Wednesday, October 19, 2022

நிம்மியின் நன்றி கடன்





ஒன்பது மணிக்கே கிளம்பியும் நிர்மலாவிற்கு  எதிர்பாராத இந்த போக்குவரத்து தடையினால் ஆபீஸ் போய் சேர ரொம்ப தாமதம் ஆகும் போல தோன்றுகிறது... ஒரே ஹார்ன் சத்தம். காதை பிளக்கிறது.மற்ற நாட்கள் என்றால்  இவ்வளவு   எரிச்சல் படமாட்டாள்.  சி காரில் தனக்கு பிடித்த ஸ்ரேயா கோசாலினதோ அல்லது பிருந்தா மாணிக்கவாசகத்தின்   பாட்டையோ   நிம்மதியாக ரசித்து கொண்டிருப்பாள். இன்று பத்தரை  மணிக்கு . நேர்முக தேர்வு..மூத்த அதிகாரியான அவள் தலைமையில்   தான் நடைபெறவுள்ளது.மணி ஒன்பதே முக்காலை தாண்டிவிட்டது.

நீண்ட ஹாலை வேகமாக கடக்கும் போது  வழியில் ஒரு முதியவர் நிற்பதை  பார்த்து சற்று   நின்றாள்..வயது எழுபதுக்கு  மேல் இருக்கும்.ரேகை படிந்த முகத்தில் மழிக்கப்படாத ஐந்து நாட்கள் தாடி.பண வசதி இல்லாதவர் போல் தென்பட்டார்.பழக்கமான முகம் போல் தெரிகிறதே   என்று ஒரு நொடிதான் யோசித்தாள்.படக்கென்று நினைவுக்கு வர,"நீங்க பழனி தானே? “என்றாள்

அவர் கைகளை தூக்கி கும்பிடும் போது வலது கையில் பழனி  என்று பச்சை   குத்த பட்டு இருந்ததை   பார்த்தாள். அவள் மனம் இருபது வருடங்களுக்கு மேல் பின்னோக்கி சென்றது.அவர் இன்னும் யோசனையில் இருந்தார்."என்னை ஞாபகம் உள்ளதா? சாமியார்   மடம் பஸ் ஸ்டாப்பில்    18  வயதிலிருந்து   நிம்மியை நான்கு வருடங்கள் வருடங்கள்   உங்கள் பஸ்ஸில் காலேஜ்க்கு அழைத்து செல்வீர்களேநினைவுக்கு வருதா?" என்றாள் சிரித்த வண்ணம்.

 அவர் முகத்தில் சற்று வெளிச்சம்.." தினமும் லேட்டடாக வரும் பெண்தானே?நிம்மியோ ,ஜிம்மியோன்னு பேரு,"என்றார்....

ஆமாம் அவளேதான் நிம்மி.. தினமும் இல்லை.பாதி நாட்கள் தாமதமாக வரும் எனக்காக 10 நிமிடங்கள் கூட காத்து கொண்டு இருப்பீங்க  .,ஒரு நாளும் முகத்தை சுளிக்க மாட்டீங்க.பாப்பா சீக்கிரம் வரணும் மத்தவங்களை காக்க வைக்க கூடாது என்று மெள்ள சொல்லுவீங்க  ஆமாம் இங்கே எங்கே? ." என்றாள்

என்னோட பேரனுக்கு இங்க தேர்வாம். அங்க தூரத்தில ஒல்லியா நீல சொக்காய் போட்டுண்டு இருக்கானே அவன்தான் என்னோட பேரன்.  நிம்மிஇங்க வேலை பண்றியா?    .உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா உதவி பண்ணுங்க," என்றார்.

"சரி, ரொம்ப   வருடங்களுக்கு பிறகு உங்களை பார்த்து பேசியதில் சந்தோசம். எனக்கு நாழி ஆகிறது," எனக் கூறி வேகமாக தன் அறைக்கு சென்றாள்.  குளிர்ந்த அறையில் நுழைந்ததுமே தன்  உதவியாளரை கூப்பிட்டு,"  15 நிமிடங்களுக்கு பிறகு தேர்வு குழு அதிகாரிகளை வரச்சொல்லு.அப்புறம் தேர்வுக்கு வந்தவர்களை அனுப்பலாம்," என்றாள்

கண்களை மூடிய பிறகு பழைய எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்தது..கால்களில் மூட்டு வலியோடு அவஸ்தை பட்டுக் கொண்டே  அம்மா மதிய உணவை வேகமாக செய்து முடித்து டப்பாவில்   வைப்பதற்குள் பஸ்ஸின் ஹாரன் தூரத்தில் ஒலிக்கும். அவசர அவசரமாக நிம்மி ஒரு கையில் புத்தகப் பையும் மற்றொன்றில் டப்பாவும்  தெருவில் ஓடுவாள்.100 கஜங்கள் தான்.ஆயினும் வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸுக்குள் ஏறுவது   நித்தியம் நடக்கும் சமாச்சாரம் தான்.ஆனாலும், "மெள்ள வா பாப்பா,விழுந்துட போரே ,"என கரிசனம் காட்டும் பழனி   ஒரு நாள் கூட முகத்தில் எரிச்சலை காட்டியதில்லை. தன்னை ஒரு நாள் கூட ஏற்றிக்  கொள்ளாமல்  சென்றதுவும்  இல்லை.

அறைக்கு உள்ளே   குழுவினர் நுழைய ஆரம்பித்தவுடன் தன்னை சுதாரித்து கொண்டு மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள்..விண்ணப்பதாரிகள் ஒருவர் ஒருவராக கிட்டத்தட்ட 30 நபர்கள்  பரிசீலிக்கப்பட்டு சென்று விட்டனர்.மணி  இரண்டு   ஆகிவிட்டது மதிய உணவுக்கு செல்ல வேண்டிய நேரம். நிர்மலாவின் உதவியாளர் "இன்னும் இரண்டு நபர்கள் தான் பாக்கி," என்றார்..அவர்களையும் அனுப்ப சொன்னாள்.

மனதில் மாணிக்கத்தின் பெயரும் நீல சொக்காயும் ஞாபகம் இருந்தது.அடுத்த நபரும் வேறு யாரோ.பழனியின் முகம் ஒரு நொடி கண் முன்னே தோன்றியது. மனதில் ஒரு சின்ன சஞ்சலம் அந்த தருணத்தில் நீல சொக்காயுடன் மாணிக்கம் கடைசி நபராக உள்ளே நுழைந்தான்..அவன் விண்ணப்பத்தை கவனமாக பார்த்தாள். .கேட்க பட்ட தகுதிகள் இருந்தது.ஓகோவென சொல்ல கூடிய அளவிற்கு இல்லாமல் இருந்தும் மற்றவர்களுக்கு சோடை போகவில்லை.மற்ற குழுவினர் ஒன்றும் கேட்கவில்லை.

மாணிக்கம், இன்னும் ரெண்டு மூன்று நாட்களில் தகவல் வரும்.," என சின்ன புன்முறுவலுடன் சொன்னாள்

வெளியில் பழனி ஒரு எதிர்பார்ப்போடு  ஓரமாக நின்று கொண்டு இருக்கையில்  மாணிக்கம் ' தாத்தா ,நேர்முக  பரிக்ஷை முடிந்தது,"என கூறினான்..

"வேற ஏதாச்சும் சொன்னாங்களா?  நான் அந்த பெண்ணை பார்த்து கேட்கிறேன்.. இங்கேயே இரு,"என்று பழனி சொன்னதும்,," தாத்தா  ,அங்க எல்லாம் போக கூடாது..இன்னும் மூன்று நாட்களில் தகவல் வரும் என்று சொன்னாங்க . எனக்கு கிடைக்கும்னு தோணுகிறது, வாங்க போகலாம்," எனக் கூறினான்.

மாடி படிகளில் இறங்கும்போது,"பழனி,பழனி" என குரல் கேட்டு திரும்புகையில் நிர்மலாவே வேகமாக வந்து," மாணிக்கத்துக்கு வேலை கொடுப்பதாக முடிவு பண்ணிட்டாங்க.இன்னும் மூன்றே நாட்களில் தகவல் வரும்.கவலையே வேண்டாம், ஜாக்கிரதையாக  போயிட்டு வாங்க," என்றாள்..  

"ஏதோ தினம் பஸ்ஸில போய்   இட்டாந்ததை     பெரிசா  நினைச்சுகிட்டு  உதவி பண்றீங்களே நீங்க நன்னா இருக்கணும்.ரொம்ப நன்றி அம்மா,: என்று விடை பெற்றார் பழனி. 

"தாத்தா, இங்க வந்து பேசின அம்மா தான் பெரிய அதிகாரி.. அவங்க தலைமையில் தான் தேர்வே நடந்தது,” என்றான் மாணிக்கம்.