைந்து வயது இருக்கும்.மல்லிகை பூ நன்றாக இருந்தது.

"முழம் என்ன விலை?" .என கேட்டேன்

"பத்து ரூபாய்" என்றாள்

'ஜாஸ்தி"
"சரி,மூன்று முழம் இருபத்து ஐந்து ரூபாய் கொடுங்கள்" என்றாள்

வாங்கி கொண்டேன்.சாமந்தி மிகவும் அழகாக மஞ்ச மஞ்சளேரென்று இருந்தது.

"சாமந்தி மூன்று முழம் கொடு " என்றேன்

வீட்டுக்கா" என கேட்டாள்.

"இல்லை,சுவாமிக்கு சாத்தத்தான் "என்றேன்

பெருமாள் சன்னதிக்கா " என்று கேட்டாள்

"ஆமாம்" என்றேன்

"அங்கு சாமந்தி சாத்த மாட்டார்கள்" என்று சொன்னாள்.

உடனே எனக்கு காலையில் புடவைக்கடையில் எனக்கு வேண்டாத புடவையை விற்க முயற்சித்தது ஞாபகம் வந்தது..

இங்கோ ஏழ்மையான பெண்ணாக இருந்தும் உபயோகமில்லாத பொருளை நான் வாங்க கூடாது என்பதில் ஒரு கரிசனம்.அங்கோ எனக்கு வேண்டாததை தலையில் கட்டுவதில் ஒரு மும்முரம். எனக்கு அந்த பெண்ணை ஒரே பிடித்துவிட்டது.

"சரி,இன்னும் மூன்று முழம் மல்லிகை கொடு. முழம் பத்து ரூபாயாகவே இருக்கட்டும்" என்றேன்.

அந்த பெண் ஒரு ஆச்சர்யம் கலந்த சிரிப்போடு என்னை பார்த்தாள்

"அம்மா,இனி என் கிட்டயே வாங்குங்க.சல்லிசா கொடுப்பேன்" என்றாள்

என்னே வித்யாசமான மனிதர்கள் .

Wednesday, October 27, 2010

ஒரு தெய்வீக அனுபவம்

எனது உறவினர் ஒருவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி டாக்டர்கள் அவருக்கு அதிக நாட்கள் இல்லை என்பதை நேரடியாகவே சொல்லி விட்டார்கள்.அதனால் மனம் தளரவில்லை.ஆனால் தான் இதுவரை போகாத மிகவும் விரும்பிய கோவிலுக்கு செல்ல விரும்பினார்..முடியாத உடல் நிலையிலும் தன மனைவியை கூட அழைத்து கொண்டு ரயிலில் பிரயாணம் செய்தார்..அங்கோ அவர் எதிர் பாராத கூட்டம்.இருந்தும் முடியாத நிலையில் எப்படியோ க்யூவில் நின்று பகவானை தரிசிக்க அருகில் சென்றார். .கூட்ட நெரிசல் அவரை ஒரு சில க்ஷணங்கள் கூட கிட்ட இருந்து தரிசிக்க முடியாமல் செய்தது... கூட்ட.ம் அவரை தள்ளி கொண்டு வெளியே வரும்படி செய்து விட்டது...இவ்வளவு கடின பிரயாணம் மேற்கொண்டும் சரியாக பார்க்கவும் ,பிரார்த்தனை செய்யவும் முடியவில்லையே என்று ஒரே ஏமாற்றம்..மன வருத்ததோடு தன குறையை பகவானிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு திரும்புவதற்கு ரயிலடிக்கு கிளம்பலானார்.

அந்த சமயம் ஒரு வயதான நபர் அருகில் வந்து "சார், ஏன் முகம் வாடி இருக்கு? பகவானை சரியாக தரிசிக்க முடியவில்லையா?குறையோடு திரும்ப வேண்டாம்.என்னுடன் வாருங்கள் ஒரு நொடியில் பகவானை கண் குளிர நன்றாக தரிசனம் செய்து வைக்கிறேன்.ரயிலுக்கு நிறைய அவகாசமிருக்கு. .கூட வாருங்கள்'என்று கை பிடித்து இழுக்காத குறையாக அழைத்து சென்றார்.உறவினருக்கு அவர் யார் ,எப்படி அவருக்கு தன் வருத்தம் தெரியும் என்று பல யோசனைகளோடு கூட சென்றார்.மனைவியும்உடனிருந்தாள்.ஒரு க்யு ஒரு கூட்டம இல்லாமல் நேரே எல்லா வாசல்களையும் தடங்கல் இல்லாமல் கடந்து நண்பரை வேகமாக அழைத்து சென்றார்..யாரும் தடுத்து நிறுத்தவுமில்லை.பெரிய அதிகாரியாகவும் தென்படவில்லை.

பகவானுக்கு மிக அருகில் நிறைய நேரம் ஆசை தீர தரிசனம் செய்தும் பிரார்த்தித்து கொண்டும் மன நிறைவோடு அந்த மனிதரிடம் நன்றி சொல்ல திரும்பிய் போது அவரைக் காணவில்லை...உறவினருக்கு சொல்லமுடியாத ஒரே பக்தி பரவசம், .அங்கும் இங்கும் தேடியும் பயனில்லை.மாயமாய் மறைந்து விட்டார். .மனம் புல்லரித்தது.பகவானே அல்லாமல் வேறு யாராலும் இப்படி தங்கு தடையில்லாமல் இந்த கூட்டத்தில் தரிசனம் செய்துவைக்க முடியாது...என்று திடமாக நம்பினார்.

ஊருக்கு திரும்பியபின் பார்ப்பவர் எல்லோரிடமும் இதையே பேசிகொண்டிருந்தார்.இரண்டு நாட்கள் கழித்து கனவில் " பகவான் உங்கள் கவலையை தீர்த்து வைத்தாரா? இப்பொழுது திருப்தி தானே? .நன்றாக தரிசனம் ஆயிற்றா?குறை ஒன்றும் இல்லையே?எல்லாம் நல்லபடியே நடக்கும்"என்று அந்த பகவானே அருள் புரிந்தார்.இது நடந்து சில மாதங்களிலேயே அந்த உறவினர் ஒரு மன திருப்தியோடு மறைந்தார்.

ஈஸ்வர சம்பந்தப்பட்ட எதுவுமே நம் புத்திக்கு அப்பாற்பட்டது.அனுபவரீதியாகத்தான் அதை புரிந்துகொள்ளமுடியும்.இந்த சம்பவத்தை காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் ஒரு கதை என்று எள்ளி நகையாடமுடியாது..பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வாஸ்தவமான தீவிரமான அன்போ அல்லது பக்தியோ இருந்தால் எதுவும் வாழ்க்கையில் நடக்கும்...

Tuesday, October 26, 2010

பாம்பின் கால் பாம்பு அறியும்

என்னோட கல்யாணத்திற்கு முன்னமேயே அந்த அம்மாளை தெரியும்..என் அம்மா வீட்டிற்கு வருவாங்க..நல்ல நிலைமையில் இருந்து நொடித்து போனவங்க, ரொம்ப சாத்வீகமான களையான முகம். .மூன்று பெண்கள்.இரண்டு பேரை எப்படியோ கரை ஏத்திட்டாங்க.பெரிய இடமில்லை.பசியில்லாமல் அவங்க வருமானம் அவங்களுக்கே போராமல் இருந்தது. மூன்றாம் பெண்ணிற்கு கல்யாணம் பண்ண வேண்டும்.பணமில்லை.. தெரிந்தவர்கள் உதவி நாடி அலைந்து கொண்டு இருக்கிறாங்க.என் அம்மாவிடம் விலாசம் வாங்கிண்டு இங்கே வந்து இருக்காங்க.அம்மாவும் 'முடிந்தால் பண உதவியோ அல்லது துணிமணியோ வாங்கி கொடு..பாவம், நல்ல நிலையிலிருந்து இப்படி கஷ்ட படறாங்க' என்று போனில் சொன்னாள்..

என் கணவரிடம் போனில் பேசி அந்த அம்மாளுக்கு ஐந்து ஆயிரம் ரூபாயும் ஒரு கைவசம் இருந்த ஒரு பட்டு புடவையும் கொடுத்தேன்."இருங்க,காபி குடித்து விட்டு போகலாம் என்றேன்.அந்த அம்மாளுக்கு ஒரே சந்தோஷம்..என்னை கட்டி அணைத்து கண்களில் தண்ணீருடன் "நான் என்ன புண்ணியம் செய்தேனோ உன்னை மாதிரி நல்லவங்க அன்பை பெற்றிருப்பதற்கு" என்றாங்க.

நான் உள்ளே இருக்கையில் வாயிலில்'அம்மா' என்று குரல் கேட்டது. யாரென்று பார்க்கையில் "அம்மா ,நான் பிள்ளையார் கோவில் வாசலில் பூ விற்கரேன், அம்மா..திடீரென்று கணவருக்கு நெஞ்சு வலி. தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கேன்..இருந்தாலும் செலவிற்கு இரெண்டாயிரம் ரூபாய் தேவை அம்மா.பல தெரிஞ்ச இடங்களில் கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கிறேன். .பிறகு பூ கொடுத்து கழித்து விடுகிறேன் அம்மா. .உங்களால் என்ன முடிகிறதோ தயவு செய்து கொடுங்கள் ."என்றாள்

'"இப்பொழுது வேலையா மும்முரமா இருக்கேன்.அவரும் வீட்டில இல்லை.அப்புறம் வா.பார்க்கலாம்" என்று தட்டி கழித்தேன்.எவ்வளவு நிஜமோ பொய்யோ யாருக்கு தெரியும் என்கிற எண்ணத்தோட. அவள் மேற்கொண்டு பேச இடம் கொடுக்காமல் உள்ளே சென்றேன்

எதோ பேச்சு குரல் கேட்கிறதே என்று வந்தால், அந்த வயதான மாமி அந்த பெண்ணிடம் 200 ரூபாய் கொடுத்து கொண்டு இருப்பதை பார்த்தேன்.சற்று கோபம் வந்தது சுருக்கென்று."பிச்சை எடுத்தானாம் பெருமாள் அதை பிடுங்கினானாம் ஹனுமார்'" என்கிற கதையாய் நம்ம கிட்ட தானம் வாங்கி தருமம் பண்றதை பொறுக்கவில்லை. "என்ன மாமி,உங்களுக்கு வேண்டும் என்பதால் தானே கொடுத்தேன்.அதை இப்படி வீசி எறியலாமா" என்றேன் வெடுக்கென்று.

"நீ சொல்றது நிஜம் தான். .பொய்யோ நிஜமோ தெரியாதுதான்.ஒரு வேளை உண்மையாக இருந்து ஏதாவது ஏடாகொடமா ஆகிவிட்டால் என்ன பண்றது நு பயத்தில கொடுத்தேன். நான் கஷ்ட படறதுநால எனக்கு மனதுக்கு தாளலை.என்னை மன்னிச்சுடு..உன்னை கை எடுத்து கும்பிடறேன்" என்று சொன்னாங்க.

"ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க.நானே கொடுத்து இருக்கணும்.உங்க பணம் குறையறதே என்கிற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன்..இந்தாருங்கள் இன்னுமொரு ஆயிரம் ரூபாய்.எல்லாம் நல்லபடியா நடக்கும் "என்றேன்.

. .

Sunday, October 24, 2010

ஓட்டை வாய்


ஒரு தடவை அவரை என்னோட ச்நேகிதி வீட்டில் பார்த்து இருக்கிறேன்..நல்ல விதமான புடவைகள் விதவிதமான டிசைன்களில் நியாயமான விலைக்கு கொடுத்து இருக்கிறார். நைய்பவர்களிடமிருந்தே வாங்குவாராம்.

ஒரு நாள் கடைத்தெருவில் பார்த்தேன்.' அம்மா, நல்ல சரக்கு கைவசமிருக்கு.. விலாசம் கொடுத்தால் வீட்டுக்கு கொண்டு வருகிறேன்.'என்றார்.

"விலாசம் இதுதான். ஆனால் இப்போது வேண்டாம்.ரெண்டு நாட்களுக்கு ஊரில் இருக்க மாட்டோம்.வாரக்கடைசியில் வாருங்கள்' என்றேன்

ஊரிலிளிருந்து திரும்பியதும் வீடு சுத்தமாக களவாடபட்டிருந்தது.ச்நேகிதியை விசாரித்தபொழுது,அந்த ஆள் யாரென்றே தனக்கு தெரியாது என்றாள்.

Saturday, October 23, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர் -2

இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.பல வருடங்களுக்கு முன்னாள் நடந்தது.பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ் ல் கல்கத்தா கிளமபவேண்டிய ரயிலின் முன்னால் நின்று கொண்டிருந்தேன்.அன்று எப்படியும் கிளம்பவேண்டிய சூழ்நிலை.வண்டி கிளம்பும் அரை மணி முன்னர் முதல் வகுப்பு பரிசோதகர் கையில் காகிதங்களுடன் வந்து சேர்ந்தார்.

"வணக்கம்,இன்று கல்கத்தாவிற்கு அவசியமாக செல்லவேண்டும்.ஒரு இடம் கொடுக்கமுடியுமா?" என்று கேட்டேன்

"உங்கள் பெயர் காத்திருக்கும் லிஸ்டில் உள்ளதா?'என்றார்.

i"இல்லை டிக்கட்டே எடுக்கவில்லை.சட்டென்று கிளம்பும்படியாக நேர்ந்தது" என்றேன்

"sorry, காத்திருப்பவர்கள் நிறைய பேர் லிஸ்டில் இருக்கிறார்கள்.வேறு வண்டி பாருங்கள்" என்றார்.

"என்ன விலையானாலும் பரவாயில்லை.கொஞ்சம் தயவு பண்ண வேண்டும்"என்றேன்.

"நீங்கள் சொல்வது புரியவில்லையே"என்றார்.

ஒரு அசட்டு சிரிப்புடன் "டிக்கட்டுக்கு எவ்வளவு மேலே ஆனாலும் செலவழிக்க தயாராக உள்ளேன் என்று சொன்னேன்"என்றேன்

"உங்களிடம் பிளாட்பாரம் டிக்கட் இருக்கிறதா? என்றார்.

சரி, ஆள் மசிந்து வருகிறார் என்கிற பெருமிதத்தில் 'இல்லை,எடுக்க வில்லை அவசரத்தில்" என்றேன்.

"பத்து வரை எண்ணுவேன்.அதற்குள் இங்கிருந்து வெளியே செல்லாவிட்டால் உங்களை ரயில்வே போலீசிடம் ஒப்படைப்பேன்.கடுமையாக சொல்கிறேன்.லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்று உங்கள் மேல் குற்றம் சாற்றுவேன்.get out I say " என்று சத்தத்துடன் சொன்னார்.

உடனேயே வெளியில் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தேன்.என்ன பண்ணுவது, எப்படி போய் சேருவது என்கிற குழப்பத்தில். வண்டி கிளம்பியவுடன் அவர் வெளியே வருவதை பார்த்தேன். நல்ல மனிதர் மனதை புண்படுத்தி விட்டேனே என்று ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள்ளே.

அருகில் வந்தவுடன் எழுந்து நின்று “sorry,தப்பிதமாக நடந்து கொண்டு விட்டேன்.என்னை மன்னிக்கவேண்டும்.அவசரமாக போய்சேர வேண்டும் என்கிற உந்துதலால்.அப்படி தவறு நடந்து விட்டது." என்றேன்

"பரவாயில்லை.அப்படி என்ன அவசரம்?"என்றார்

'மனைவிக்கு ஜுரம் என்று போன் வந்தது.வேறு யாரும் உதவிக்கு இல்லை" என்றேன்

அடுத்த வண்டி கொஞ்ச நாழியில் கிளம்பும்.அதில் கூட்டம் அவ்வளவா இராது.இடம் இருந்தால் கட்டாயம் தருகிறேன்.ஆனால் எல்லா பரிசோதர்களையும் லஞ்சம் வாங்கும் பேர்வழிகளாக எண்ணாதீர்கள்.ஒரு சிலர் நேர்மையாக இருக்கத்தான் முயற்சி பண்ணுகிறோம்.எங்களை கெடுத்து விடாதீர்கள்." என்றார்.

என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததை பார்த்து "sorry,தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"என்றார்
.
இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது. .
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
.

Thursday, October 21, 2010

பவானியின் சிரிப்பு

வீட்டில் கறிகாய் கொஞ்சம் கூட இல்லை.வாங்குவதற்கு அருகில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்றேன்.கூட்டம் அதிகம் இல்லை. காய்கள் எல்லாம் பச்சை .பசேலென்று இருந்தன.பழங்களும் தரமாக இருந்தது.. எல்லாவற்றையும் அள்ளி போட்டுகொண்டு வந்து பில் போடும் கவுன்டரில் வைத்தேன்.

22 வயது பெண்.. .சிரித்த முகம்.".வாருங்க, எல்லாம் கிடைத்துதா? ஏதாவது கிடைக்காமல் வந்துவிட்டீங்களா? பில் போடட்டுமா."என்றாள்

நானும் சிரித்தபடியே "எல்லாம் கிடைச்சது. நன்றாக வைத்து இருக்கீங்க. விலை எல்லாம் குறிச்சு இருக்கு.கஷ்டமே இல்லை.தரமும் ஒண்ணு இரண்டு தவிர நன்றாக உள்ளது" என்றேன்
"நன்றி அம்மா.எந்த ஒண்ணு இரண்டு சரியாக இல்லை என்று .சொன்னீங்கன்னா அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம்" என்றாள்.

எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை.என்ன பணிவுடனும் கரிசனத்துடனும் பேசுகிறாள் என்று ."உன் பேர் என்னம்மா.நீ எவ்வளவு நாட்களாக இங்கே பணி புரிகிறாய்?'எண்டு கேட்டேன்.

"பவானி,ஆறு மாசமா இருக்கேன்"என்றாள்

"ஆப்பிள் வாங்கிக்கலையே. சிம்லாலேந்து இன்றுதான் வந்தது'என்றவுடன் அதையும் எடுத்துக்கொண்டேன்.

"அடிக்கடி வாங்க அம்மா' என்று விடை கொடுத்தாள்.ஒரு மன நிறைவோடு வீடு சென்றும் அவள் முகம் மனதை விட்டு அகலவில்லை

நான்கு நாட்கள் கழித்து ஏனோ பரபரவென்று மறுபடியும் அதே கடைக்கு சென்றேன்.பவானியை காணவில்லை.சற்று ஏமாற்றம். கறிகாய்களை பொறுக்கி கொண்டு வந்தேன்.இன்று வேறு பெண்.அதே வயது. ஆனால் முகத்தில் சிரிப்பு இல்லை...ஒரு வித உணர்ச்சியும் இல்லை.ஒரு வார்த்தை பேசாமல் பில் போட ஆரம்பித்தாள்.உருளை கிழங்கு சற்று அதிகமாக இருந்ததால், கொஞ்சத்தை எடுத்து வைத்தேன்."முன்னாடியே சரியாக கொண்டு வந்திருக்கலாமே " என்று வெடுக்கென்று சொன்னாள்.

:அளவு சரியாக தெரியலை" என்றேன்

"பரவாயில்லை .ஆனால் நாங்க அங்கே மறுபடியும் போய் வைக்க வேண்டும்" என்றாள் ஏதோ நான் பெரிய தப்பு பண்ணினாபோல எனக்கு ஏன் இன்று இங்கே வந்தோம் என்று ஆகிவிட்டது.
500 ரூபாய் நோட்டு கொடுத்தேன்..300 ரூபாய் இல்லையா" என்றாள்

வீடு திரும்புகையில் யோசனை.. ஒரே வேலைதான்.ஒரே வயதுள்ள பெண்கள்தான்.ஆனாலும் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள்.வீட்டு சூழ்நிலையோ,அல்லது வளர்த்த விதமோ அல்லது வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏமாற்றங்களோ ஏதோ ஒன்று இப்படி மாறுபாடாக உருவாக்கி உள்ளது.

பவானி மாதிரி இருக்க யாராவது சொல்லி கொடுத்தால் எப்படி உலகம் இருக்கும்..கடைக்கு போய்வருவதே ஒரு சுகானுபவமாக இருக்குமே.ஒவ்வொருவரும் தினம் காலையில் இன்று பவானி மாதிரி சிரித்த முகத்துடனே இருப்போம் என்று தீர்மானித்துகொண்டால் வாழ்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். சற்று யோசித்து பாருங்கள்..
.. .

Wednesday, October 20, 2010

பொறாமை

நான் பிறந்த போது அதே வாரத்தில் பாட்டி வீட்டில் இன்னும் மூன்று குழந்தைகள் வேறு உறவினர்களுக்கு பிறந்ததாம். நான் மட்டும் மா நிறத்திற்கும் கம்மி. . .அம்மா அப்படிதான் சொல்லுவாள். கருப்புன்னு சொல்லமாட்டாள். எல்லோரும் குழதைகளை பார்க்க வருகையில் மற்ற குழந்தைகளை கையில் எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொஞ்சுவார்கள்.. என்னுடைய கையில் 2 ரூபாயை திணித்து விட்டு சென்று விடுவார்கள்.அம்மா மட்டும்தான் முத்தமிடுவாள். .அப்போதே பொறாமைக்கு மனதில் வேர் ஊன்றி வித்து விட்டது!!!. .அப்புறம் கேட்பானேன். .எதற்கும் பொறாமை. தான்.நான் நான்காவது குழந்தை. ஆண்டுநிறைவிற்கு காது குத்தி ஈர்க்குச்சி தான் போட்டார்கள். மற்ற குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் மேள தாளத்தோட . ஊரை கூட்டி பெரிது படுத்தினார்கள்.

நான் முதலில் படித்தது கார்பொரேஷன் ஸ்கூலில். .அவர்களோ ப்ரைவேட் ஸ்கூலில். டீச்சர் என்னை கடைசி பெஞ்சில் உட்கார வைத்தாள்.கருப்புன்னா கடைசீயா?...எனக்கு முந்தைய வருஷம் அண்ணன் படித்த பழைய புத்தகங்கள்தான்.மற்றவர்களுக்கோ புத்தம் புது வாசனையோடு உள்ள புது புஸ்தகங்கள்..என்னை விட யாராவது ஒரு மார்க் மேல வாங்கினாக்கூட பொறாமை படுவேன்.

ஏழாவதோ அல்லது எட்டாவதோ கூட அன்னபூரணி படித்து கொண்டிருந்தாள்.அழகி என்று ஒரு ஞாபகம்.அவள் மற்றவர்களை விட என்னுடன் அதிகம் பேசியும் பழகியும் வந்தாள். இருந்தாலும் அவள் யாரிடமாவது ஒரு நிமிடத்திற்கு மேல் பேசினால் எனாகு ஒரே எரிச்சல் வரும். அந்த சின்ன வயதிலேயே.

எனக்கு இன்ஜினீயரிங் படிக்க வசதி இல்லை.படித்தவர்களை கண்டால் ஒரு புழுங்கல்.நல்ல வேலை கிடைத்தது.நிறைய சம்பளம்.இருந்தும் என்னுடன் படித்தவர்கள் அமெரிக்காவிற்கு சென்றால் ஒரு நெருடல் மனதிற்குள்.

என் மனைவி . படித்தவள் சுமாரான அழகு உள்ளவள். சாதுர்யமாக பேசுவாள்..அவள் கூட வேலை செய்பவர் போனில் பேசினால் ஒரு சந்தேகம் கலந்த பொறாமை.. எனக்கு பிறந்தது மூன்றும் பெண்கள்.. கூட பிறந்தவர்களுக்கு எல்லாம் ஆண் பிள்ளைகள்.இதில் பொறாமை பட என்ன இருக்கு.இருந்தாலும் உள்ளூர அவர்களிடம் ஒரு வெறுப்பு.

என் பெண்கள் இருவரும் பாட்டு கற்றுக்கொள்ள மாட்டேன்னு ஒரு பிடிவாதம்..அண்ணன் பிள்ளைகள் வேலையை தவிர ஒருவன் கச்சேரி பண்ணுகிறான். இன்னொருவன் வயலின் வாசிக்கறான்..அதிலும் பொறாமை..

ஆபீசில் வளைந்து கொடுக்க தெரியவில்லை.ஓரளவுக்கு மேல் உயர முடியவில்லை.மற்றவர்கள் சாதாரணமான திறமையோடு என்னைவிட பெரியபதவிகளுக்கு உயர்த்தபட்டார்கள்..ஓய்வு பெற்றவுடன் என்னை வைத்துக்கொள்ளவில்லை.சொத்து அதிகம் சேர்க்க முடியவில்லை.ரெண்டு பெண்கள் கல்யாணம்.ஊருக்கு வெளியே ஒரு சின்ன வீட்டில் குடித்தனம்.மற்றவர்களோ பங்களாவில் வாசம். கொடுப்பினை இல்லையென்று பொறாமை.

.வயது ஆகிவிட்டது. தம்பிகள் இறந்துவிட்டார்கள். பகவான் அதிலும் பாரபட்சமா? என்னை கொண்டு போகவில்லையே என்று ஒரு ஆதங்கம். வாழ்க்கை பூராவும் பொறாமை பட்டே கழித்தாயிற்று..
பொறாமை என்று வெளியே சொல்லாமல் உள்ளே பலர் புழுங்குவார்கள்,. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?தலை எழுத்தா அல்லது பூர்வ ஜன்ம வினைகளா? ஞானிகளை தவிர சாதாரண பட்டவர்களால்.தலை விதி என்று பொறாமை படாமல் இருக்க இயலுமா? வாயை திறந்து ஏதாவது சொல்லுங்களேன். .

பெருமாள் கோவில் பொங்கல்

அலமேலு மார்கழி மாதத்தில் ஒரு நாள் தவறாமல்  தினம் அதிகாலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவாள். குளித்து விட்டு ச்ரத்தையாக நெய்யும் முந்திரியும் சேர்த்து வெண் பொங்கலை பகவான் ஆராதனத்துக்கு தயார் செய்து விடுவாள்.அவள் கணவனும் தவறாமல் பெருமாளுக்கு நிவேதனம் செய்துவிடுவார்.

"சேஷாத்ரி,,எழுந்துக்கோ, மணி ஐந்தேமுக்கால் ஆறது. .பல் தேச்சுவிட்டு வா.பொங்கல் சாப்பிட." என்றாள்

"இப்போ பொங்கல் வேண்டாம். .பிடிக்கலை" னு பதில் வந்தது.

"என்னமோ எப்போதும் தூக்கம்"னு சலிச்சு கொண்டாள்.

டாண்னு 6 மணிக்கு பக்கத்து கோவிலிலேந்து மணி அடிக்கற சப்தம் கேட்டது..உடனே அலறி புடைத்துக்கொண்டு சேஷாத்ரி எழுந்து பல்லை தேச்ச கையோடு கோவிலுக்கு ஓடினான். அங்கு கூட்டத்தில் முன்னுக்கு தன்னை தள்ளிக்கொண்டு பிரசாதத்தை வாங்கிவிட்டான் .அரைமணிக்குள்ளே கையில் எலுமிச்சம் பழம் அளவில் பொங்கலை வாங்கிகொண்டு வந்தான்..

"ஏண்டா சேஷாத்ரி, இங்க வீட்டுலே நல்ல பொங்கல் நிறைய நெய்யை கொட்டி முந்திரியும் போட்டு பண்ணி இருக்கச்சே வேண்டாம் நு சொல்லிவிட்டு, கோவிலிலேந்து தம்மாதூண்டு வாங்கிண்டு வரயே.. எனக்கு ஒன்னும் புரியலையே ." என்றாள் அலமேலு.

"அம்மா,,தப்பிய எடுத்துக்காதே, கோவில் பொங்கலுக்கு உள்ள வாசனை உன்னோட பொங்கலிலே இல்லையே' என்றான்.

நெய்யும் இல்லாம ஒண்ணுமில்லாம கோந்து மாதிரி இருந்தது. .அலமேலுக்கு ஒரே மன உளைச்சல்..என்ன காரணமாக இருக்கலாம் சேஷாத்ரியின் மனோபாவத்திற்கு என்று யோசித்தாள்.

இலவசத்தில இருக்கிற ஈர்ப்போ அல்லது தெய்வ பிரசாதம் என்கிற எண்ணமோ அல்லது .போட்டி போட்டு கிடைப்பதில் உள்ள உத்சாகமோ அல்லது வாஸ்தவமாகவே கோவில் பொங்கல் தன்னுடையதைவிட நன்றாக உள்ளதோ என்று பல காரணங்களை அலசினாள். .சரியான விடை கிடைக்கவில்லை அவளுக்கு.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்,பாவம்..
....
.

Tuesday, October 19, 2010

மனம் ஒரு விந்தை

மனதில் நிம்மதி இல்லை.. கோவிலில் முருகனோ ஜ்கஜ்ஜ்யோதியாக மின்னிக்கொண்டிருந்தான். மனதோ இறுகித்தான் இருந்தது.. கடற்கரையில் குளிர்ந்த காற்று..உள்ளே புழுக்கம். கூட்டத்தில் காமெடி பேச்சு வெறுப்பை கொடுத்தது. ஒரே பசி. காசில்லை.

குழந்தை அழுதுக்கொண்டிருந்தது.. தவற விட்டுவிட்டார்கள். நல்ல வேளை,ஜேபியில் விலாசம் இருந்தது..குச்சி ஐஸ் கிரீம் கேட்டது..ஐந்து ரூபாயும் காலி.. ஆட்டோவில் குழந்தையை தாயிடம் சேர்ப்பிதேன்.ஓட்டுனருக்கு காசுக்கு பதிலாக கை கடிகாரத்தை கொடுத்தேன் ..
மனது லேசாகி விட்டது.வாயில் ஒரு பாட்டு.

Monday, October 18, 2010

இலவசத்தின் மயக்கம்

பாக்யத்தின் கணவன் மொடாக்குடியன்.. காசுக்காக தினம் அடிப்பான்.. வீட்டில் குந்துமணி அரிசி இல்லை. .மூன்று குழந்தைகளும் நான்கு நாட்களாக பட்டினி. ஒரு வேளை கஞ்சிதான். கிடைக்கும் பிசாத்து இரண்டாயிரம் ரூபாய் ஒரு வாரம் கூட போறாது. . கிடைக்கும் மீந்த சோறில் மற்ற நாட்கள் ஓடும்.அதுவும் நிச்சயமில்லை.

இன்று குடிசையில் பசியோடு குழந்தைகள் கும்மாளம். ஒரே சிரிப்பு .சிம்னி விளக்கு பெரிதாக எரிந்து கொண்டிருக்கிறது. பாக்யத்தின் முகத்தில் ஒரே சந்தோசம்..காரணம அவளுக்கு இன்று இலவச டிவி கிடைத்தது
..

'பெண்களின் விடுதலை

'பெண்களின் காவலர்' ஜெயசீலர் என்றுமே கண்ணை பறிக்கும் வெள்ளை உடையில் இருப்பார். ஒரு அப்பழுக்கு இராது. இன்று அகில இந்திய பெண்கள் மாநாட்டில் 'பெண்களின் விடுதலையே என் மூச்சு' என்கிற தலைப்பில் முழங்கி கொண்டீருந்தார். என்னே இவ்வளவு ஈடுபாடு பெண்களின் நலத்தில் என்று அவர் பேச்சிற்கு ஆரவார வரவேற்பு

கூட்டம் முடிந்த கையோடு அவர் தலைமையில் நடக்கும் பெண்கள் அனாதை இல்லத்திற்கு விரைந்தார். அங்கு பெண்கள் கலக்கத்தோடு நடுநடுங்கி கொண்டிருந்தனர்.இன்று அவர் பசிக்கு யார் பலியோ என்கிற குழப்பத்தில்.

Saturday, October 16, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்

ராதா தினமும் கோவிலில் அதே இடத்தில் அதே தூணுக்கு அடியில் அந்த மூதாட்டியை. பார்க்கிறாள்..கையில் ஏதோ புத்தகம். வாய் எப்பொழுதும் முணுமுணுத்துக்கொண்டு இருக்கும்..வயது எண்பதுக்கு குறைவில்லாமல் இருக்கலாம். களையான முகம் பார்க்க வசதியான குடும்பம் போல தெரிகிறது.. ஆனால் கண்களில் ஒருசோகம்.அதிகம் சன்னதிகளில் நிற்பதை பார்த்ததில்லை.ராதாவின் மனதில் ஒரு நெருடல்.

'சித்த வாடியம்மா. .கொஞ்சம் ஒத்தாசை பண்ணு. தலையை கிர்ர்ருன்னு அடிக்கறது' என்று குரல் கேட்டு ராதா திரும்பினாள் .பாட்டி எழுந்துக்கொள்ள முயற்ச்சி பண்ணிக்கொண்டு இருப்பதை பார்த்து கை கொடுத்தாள்..

'"ரொம்ப நல்ல பொண்ணு.உன்னோட பேர் என்ன? "என்று வினாவினாள்

அப்புறம் தினம் ஒரு சிரிப்பு, ஒரு குசலம் இப்படியே நெருக்கமாகிவிட்டார்கள். பாட்டிக்கு ராதாவை மிகவும் பிடித்து விட்டது.அவளுக்கும் பாட்டியின் மேல் ஒரு அனுதாபம் கலந்த அபிமானம்..

"உனக்கு எவ்வளவு குழந்தைகள்? உன் வீடு இங்க பக்கத்திலேயேதான் இருக்கா?ஒரு நாள் அழைச்சுண்டு போறயா?" என்று பாட்டி கேட்டாள்.

'இப்பவே வாருங்களேன் பாட்டி... ரொம்ப பக்கத்துல தான். இருக்கு . இங்கயே இருங்க,.ஒரு ஆட்டோ கூட்டிண்டு வந்துடறேன்" ன்னு சொன்னாள்.

"ஆட்டோ வெல்லாம் வேண்டாம் வண்டி இருக்கு'நு பாட்டி சொன்னாள்.

வெளில கப்பலை போல ஒரு கார் நின்று கொண்டு இருந்தது..டிரைவர் மிகவும் பவ்யமாக கதவை திறந்து வசதி பண்ணினார்..ரொம்ப பணக்காரா போல என்று ராதா நினைத்தாள்.அவள் வீடோ ஒரூ மூணு ரூம் ஒண்டு குடித்தனம்.அதுல இருட்டு வேர.கொஞ்சம் தயக்கத்தோடு உள்ளே அழைத்து சென்றாள்.பாட்டி உட்கார....ஒரு ஸ்டூலை இழுத்து போட்டாள்

ஒடிசலா ஒரு பொண்ணு நின்று கொண்டு இருந்தாள்..

"இவள் என்ன பண்ணிண்டு இருக்காள்னு பாட்டி கேட்டாள்

பன்னிரண்டு முடிச்சாச்சு.இஞ்சினீரிங் படிக்கணும்னு மாதங்கி ஆசைப் படறாள். .காலேஜ்ல நிறைய பணம் கட்ட சொல்றா..நாங்க சாதா படிப்பு போறும்னு சொல்றோம். .கேக்கமாட்டேன்னு அடம் பிடிக்கறா

எந்த காலேஜ்? இவ பேரு என்ன? .கம்ப்யுடரா ? என்று கேட்டு தெரிந்து கொண்ட பிறகு கிளம்பிவிட்டாள்.

கிட்டதட்ட ராதா பாட்டியை இரண்டு வாரத்துக்கு மேலே கோவிலில் பார்க்கவில்லை.என்ன காரணமோ உடல் நலம் சரி இல்லையோ என்று யோசனை அவளுக்கு. .அர்ச்சகரை கேட்டால் அவருக்கும் தெரிய வில்லை...

திடீர் என்று ஒரு நாள் இஞ்சினீரிங் காலேஜ்லிருந்து வரச்சொல்லி போன் வந்தது..பணம் கட்ட வசதி இல்லைன்னு சொல்லியும் மறுபடி கூப்பிட்டு அனுப்பித்தால் எப்படி என்று யோசனையோடு ராதா பொண்ணை கூட்டிக்கொண்டு போனாள்..அங்கு அவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்து கொண்டு இருந்தது. .நான்கு வருஷ படிப்புக்கும் யாரோ முழு பணத்தை கட்டிவிட்டதாகவும் பேரை வெளியிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதாக சொன்னார்கள்..
யாராக விருக்கும் ஏகப்பட்ட பணமாச்சே ன்னு ராதாக்கு மன உளைச்சல்.. பாட்டியாகத்தான் இருக்கும் வேற பணக்காரா யாரும் தனக்கு தெரியாதேன்னு ஒரு சந்தேகம்

கோவில் ஆபீசில் பாட்டி விலாசம் கிடைத்தது.உடல் நலம் எப்படி இருக்கோன்னு விசாரிக்கலாமென்று ராதா அங்கு சென்றாள். பெரிய பங்களா.வாசலில் கூர்க்கா.யாரு,யாரை பார்க்கணும் என்று கேள்வி..பாட்டி பேரும் தெரியாது..எப்படியோ உள்ளே அனுமதிக்க பட்டாள்.யாரோ ஒரு பெண்மணி " நீங்க யாரு,பாட்டிக்கு உடல் ரொம்ப மோசமா இருக்கு.பாரிச வாயு வந்து பேச்சு இல்லை.கால்கள் இடது கை அசைக்க முடியலை..ஞாபகம் இருக்கு.ஒரே ஒரு நிமிஷம் பார்த்து விட்டு வந்துடனும்" என்று ..முன் கூட்டியே சொல்லி உள்ளே அறைக்கு கூட்டி சென்றாள்.

"பாட்டி,உங்களை பார்க்க யாரோ வந்து இருக்கா. கோவிலில் பரிச்ச்சயமாம். .ராதான்னு பேரு."என்று சொன்னாள்.

பாட்டிக்கு சற்று புரியவில்லை.கிட்ட வரும்படி கையை அசைத்தாள்

"பாட்டி ,எப்படி இருக்கு இப்பொழுது ?.மூன்று வாரத்துக்கு மேல ஆச்சு உங்களை பார்த்து. இபோதான் விலாசம் கிடைத்தது. நான்தான் ராதா.தெரியறதா? என்று வினாவினாள்..

ராதாவின் முகத்தை தடவி கொடுத்தபடி பொண்ணு எங்கே ன்னு ஜாடையால் கேட்டாள்.
"நாளைக்கு அழைத்து கொண்டு வருகிறேன்' என்றாள்

அந்த பெண்மணி போறும் பேசியது என்று வெளியே கூட்டி சென்றாள்.

மறு நாள் சனிக்கிழமை.பொண்ணை கூட்டிக்கொண்டு ராதா பாட்டியை பார்க்க சென்றாள். .வாசலில் ஒரே கார்கள்.மனுஷா கூட்டம். திக்கென்றது ராதாவிற்கு தயங்கியபடி கூர்க்காவின் அருகில் சென்றாள்."பாட்டி kal ராத்கோ மர்கயா'ன்னு சொன்னான். துக்கம் பீரிட்டு கொண்டு வந்தது.

இப்படியும் இந்த காலத்தில் விளம்பரமில்லாது ஒரு பெண்மணியா?தன்னோட உபகாரம் வெளில யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் ஒரு தீவிரம்..எப்பேர்பட்ட இளகிய தாராள மனம் இப்படி ஆகி விட்டதே என்று. அழுகை அடக்கமுடியாமல் வந்தது.. தலைப்பால் வாயை மூடிக்கொண்டு பெண்ணோடு வேகமாக வீட்டுக்கு சென்றாள்.
"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட் டாங்கில் உள்ள படி" .
. ..

Wednesday, October 13, 2010

எதிர் பாராதது

சப் இன்ஸ்பெக்டர் அய்யா போலீஸ் ஸ்டேஷனில் தூங்கி கொண்டிருக்கிறார்

"அய்யா,மாட்டுக்கு சொந்தக்காரம்மா மாட்டை கூட்டிண்டு போக அனுமதி கேக்கறாங்க"
போலீஸ்காரர் பவ்யமாக சொல்றார்

"2௦௦ ரூபாய் கட்ட சொல்லு" .

"மாட்டேங்கிறாங்க "

"அவ்வளவு திமிரா? அவங்களையும் மாட்டோட கட்டி போடு "

"முடியாது அய்யா"

என்னடா,எதிர்த்து பேசரே,நாய்"

"நீங்களே வந்து பாருங்க"

சப்-இன்ஸ்பெக்டர் வெளில தன மனைவி கோபத்தோடு நிற்பதை பார்க்கிறார்

Tuesday, October 12, 2010

தாத்தாவின் சிரிப்பு

ராமண்ணாவுக்கு கிட்ட தட்ட எண்பது ஆகிறது.உடம்பு கொஞ்சம் ஒடுங்கினாலும் பலமாகத்தான் இருக்கிறார்.கண்ணு,காது எல்லாம் சரியாக இருக்கு.மூன்று பிள்ளைகள் மூன்று பெண்கள் பக்கத்திலேயே தான் தனித் தனியாக குடி இருக்கிறார்கள்.சரோஜா மாமிக்கு கூட மாட ஒத்தாசைக்கு ஒரு பொண்ணு .வீட்டோட இருக்கு.எல்லோரும் அடிக்கடி வந்துண்டு போயிண்டு இருப்பார்கள்.ராமண்ணாவுக்கு பணப் பசை உண்டு...கஷ்ட ஜீவனம் இல்லை. இருந்தாலும் இந்த வயசான காலத்தில் மனைவியோட தனியாகத்தான் சமாளிச்சுண்டு இருக்கார்.மாமிக்கு தள்ளாமை வந்துடுத்து. .சலிச்சுண்டே இருப்பா. .சட்டு புட்டுன்னு எழுந்துக்க முடியாது. இவரோ நொடிக்கு நொடி வெந்நீர் கொண்டு வா,கண்ணாடி எடுத்துண்டு வா ன்னு தொந்திரவு பண்ணிண்டே இருப்பார். பசங்கள் ஒண்ணும் காதுல போட்டுக்கற மாதிரி தெரியலை..

கார்த்தாலை ஏழு மணியாகிறது .இதுக்குள்ள பத்து தடவையாவது காபி ஆச்சான்னு பூனை குட்டி மாதிரி சமையல் உள்ளுக்கு வந்து இருப்பார்.ஆனால் இன்னைக்கு சப்தமே இல்லை. மாமி காலை தேச்சுண்டு தேச்சுண்டு போனா. மலங்க மலங்க முழிச்சு பார்த்துண்டே இருக்கார்."ஏன்னா என்ன ஆச்சு இன்னைக்கு?உடம்பு முடியலையா? ஏன் இப்படி முழிச்சி பார்த்துண்டே இருக்கேள்?" மாமி கவலையோடு கேட்டார்.

பதிலே இல்லை.வெறிச்சு பார்த்துண்டு இருக்கார் மாமி மூஞ்சியை...மாமிக்கு ஒரே பயமாயிடுத்து.."அடியே மங்களா,போனை போட்டு பசங்களை உடனே வர சொல்லு" னு கத்தினாள். “போறாத தலை வலிக்கு இந்த பிராம்மணன் சித்த பிரமை பிடிச்சமாதிரி இருக்காரே.நான் என்ன பண்ணுவேன்?நன்னா இருக்கச்சயே தொந்திரவு தாளலை. இது என்ன திருகு வலி நான் என்னவெல்லாம் அனுபவிக்க போறேனோ தெரியலையே னு புலம்ப ஆரம்பிச்சுட்டா.

மூத்த பிள்ளை சப்தமா கத்தினான் "அப்பா என்னது இது கலாட்டா பண்றேள் காலங் கார்த்தாலை. கேட்டா பதில் சொல்லாம இருந்தா எப்படி?" அதுக்கும் முழிச்சு பார்த்துண்டு இருக்கார் மோட்டு வளையை பார்த்துண்டு..காது கீது கேக்கலையோனு டபராவை கீழ போட்டான். .உடனே திரும்பி பார்க்கறார்.அதே வெறிச்ச பார்வை யாரையும் அடையாளம் கண்டு கொள்ளாமல்.

சின்ன பிள்ளை ரொம்ப மெள்ளமா கேட்டான் 'அப்பா,என்ன பண்றது உடம்புக்கு.ஏதாவது கஷ்டமா இருக்கா?.டாக்டர் ஐ வர சொல்லி இருக்கு.வாயை திறந்து ஒரு வார்த்தை சொன்னா போறும். .எல்லாருக்கும் கவலையா இருக்கு நீங்க இப்படி மௌனமா இருந்தால்'.

மாமி அழ ஆரம்பிச்சுட்டால் “இவரை வெச்சுண்டு தனியா நான் என்ன பண்ணுவேன்?போக்கிடமே இல்லையே எனக்கு .ஏன் பகவான் இப்படி என்னை சோதனை பண்றாரோ?” ' இரண்டு மாட்டு பொண்ணுகளும் தலையை திருப்பிண்டு வேற எங்கயோ பார்த்துண்டு இருந்தார்கள்.

டாக்டர் வித வித மாக டெஸ்ட் எல்லாம் பண்ணி பார்த்துட்டு "எல்லாம் சரியாகத்தான் இருக்கு.என்ன வென்று புரியலை.கொஞ்சம் நாளாகட்டும். பிறகு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்" என்றார்.

பொண்ணு "அம்மாவால தனியா பார்த்ததுக்க முடியாதே.நீங்கள்ளாம் .என்ன பண்றதா உத்தேசம் ? னு அண்ணன்களை பார்த்தவாறு சொன்னாள்

மூத்தவன் "நான் இருக்கிறது 2 பெட் ரூம் பிளாட்.ரெண்டு பிள்ளை ஒரு பொண்ணு.அம்மா அப்பாக்கு இடம் எங்கே? நீயே சொல்லுனு சொன்னான்.

சின்னவன் "என்னோட மாமியார் மாமனார் கூட இருக்கிறது உனக்கு தெரியாதா என்னை.என்னமோ கேழ்க்கரயே.தம்பி வேர மும்பைல சின்ன இடத்துல இருக்கான். .நீங்க தான் யாரவது வெச்சுக்கணும்.சமயத்துக்கு உதவி பண்ணாட்டா எப்படி?"

“நாங்க ஆத்துக்காரரை கேக்கணும் .அவ்வளவு சுலபம் இல்லை.இவா ரெண்டு பேரும் தற்சமயம் இப்படியே இருக்கட்டும்.நாம்ப தினம் வந்து பார்த்துண்டு போகலாம்."னு சொன்னாள்.

"எனக்கு ஒன்று தோன்றது.எதுக்கும் வக்கீலை பார்த்து அப்பா இப்படி இருக்கார். .உயில் எழுதினாரா இல்லையானு தெரியலை.என்ன பண்றது னு கேக்கலாம்"னு பெரியவன் சொன்னான். .சின்னவனும் தலையை ஆட்டினான். அந்த கிழவர் இவ ரெண்டு பேரையும் முழுச்சி பார்த்துண்டே இருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவரோட அவர் எட்டு வயது பேரன் மாத்திரம் இருந்தான். மாமி வாசல் பக்கம் தூங்கிண்டு இருந்தாள்.

"தாத்தா நீ என்னோட மட்டும் பேசுவியா?எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் "னு சொன்னான்..கிழவர் அவனை தன பக்கம் இழுத்து வெச்சுண்டு உச்சி மோந்தார்."உனக்கு என்னை பேசணும்னு சொல்லு" என்றார்.

"தாத்தா நீ நன்னா பேசறியே .உனக்கு பைத்தியம் பிடிச்சுடுத்துன்னு அம்மா சித்தி கிட்ட சொன்னாளே"னு கத்தினான்.

உஷ் சத்தம் போடாதே. இப்போதான் புரியறது யார் யார் எப்படின்னு. ..யார் கிட்டயும் சொல்லாதே" னு கிழவர் சொன்னார்.

மாமி மெல்ல வந்து "இங்க ஏதோ பேசற சப்தம் கேட்டதே" என்று கேட்டாள்.

"நான்தான் பாட்டி. .தாத்தா என்ன கேட்டாலும் பதில் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார்.'னு பையன் பதில் சொன்னான்..

" என் தலை விதி "நு மண்டைல அடித்து கொண்டாள்

தாத்தா சிரிக்கர மாதிரி பேரனுக்கு தோணித்து.. .
.. . ...