சீர்காழி அருகில் கொள்ளிடம் ஆறு பக்கத்துல பச்சைபசேல்னு விண்ணகரம் கிராமம். சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வயல்களும்,கால்வாய்களும் கண்களுக்கு குளிமையும்,மனதிற்கு இதமும் தந்தன.சற்று தள்ளி ஒரு பெரிய தோட்டம்.உள்ளே விசாலமான வீடு.சுற்றிலும் தாழ்வாரம்.நிறைய மரங்களும்,பூச்செடிகளும் உள்ள தோட்டம் மிக சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.
தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் வேங்கடரங்க முதலியார் அமர்ந்து இருந்தார்.பெரிய ஆகிருதி. நெற்றியில் பளிச்சென்று விபூதியும் குங்கும பொட்டும் தெரிந்தது. முகத்தில் சாந்தமும் கண்களின் ஓரத்தில் சற்று புன்னகையும் இழையோடிக்கொண்டிருந்தது.பக்கத்தில்மூன்று நான்கு மனிதர்கள் இடுப்பில் கட்டப்பட்ட மேல்துண்டோடு பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.பதினைந்து அடி தள்ளி தரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். .
"எலே,உன்னோட பேரு சக்ரபாணி தானே?" என்று கேட்டார்.
"இல்லை ஐயா,சாரங்கபாணி."
"நல்லது,ஏதோ ஒரு பாணி.பெருமாள் பேரு.நன்னா படிச்சுண்டு இருக்கியா?மார்க்கு எல்லாம் நன்னா வாங்கறயா?"
"வகுப்பில மூணாவது ஐயா.அடுத்த தடவை இன்னும் நன்னா வாங்க முயற்சி பண்ணுகிறேன் ஐயா"
"நல்லது, அடுத்த தடவை வரும்போது மார்க்கு எவ்வளவுன்னு காண்பி "
கணக்கு பிள்ளையை பார்த்து "பையனிடம் ஆயிரம் ரூபாய் கொடும்"என்றார்.
"பத்துமா?புக்கெல்லாம் இருக்கா?"என்றார்
"இது போதும் ஐயா"
"அப்பா என்ன பண்ணுகிறார்?"
"அப்பா இறந்து மூன்று வருஷமாச்சு"
"அடப்பாவமே! ஜீவனம் எப்படி?"
"அம்மாதான் அக்கம்பக்கத்து வீட்டிலே உதவி பண்ணுவா"
"பாவம்,சொக்காய் கிழிஞ்சு இருக்கே.500 ரூபாய் தரேன்.சொக்காய் வாங்கிக்கோ. உன்னோட கிராமம் எங்கே?கணக்கு பிள்ளையிடம் சொல்லு.ஒரு மூட்டை அரிசி அனுப்புவார்" என்றார்
பிறகு ஒரு உதவியாளரிடம் ஏதோ காதில் கிசுகிசுத்தார்.
"நீ அய்யங்கார் தானே.நெற்றியில் ஸ்ரீசூர்ணமாவது இட்டுக்கொள்ள கூடாதா?ஏதாவது சாப்பிட்டியா?"
"காலையில் இட்டுக்கொண்டேன் ஐயா.கொள்ளிடம் ரயிலடிலிருந்து நடந்து வருகையில் வியர்வையில் அழிந்து விட்டது.மன்னியுங்கள்."
"பரவாயில்லை. உள்ளே போயி வாழைப்பழம்,மோறு சாப்பிடு."
அதற்குள் அந்த உதவியாளர் கையில் இரண்டு புதிய ஜோடி வேஷ்டி,சவுக்கத்துடன் வந்தார்."இதை வாங்கிக்கோ, பணத்தையும் கணக்கு பிள்ளையிடம் வாங்கிக்கோ.மாட்டு வண்டியில் உன்னை உன்னோட வீட்டில் விட சொல்லியிருக்கேன்.நன்னா படி.கல்லூரி வரை உனக்கு உதவி பண்ணுகிறேன்" என்றார்
கண்களில் நீர் பணிக்க அப்படியே அவர் காலில் சாஷ்டங்கமாக விழுந்தான்.
சற்று நேரத்தில் மாட்டு வண்டியில் அரிசி மூட்டை, பருப்பு வகையறா,வாழைக்குலை, ,காய்கறிகளுடனும்,புடவை வேஷ்டியுடன் ஒரே பரவசமாக வல்லம்படுகை அருகில் உள்ள தன கிராமத்திற்கு பயணித்து கொண்டிருந்தான்.மனமெல்லாம் அவருடைய ஈகையும் தாரள மனப்பான்மையும்,கரிசனமும் நிறைந்து இருந்தது.
வருடங்கள் பல ஓடியது. சிறப்பாக படித்து இப்பொழுது சாரங்கபாணி நாகபட்டினம் ஜில்லாவிற்கு கலெக்டராக பணி புரிந்து கொண்டிருந்தார். .
ஒரு நாள் கலெக்டர் அறையில் ஒரு இளம் நபர் 25 வயது இருக்கலாம் நுழைந்தார்.என்ன விஷயம் என்கிற கேள்வி குறியோடு அந்த இளைஞரை பார்த்தார்.
"அய்யா,நான் சீர்காழி பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து வருகிறேன்.எங்கள் நிலத்திற்கு வரும் கால்வாயை அடைத்து தன்னுடைய நிலத்திற்கு நீர் பாசனம் செய்து கொண்டு இருக்கிறார் பக்கத்து நில சொந்தக்காரர். கேட்டால் அடாவடி பண்ணுகிறார்.கட்சிகாரர் என்பதால் மிரட்டவும் செய்கிறார்.எங்கள் பயிர் வாடி கொண்டிருக்கிறது.கிராம பஞ்சாயத்து,தாலுகா ஆபீசிலும் சொல்லி பலன் ஏதுமில்லை.நீங்கள்தான் விசாரிச்சு ஆவன சைய்ய வேண்டும்"என்று பவ்யமாக விண்ணப்பித்தார்.
"எந்த கிராமம்?"
"ஆச்சாள்புரம் பக்கத்தில் விண்ணகரம்"
"அடேடே,அங்கு வேங்கடரங்கம் முதலியார் நு ஒரு பெரியவர் உண்டே. அவர் நலமா?எப்படி இருக்கிறார்?"
"அவர் என்னுடைய தாத்தா தான்.நான் அவர் பெண் வயத்து பேரன்.பாரிச வாயுவினால் படுத்த படுக்கையாக உள்ளார். பேசவும் முடியாது வயதும் ரொம்ப ஆகிவிட்டது."என்றார் அந்த இளைஞர்.
"சரி,நில விவரங்களை காரியதரிசியுடன் கொடுங்கள்.நான் கூடிய சீக்கிரம் கவனிக்கிறேன்."
இரெண்டாம் நாள் தாசில்தார் மற்ற அலுவர்களுடன் அதிசயமாக முதலியார் வீட்டுக்கு வந்திருந்தனர்.
முதலியார் பேரனிடம் "எதற்கு கலெக்டரிடம் போனீங்க?எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நாங்க தேவையானதை சைய்ய மாட்டோமா? கால்வாய் அடைப்பை எடுத்தாச்சு.இனி அப்படி நடக்காது.இதோடு கலெக்டரிடம் விட்டுட சொல்லுங்க.மேல எங்க பேரிலும் மற்றவங்க பேரிலும் நடவடிக்கை எடுக்காமலிருக்க சொல்லுங்க " என்றார்.
பேரன் பல தடவை தாசில்தார் ஆபீசுக்கு வந்தும் ஒன்றும் அவர் சைய்யாததை சொல்லவில்லை. "சரி,அவரிடம்சொல்லுகிறேன்" என்றான்.
மனதிற்குள் கலெக்டர் எவ்வளவு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஆச்சரியமும் அவர் மீது மரியாதையும் தோன்றியது.உடனேயே தாத்தாவிடம் புது கலெக்டர் பற்றியும் அவர் எடுத்த நடவடிக்கை விஷயத்தையும் சொன்னான்.அவரால் பேச முடியாமலிருந்தும் முகத்தில் சந்தோசம் தெரிந்தது.
அன்று மதியமே முதலியார் வீட்டு வாசலில் பெரிய கார் வந்தது.டவாலி போட்ட சேவகர் கையில் பெரிய பழ கூடையுடன் பின்தொடர கலெக்டரே வந்திருந்தார். பேரனுக்கு கை கால் ஓடவில்லை.ஒரே பரவசம்.
"தாத்தாவை பார்க்க வந்திருக்கிறேன்."என்றார்.
கலெக்டரை தாத்தாவின் படுக்கை அறைக்கு அழைத்து சென்றான்.
முதலியாரை உட்கார வைத்து இருந்தனர்.கலெக்டர் தாத்தாவை பார்த்தவுடன் தரையில் விழுந்து சாஷ்டங்கமாக சேவித்தார்.
"ஐயா,நான்தான் சாரங்கபாணி. ஞாபகம் இருக்கா?சிறு வயதில் என்னுடைய படிப்பிற்கு மிகவும் உதவி உள்ளீர்கள்.உங்கள் பேருதவியால் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்
அருகில் வரும்படி சைகை செய்தார்.தலையில் கை வைத்து கண்களில் நீர் வழிய ஆசீர்வாதம் செய்தார்.
கலெக்டரும் கண்களை துடைத்தபடி "நீங்கதான் நான் கண் கண்ட தைய்வம்.எது வேண்டுமானாலும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள்.அடுத்தக்ஷணமே நேரில் வருகிறேன் " என்றார்.