அமலா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள்.லேசாக தலை வலி. ஏசி ஓடிக்
கொண்டிருந்தாலும் சற்று புழுக்கம்.செல்லதுரை பக்கத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். சத்தம் போடாமல் எழுந்து மேஜையின் மேல் டோலோ இருக்கிறதா என்று இருட்டில் துழாவி
.பார்த்தாள்.ஓரத்தில் இருந்த ஒரு புத்தகம் கீழே விழுந்தது.
சப்தத்தை கேட்டு செல்லதுரை கண் விழித்து, "அமலா, நள்ளிரவில் தூங்காமல் என்ன தேடிக்கொண்டிருக்கே? " என்று கேட்டான்.
"சாரி, இருட்டில
புத்தகம் தவறி விழுந்து விட்டது. சற்று தலை வலி..மாத்திரை தேடி .கொண்டிருந்தேன்.
நீங்க தூங்குங்க,".என்றாள்.
"நானும் பார்த்து கொண்டுதான் இருக்கேன். நீ முக்கால் வாசி நாட்கள்
இரவில் சரியாக தூங்குவதே இல்லை.காரணம்
எனக்கு தெரியும்.இழப்பு நம்மிருவருக்கும் தானே? நிர்மலா இறந்து
இரண்டு வருடங்கள் மேலாகிவிட்டது. அதையே நினைத்து கொண்டு தூங்காமல் இருந்தால் அவள்
திரும்பி வர போகிறாளா? உன்
உடம்பு தான் கெடும்..இந்தா,இந்த
மாத்திரையை சாப்பிடு. தூக்க மாத்திரை இல்லை. மனதை சாந்தப்படுத்தும்.இங்கே வந்து
படு." ஒரு கையால் அவளை அணைத்து கொண்டு,மற்றொரு கையால் தலையை லேசாக பிடித்து விட்டான் அவளும்
அவனருகில் இறுக்கமாக நகர்ந்தாள்.சிலநிமிடங்க ளிலேயே அவளும் அந்த இதத்தில் தூங்கி விட்டாள்.
மறு நாள் அவள் வகுப்பில் நுழைந்தவுடன் முதல் பென்ச்சிலே ஒரு புதிய
பெண் உட்கார்ந்து இருப்பதை
கண்டாள். யூனிபார்மில் இல்லாமல் நீல வர்ணத்தில் டெனிம் குட்டை பாவாடையுடன் நீல புள்ளிகள் உள்ள வெள்ளை
சட்டையுடன் காணப்பட்டாள். பன்னிரண்டு வயதிருக்கலாம். கண்கள் ஓரம் சிரிப்பும் பார்க்க மிகவும் அழகாகவும் தென்பட்டாள்.
"புதிதாக சேர்ந்து இருக்கிறாயா? உன்
பெயர் என்ன?" என்று வினாவினாள்.வகுப்பில் ஒரு சிறிய
சலசலப்பு.
"ஆமாம் டீச்சர், என்
பெயர் நிர்மலா,"
தன்னோட பெண்ணின் பெயரை கேட்டவுடன் அமலாவுக்கு ஒரு நொடி
தூக்கி வாரி போட்டது.
" திரும்ப சொல்லு உன் பெயரை," என்றாள்.
வகுப்பில் உள்ள எல்லா சிறுமிகளும் தலைகளை
தூக்கி டீச்சரை ஆச்சரியத்துடன் பார்த்தன.
"நிர்மலா”, என்று
மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
வகுப்பை ஆரம்பித்த பிறகும் அவள் மனம் அந்த சிறுமியை சுற்றியே
ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி ஒரே கண்ணால்
அவளை பார்த்து கொண்டேயும் இருந்தாள்.சொல்ல முடியாத ஏதோ ஒரு இன்பமான
உணர்வில் தன மனம் லேசாகி விட்டது
போல் உணர்ந்தாள்..
வகுப்பு முடிந்ததும் சிறுமிகள் எல்லோரும் தங்கள் நோட் புக்குகளை அவள் மேசையின் மேல் வைத்து விட்டு சென்றார்கள்.
வீட்டுக்கு வந்த பின்னரும் அவள் மனம் அந்த புது சிறுமியை பற்றியும் தன்
இறந்து போன பெண் நிர்மலாவை பற்றியும்
சூழ்ந்து கொண்டிருந்தது. என்ன ஒற்றுமை இருவருக்கும் பல விதங்களில் என நினைத்து ஆச்சரிய பட்டாள். பெயர் மட்டும்
இல்லாமல், ஒரே வயது, உடல் கட்டு.கண்கள் ஓரத்தில் தவழ்ந்த புன்சிரிப்பு, தாழ்ந்த குரலில் பேச்சு
என நினைக்கையில் உடலெல்லாம் புல்லரித்தது
பட்டென எழுந்து சென்று கொண்டு வந்திருந்த நோட்டு புக்குகளை எடுத்து வந்தாள். ஒரே ஒரு நோட் புக்குக்கு அட்டை இல்லை...அதன் மேல் அழகான எழுத்தில்
கொட்டையாக நிர்மலா என எழுதி இருந்தது. அப்போதுதான் தன் மேசை அருகில் அவள் வந்தது ஞாபகம் வந்தது,
பக்கங்களை புரட்டுகையில் முதல்
பக்கத்தில் ஏதோ எழுதி இருந்தது. ஹோம் ஒர்க்காக இருக்க முடியாதே, என்ன எழுதி இருப்பாள் என ஒரு ஆர்வத்துடன் படிக்க
ஆரம்பித்தாள்.
"அன்புள்ள அம்மா,
நான் எப்போதும் உங்களைச் சுற்றியே
இருக்கும் காக்கும் தேவதை(guardian
angel) என்னை பார்க்கா விட்டால் மனம் வருந்த வேண்டாம் .நான் உங்கள்
அருகிலேயே உங்களை பார்த்துக் கொண்டே இருப்பேன்
என்கிற எண்ணத்தோடு மனத்தென்புடன் இருங்க.
நிர்மலா
ஒரே பரவசமாகி திகைத்து போய் மயிர் கூச்சலுடன் நிற்கையில் வாசல் மணி அடித்தது..
அமலாவை பார்த்தவுடனேயே," என்ன ஆச்சு , ஏதோ காணாத காட்சியை கண்ட மாதிரி இருக்கே?" என
கேட்டான் செல்லதுரை.
"இதை பாருங்க,நீங்களே
திகைத்துப் போய் விடுவீங்க. .ஒரு புது
சிறுமி இன்று வகுப்பில் சேர்ந்தாள். .நம்ம நிர்மலாவை போலவே ஒத்த வயது,நடை உடை, பாவனை,..பெயரும் ஒன்றே, . சிரித்த களையான முகம். .எனக்கு இன்று
பூராவும் சந்தோஷம் தாங்கலை. அவள் முதல் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறா பாருங்க,"என கூறி நோட் புக்கை கையில் கொடுத்தாள்..
முதல் பக்கத்தை பார்த்து கொண்டே, " ஒன்றுமே எழுதலையே.காலியாக இருக்கே.நீயே
பாரு,"என
திருப்பி கொடுத்தான்
"என்ன உளறீங்க? கண்ணு
போயிடுத்தா என்ன? இதோ
பாருங்க ,கொட்டை கொட்டையாக எழுதி இருக்கா, பாருங்க
நோட் புக்கை பிடுங்கி மறுபடியும்
பார்த்தான். அமலாவை உற்று பார்த்தவாறே," வெத்து பக்கம் தான்.நீ உடனே ட்ரெஸ்ஸை
மாத்திக்கோ .டாக்டரை பார்க்க போகலாம்,' என்றான் சற்று கலவரத்துடன்.உனக்கு கட்டாயம் .மனதை அமைதியாக்க மருந்து வேண்டும்.நான்
முகத்தை அலம்பி கொண்டு ட்ரெஸ்ஸை மாற்றி கொண்டு வருகிறேன்.சீக்கிரமாக கிளம்பனும்," என்று உள்ளே சென்றான்.
கணவன் உள்ளே சென்ற
பிறகு மறுபடியும் மறுபடியும் பார்த்தாள்..அதே மணி மணியான கையெழுத்து.. தாங்க
முடியாமல் அழ ஆரம்பித்தாள் .திடீரென அவள் முதுகில் மெலிய விரல்களினால் தடவும்
உணர்ச்சி ஏற்பட்டது.உடல் முழுவதும் ஒரு புளகாங்கிதம். திரும்பி பார்த்தால் யாரும் காணவில்லை.குமுறிக் கொண்டு மறுபடியும் அழுகை
வந்தது. தோள்களை பிஞ்சு கையால் தட்டும் உணர்ச்சி. அருகில் சற்று சூடான மூச்சு காற்று. அவள் சொன்னபடியே தன்
மகள் நிர்மலா தன் பக்கத்திலேயே தேவதையாக உள்ளாள்
என உணர்ந்தாள்.
செல்லதுரை வந்தவுடன் ,'இப்படியே
இருந்தால் நாளை டாக்டரிடம் போகலாம், இப்போ
சற்று தேவலை போல இருக்கு.. காபி போடட்டுமா? பாவம்,உங்களை தொந்தரவு பண்ணுகிறேன்,"என் ஆறுதலாக கூறினாள்..
மறு நாள் ஆவலுடன் ஸ்கூலுக்கு சற்று முன்னே சென்றாள்.முதல் வகுப்பு
தொடங்கியதும் சுற்றி முற்றி பார்த்தாள்.அந்த புதிய சிறுமி காணவில்லை..ஏமாற்றத்தோடு வகுப்பை பார்த்து
. "நேற்றைக்கு வந்த அந்த புதிய சிறுமி வரவில்லையா?' என கேட்டாள்.
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே ஒரே குரலில் "புதிய சிறுமி யாரும் நேற்று வரவில்லையே" என கூறினார்கள்.அவர்கள் தன்னை ஏதோ ஒரு விதமாக பார்ப்பது போல் தோன்றியது.
வகுப்பு முடிந்தவுடன் நேரே ஆபீஸ் ரூமுக்கு சென்று ,"நேற்று வந்த புது சிறுமி நிர்மலா இன்று வரவில்லை..ஏன் என்று ஏதேனும் தகவல் உண்டா?" என கேட்டாள்.
"அமலா மேடம், நேற்றோ
அல்லது சமீப காலத்தில் யாரும் புதிய மாணவி
சேரவில்லையே. என்ன சொல்லுகிறீர்கள் என புரியவில்லையே," என்றாள் ஒரு குமாஸ்தா.
.மறுபடியும் மனக் குமுறலோடு அழுகை வரும் தருணத்தில்,முதுகை யாரோ தடவி கொடுப்பது புரிந்தது,"எப்போதும் கூடவே இருப்பேன்" என்று சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே
இருக்கும் இந்த ஆறுதலே போறும் என்று சுதாரித்து
கொண்டு வெளியே வந்தாள்.
தன் கைப்பையில் ஒரு சின்ன டைரியில் இருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப்
புன்னகைத்தாள். மனதில் இனம் புரியா அமைதி தவழ்ந்தது. இனிப் பள்ளியில் தன் மாணவிகள்
எல்லோரும் தன் மகள்தான் என்று தோன்ற,புதிய ஆசிரியத் தாயாகி,புதிய தென்புடன் கிளம்பினாள்.