Monday, March 10, 2025

சதாபிஷேகத்தில் ஒரு இதமான சம்பவம் (395 வார்த்தைகள்

 பழைய மாம்பலம் மகாதேவன் தெருவில்  என்னோட பெரியப்பா வாசம். இன்று அவரோட  சதாபிஷேகம்,அதே   தெருவில் கோடியில் ஒரு  சின்ன கல்யாண மண்டபத்தில்  நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் என்னோட பொறுப்பில் நடக்கிறது.

அவர் பையன் ரங்கன் அமெரிக்காவிலேந்து இரண்டு நாட்கள் முன்னேதான் குடும்பத்துடன் வந்தான்.ஹோட்டலில் தங்கி இருக்கிறான்.

கூட்டம்அதிகம்இல்லை..நெருங்கிய உறவினர்கள் அக்கம்பக்கத்து நண்பர்கள் மட்டும் தான்.மணி 9.30 இருக்கும்.புரோகிதர்கள் மந்திரம் ஓத  கல்யாணம் நடந்து கொண்டு இருந்தது.

கொஞ்சம்   விச்ராந்தியாக உட்கார    வாசல்  பக்கம்  வந்தேன் .அங்கே தனியாக நாற்காலியில் ஒல்லியாக கொஞ்சம் வயதான ஒருவர் அமர்ந்து இருந்தார். பளிச்சென்று துவாதச(12)  நாமங்களோடு   பஞ்சகச்சத்துடன் அங்கவஸ்திரத்தை போர்த்திகொண்டு இருந்தார். பார்த்த உடனேயே ஏழ்மை தெரிந்தது.

"வாங்க ரொம்ப சந்தோஷம் .ஏதாவது சாப்பிட்டீங்களா?தனியாக  ஏன் உட்காந்து இருக்கிறீங்க? என்றேன்.

"பொங்கல்,வடை சாப்பிட்டாச்ச்சு. அதிகம் மற்றவர்களோடு பழக்கம் இல்லை.பெரியவரை அடிக்கடி அயோத்யா மண்டபத்தில்  பார்ப்பேன்.நல்ல மனிதர். ஆசையாக குசலம் விசாரிப்பார்.," என்றார்

"சுவாமி பேர் என்னவோ?'

'கோவிலுன்னி வாத்யார் என்பார்கள்" என்றார் தன்னடக்கத்துடன்.

"வாங்க,கல்யாணம் நடக்கிற இடத்துக்கு போகலாம்.என்னோட பெரியப்பா சந்தோஷப் படுவார் ," என்றேன்

"இல்லை இல்லை.அவர் உறவுக்காரர் முக்கியமான நண்பர்களுடன் பேசின பிறகு தனியா நானே அவரிடம் சென்று என்னோட வணக்கத்தை சொல்கிறேன். உங்க அக்கறையான விஜாரிப்புக்கு ரொம்ப   நன்றி ."

"சரி, உங்க இஷ்டம். சாப்பிடாமல் போகக்கூடாது.இன்னும் அரை மணியில் இலை போடுவார்கள்." என்றபடி  நகர்ந்தேன்..பாவம் ஜாண் வயிற்றுக்காக எவ்வளவு சங்கடங்கள்.   எனக்கு என்னோட பெரியப்பாவை நன்னா தெரியும். அவர் அயோத்தி மண்டபத்துக்கு, கோவில்களுக்கு   போகிற ஆசாமி இல்லை. அவர் தோரணையே வேற மாதிரி.

பெரியப்பா என்னை கை  அசைத்து கூப்பிடுவது தெரிந்தது.

"வாத்தியாருக்கு நல்ல வேஷ்டி வாங்கச் சொல்லி இருந்தேனே. எங்கே அந்த பொட்டலம்.?"

"இப்போ தரேன். அங்க வாசப் பக்கம்  ஒல்லியா ஒருத்தர் இருக்காரே அவருக்கு உங்களோட அயோத்யா மண்டபத்திலே  நல்ல பரிச்சயமாம்.கோவிலுன்னி  வாத்யாராம்  உள்ளே வாங்கன்னு கூப்பிட்டேன். வர தயக்க படறார்" என்றேன்

'நான் அங்க எல்லாம் போறதே இல்லையே. யாரோ பாவம். சாப்பிட சொல்லு. கைவசம் உபரியாவேஷ்டி இருக்கான்னு பாரு." என்றபடியே அவர் பக்கம் சென்றார்.

எனக்கு என்ன சொல்ல போகிறாரோ அல்லது ஏதாவது ஏடாகூடமாக பேசிடுவாரோ என.ஒரே திகைப்பு  .அவர் குணம்  அப்படி. உத்யோகம் பணம் பதவி,அந்தஸ்து வகையறா தான்  அவருக்கு  முக்கியம்.

"வாங்க வாங்க, உங்களை கூப்பிட மறந்து விட்டோமா என சின்ன சந்தேகம். டிபன் ஆச்சா இலை போட்டாச்சு.சாப்பிட்ட   பிறகு என்னிடம் வாங்க," என்றார். எனக்கு ஒரே ஆச்சர்யம்

கிட்ட தட்ட முக்கால் மணிக்கு மேலே வந்தவங்க எல்லாம் பெரியப்பா பெரியம்மாவிடம்  சேவித்து ஆசிகள் வாங்கிக்கொண்ட வண்ணம் இருந்தார்கள்.  .கோவிலுன்னி வாத்யார் சற்று ஒதுப்புறமாக ஒரு  தூண் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார்.

இடையில் கூட்டம் இல்லாத பொழுது,பெரியப்பா வாத்தியாரை  அருகே  வரும்படி கையால் அழைத்தார். அவர் ஆச்சர்யத்துடன் உடலை குறுக்கிக்கொண்டு    நாணத்துடன் வந்தார்.

"சாப்பாடு நன்னா இருந்ததா? நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம்.'

சடக்குனு வாத்யார் பெரியப்பா பெரியம்மா கால்களில் விழுந்து, " “நீங்க இரண்டு பெரும் ஆசீர்வாதம் பண்ணனும்.வயதில் சிறியவன். என்னையும் மதித்து உபச்சாரம் பண்ணியது மனதை தொட்டுவிட்டது. நீங்க இருவரும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாகவும்,சுபிக்ஷமாகவும் இருக்க தாயார் பெருமாளை வேண்டி கொள்கிறேன்..” என்றார்.

பெரியப்பா என்னிடமிருந்து வேஷ்டி பொட்டலத்தை வாங்கி பெரியம்மா கையிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை வாங்கி   அந்த ஏழை வாத்தியாரிடம் திணித்தார்.

அவரோ திக்கு முக்காடி கன்னங்களில்  லேசாக கைகளை போட்டுக் கொண்டு  ,"நீங்க கொடை வள்ளல்,கர்ணன் மாதிரி,"என சொல்லி இன்னும் உடலை குறுக்கி கொண்டு கேவி அழுதார்.

என்ன சுவாமி இது, சிரிச்சுண்டு வாங்கிகோங்க. அழ  கூடாது.," என்றேன்

பெரியப்பா ஒரு சிறு புன்முறுவலுடன்,வாத்யாரைப் பார்த்து "கூடிய சீக்கிரம் கொஞ்ச நாட்களில் பழையபடி அயோத்யா மண்டபத்தில் பார்க்கலாம்," என்றபடி என்னைப் பார்த்து லேசாக   கண்ணை சிமிட்டினார்