Monday, May 15, 2017

ரசனையும் கருணையும்


 சின்ன ஊர்தான் ஆனால் அங்குள்ள ராமர் கோவிலோ பிரசித்தம். முக்கியமாக அங்கு உள்ள ஆஞ்சனேயர் ஒரு வரப் ப்ராஸாதி. கோவிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய குளம். கோவில் வாசலுக்கு ஒட்டின மாதிரி இரு பக்கங்களிலும் வீடுகளுடன் பிரதான தெரு. காலையிலும் மாலையிலும் கோவில் நிறைந்து இருக்கும். கதைக்கு வருவோம். இந்த சம்பவம் 60 வருஷங்களுக்கு முன் நடந்தது.
லக்ஷ்மி காலையில் சுமார் எட்டு மணி அளவில் சமையல் அறையில் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருப்பாள். இருந்தாலும் ஹார்மோனியத்திலிருந்து தூரத்திலிருந்து வரும் மெல்லிய சங்கீதத்தை கேட்டவுடனேயே வாசலுக்கு ஒரு டம்ளரில் அரிசியுடன் விரைந்தோடி வருவாள். அப்பொழுதுதான், அந்த பெரியவர் அவள் வீட்டிற்கு வரும் வரை அவரின் சன்னமான இனிமையான குரலில் ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டே பாடும் தியாகராஜ கீர்த்தனைகளை, அவளால் கொஞ்ச நேரமாவது கேட்க முடியும்.
அறுபது வயதுக்குள் இருக்கலாம், ஒல்லியான உடல் வாகு, நல்ல உயரம், தீர்க்கமான நாசி, நெற்றியில் கோபி சந்தனம், சாந்தமான முகம், கழுத்தில் துளசி மாலை, உஞ்சவிருத்தி பிராம்மணராக இருந்தாலும் அவரிடம் மரியாதையை வரவழைக்கும் கம்பீரமான தோற்றம் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி, தலயை சுற்றி மஞ்சள் துணியால் தலைப்பாகை, அதே ராம நாம எழுத்து பதிந்த துணி அவர் முதுகை மறைத்து முழங்கால் வரை பின்னே தொங்கியது. ஒரு தோளிலும் கழுத்திலும் தொங்கிய ஹார்மோனியமும், மற்றொரு தோளில் பளபளவென்று ஒரு பித்தளை செம்பு தொங்கியது.
அவர் தன்னையே மறந்தவராக கண்களை சற்று மூடியவாறு தியாகபிரம்மத்தின் கீர்த்தனைகளை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டே நடப்பார். யார் வீட்டு வாசலிலும் சில க்ஷணங்ககளுக்கு மேல் நிற்கமாட்டார். அவர் வாசலில் வருவதற்கு முன்னரே சில பெண்மணிகள் அரிசியோடு காத்து கொண்டிருப்பார்கள். அரிசியை செம்பில் சேர்த்துவிட்டு சிலர், முக்கியமாக லக்ஷ்மி, காலில் வீழ்ந்து வணங்குவதும் உண்டு. அவர்களை ஆசீர்வதித்து விட்டு கொஞ்சம் அரிசியை பெண்மணிகளின் பாத்திரத்தில் போடுவார்.
லக்ஷ்மியை அவரின் ராம பக்தியும், இசைத்திறமயும், பரந்த மனோதர்மமும் வசீகரித்தது. ஒரு நாள் பாடின பாட்டுகளையே மறு நாள் பாடமாட்டார். ஹார்மோனியம் வாசிக்கும் திறமையால் பாட்டு மேன்மை அடைகிறதோ அல்லது அவரின் குரல் வளமுடன் பக்தி உத்வேகமும் சேர்த்து அவரின் கானத்திற்கு ஒரு தெய்வீக அனுபவத்தை கொடுக்கிறதோ எதுவென்று லக்ஷ்மிக்கு தெரியவில்லை. ஆனால் அந்த பத்து நிமிஷ ஆத்மானுபாவத்திற்காக தினம் ஆவலுடன் காத்திருப்பாள். அவர் ஒரு நாள் வராவிட்டால் என்னவோ எதோ என்று கவலையுடன் வாசலில் அடிக்கடி எட்டிப் பார்ப்பாள்.
லக்ஷ்மி சிறு பெண்ணாக இருக்கும்போது அவளுக்கு வாய்பாட்டு ஏழெட்டு வருஷங்கள் சொல்லி கொடுத்திருகிறார்கள். கீர்த்தனைகள் முடித்து ஆலாபனை ஆரம்பிக்கும் வரை கற்று கொண்டிருக்கிறாள். அவள் அப்பா அவளுக்கு ஒரு ஹார்மோனியம் வாங்கி கொடுத்து இருக்கிறார். கல்யாணத்திற்கு பிறகு பாடுவது குறைந்து நாளாவட்டத்தில் நின்றே விட்டது. ஹார்மோனியத்தை பூஜா அறையில் வைத்து விட்டாள்.
அந்த பெரியவருக்கு இவளின் சங்கீத ரசனையை பார்த்து இவளுக்கு தேர்ச்சி இருக்கிறது என அனுமானித்து இவள் வீட்டு வாசலில் சில நாட்கள் சற்றே அதிக நேரம் நின்று பாட்டை வித விதமான நிரவல்களுடனும் ஸ்வரங்களுடனும் பாடுவார். அதில் அவளுக்கு பரம சந்தோஷம்.
திடீரென்று மூன்று நாட்கள் அந்த பெரியவர் உஞ்சவ்ருத்திக்கு வரவில்லை. லக்ஷ்மிக்கு என்னவோ ஏதோ என்று கவலை. யாரிடமும் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை ஜுரமாக இருக்கலாமோ, அரிசி இல்லாமல் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார் என்று மனக்குடைச்சல். அவள் கணவர் வெங்கடேசனிடம் மெள்ள அவள் கவலையை சொன்னாள்.
வெங்கடேசன் சிரித்துக்கொண்டே” உனக்கு யாருக்காக எதற்காக கவலைப் படுவது என ஒரு விவஸ்தை இல்லை. “உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம்னு” நீ கேள்வி பட்டு இருக்கையா? ஜாண் வயிற்றுகாக பல வேஷம் போடறது. அந்த ஆள் வெள்ளை வேஷ்டி உடுத்திண்டு, நெத்தியில சந்தனத்தோட பாடிண்டு வருகிற கௌரவ பிச்சைக்காரர். ராமர் பேரில் பெண்களுக்கு பிடித்த பாட்டுகளைப் பாடி சுலபமாக அரிசியை வாங்கிண்டு போற ஆள்,” என்றான். லக்ஷ்மிக்கு கோபம் பொத்திகொண்டு வந்தாலும் மௌனமாக வெளியே சென்றுவிட்டாள்.
எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிகொள்வதைத் தவிர அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிருஷ்டவசமோ அல்லது வேண்டுதலில் பலனோ அடுத்த நாளே அந்த பெரியவரின் பாட்டு சப்தம் கேட்டது. வேகமாக வாசலில் வந்த அவளுக்கு ஒரு அதிர்ச்சி. முகவாட்டத்துடனும் பலஹீனமாகவும் கழுத்திலிருந்து தொங்கும் ஹார்மோனியமும் இல்லாது அவர் காணப்பட்டார்.
“மாமா. என்ன ஆச்சு? உடம்பு சுகமில்லையா? மூன்று நாட்களாக காணவில்லையே. ஹார்மோனியம் எங்கே?” மிக்க கவலையுடன் கேட்டாள்.”
“ஓரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது. ஒரு ஆட்டோக்காரன் என் மேல் மோதி கீழே தள்ளிவிட்டான். அதுகூட பரவாயில்லை. என் ஹார்மோனியத்தின் மேல் ஏற்றி அதை தவிடு பொடியாக்கிவிட்டான். கையில கால்களில் பலத்த அடி. இப்பொழுது வலி பரவாயில்லை. ஹார்மோனியம்இல்லாமல்கிரஹலக்ஷ்மிகளை ஈர்க்க உரக்க பாட வேண்டி இருக்கிறது. எல்லாம் ராமன் செயல். கொஞ்சம் கஷ்டப்படனும்னு விதி. வேறு என்ன சொல்றது?” என்றார்.
“தயவு செய்து இரண்டு நிமிஷங்கள் இருக்க முடியுமா? இதோ வந்து விட்டேன்,” என்றபடியே பூஜா அறைக்கு விரைந்தாள். அங்கு கண்களை மூடியபடி அவளின் ஹார்மோனியத்தை அவருக்கு தானமாக கொடுக்க அனுமதி கோரினாள். சேவித்த பிறகு சிகப்பு வெல்வெட் துணியால் மூடிய ஹார்மோனியத்தை கைகளில் கொணர்ந்து அவரின் கைகளில் கொடுத்தாள். திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் ஹார்மோனியத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தவண்ணம் நாத்தழுக்க “என்ன இது?” என வினவினார்.
ஹார்மோனியத்தின் மேல் மூடிய சிகப்பு துணியை எடுத்தவாறே “இது நான் சிறுமியாக இருந்த போது என் அப்பா வாங்கிக்கொடுத்தது. கல்யாணத்திற்க்கு பிறகு பாடுவதை நிறுத்தி விட்டேன். இது பூஜா அறையில் இருந்தது. உங்களிடம் இருந்தால் நன்றாக உபயோகப்படும். தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுகொள்ளுங்கள்,” என்றாள்.
அவர் தயக்கத்துடன் நிற்பதை கண்டு “சற்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்கள் பெண் மாதிரி. சற்று சுயநலம் கூட உள்ளது. நீங்கள் வாசிக்க நான் கேக்கும் பாக்கியமும் இருக்கு. ஒரே ஒரு ஆசை,” என நிறுத்தினாள்.
என்ன என்கிற கேள்விக்குறியோடு அவளை நோக்கினார்.
“எனக்காக ‘நிதி சால சுகமா, ராமுடு சன்னிதி சேவ சுகமா’ கல்யாணி ராக பாட்டை விஸ்தாரமாக நிரவல் ஸ்வர ப்ரஸ்தாரத்துடன் பாட இயலுமா?” என்றாள்.
“அதற்கென்ன, தாராளமாக பாடுகிறேன்” என்று பூஜா அறையின் முன்னால் அமர்ந்து பாட ஆரம்பித்தார். பக்தி பரவசத்துடன் ரொம்ப பிரசித்தமான அப்பாட்டிற்கு புது மெருகு ஊட்டி கற்பனையோடும் உற்சாகத்துடனும் பாடி லக்ஷ்மியை தெய்வானுபவத்தில் திளைக்க  விட்டார்.
மாலையில் ஹார்மோனியத்தை அவருக்கு கொடுத்த விஷயத்தை லக்ஷ்மி சொன்ன போது, வெங்கடேசன் “நல்ல காரியம் பண்ணினாய். அது  இடத்தை அடைத்து கொண்டிருந்தது,” என்றான்.  
லக்ஷ்மி மறுபடியும் மௌனம் சாதித்தாள்                                 

Wednesday, May 10, 2017

கோண்டு மாமாவும் மொளகா பஜ்ஜியும்

ஆபீஸில் மிக மும்முரமாக வேலையில் மூழ்கி இருந்தேன், திடீரென்று ஃபோன் அலர ஆரம்பித்தது.
"சாரங்கா, நான் மாது பேசறேன். உனக்கு தெரியுமா நம்ம கோண்டு மாமாவை அப்போலோல சேர்த்து இருக்காங்களாம்? நெஞ்சு வலி. வயிற்றை ஏதோ பண்றதுனு சொன்னாரம். வேர்த்து கொட்டியதாம். நல்ல வேளை மாமி ஆஸ்பத்திரிக்கு உடனே கூட்டிண்டு போனாங்க. என்ன ப்ராப்ளம்னு சரியாகத் தெரியலை. நாளை விட்டு மறு நாளைக்கு பெரிய ஆபரேஷனாம். ரிஸ்க் அதிகமாம்” மாது படபடப்புடன் பேசினான்.
“உனக்கு யார் சொன்னது? மாமா வீட்டுலேந்து ஃபோன் வந்துதா? தகவல் உண்மையா என்று நன்னா விசாரிச்சயா?” என்றேன்.
“என் மனைவி சொன்னாள். அவளுக்கு யார் சொன்னான்னு தெரியலை.,” என்றான்.
எனக்கு மாமாவை பற்றி கவலை உண்டாகியது. என் அம்மாவின் கடைசி தம்பி. பழகுவதற்கு இனிமையானவர், சிரித்த முகம், ரொம்ப நல்ல சுபாவம், உபகாரி, என்ன காரணமோ தெரியல என்னிடம் ரொம்ப அன்னியோன்யம். ஒரு வேளை நான் அவர் ஜாடையாக இருப்பதாலோ அல்லது இருவருக்கும் பிடித்த சமாசாரங்கள் அனேகமானதாலோ என்னவோ ஒரு நெருக்கம். ஆசார குடும்பம். தாத்தாவும் மாமாவுடன் தங்கி இருந்தார். பத்து, பதினைந்து வருஷங்கள் முன்னால் வரை வீட்டுக்கு தெரியாமல் எப்பொழுதாவது சுருட்டு பிடிப்போம், ஆம்லெட் சாப்பிடுவோம். சசி மலையாள படம் பார்ப்போம் கிரிக்கட் விளையாட்டை பேசிக் கொண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக மேச்சு பார்க்கவும் போவோம். மாமி ஏன் எனக்கு ஃபோன் பண்ணவில்லை நு கொஞ்சம் வருத்தம்.
எனக்கு தெரிந்து அவருக்கு ஒரு உபாதையுமில்லை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. 55 வயதுக்கு பலமாகத்தான் இருந்தார். ஒரு வேளை இப்ப எல்லாம் ரொம்ப சகஜமாகிப் போன சைலென்ட் அட்டாக்கோ? எனக்கு தெரிந்த வரை அவருக்கு கெட்டப் பழக்கங்கள் கிடையாது. ஆனால் நாக்கை கட்டுப்படுத்தத் தெரியாது. அவருக்கு நிறைய குழந்தைகளாச்சே. இரண்டு பையன்கள் இன்னும் படித்துகொண்டிருந்தார்கள், ஒரு பெண்ணுக்கு கல்யாணம் வேறு பண்ணனும். அவர் பணம் நிறைய சேர்த்து வைத்ததாக தெரியவில்லை. பூர்வீக சொத்தும் கிடையாதே. சங்கடமாக இருந்தது.
“மாது, நான் மாமியிடம் பேசறேன். உனக்கு அப்புறம் தகவல் கொடுக்கிறேன்.”
மாமா வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. வீட்டில் யாருமில்லை போல தெரிந்தது. என்னோட சித்தி பெண்ணுக்கு ஃபோன் பண்ணேன். தனக்கு முழுசா விவரம் தெரியலை என்றும் ஆனால் மாமா அப்போலோல அட்மிட்டாகி இருக்கார் என்று பெரியம்மா பெண் சொன்னதாக தெரிவித்தாள். அவளுக்கு யார் சொன்னா என்று தெரியலை. “சாரங்கா, மாமா இன்டென்சிவ் கேர்ல இருக்கிறாராம்,” எனக் கூடுதல் தகவல் கொடுத்தாள்.
நேரிலேயே போய் பார்த்துவிடுவது என்று தீர்மானித்து அப்போலோ ஆஸ்பத்திரிக்கு மாலை நான்கு மணிக்கு போய் சேர்ந்தேன். ஹாலில் திருவிழா மாதிரி கச கசன்னு கூட்டம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று சுற்றி நோட்டமிட்டேன். மாமியோட அண்ணா பிள்ளை, பெயர் ஞாபகமில்லை, கண்ணில் பட்டார். “கோதண்டம் மாமாவை பார்க்க வந்தேன். எப்படி இருக்கார்? ஏதாவது தெரியுமா?” என வினவினேன்.
“அத்திம்பேர் இங்க இருக்காரா என்ன? எனக்கு தெரியாதே. என் கூட வேலை பண்ணுகிற ஆபீஸ் ஆசாமியை பார்க்க வந்தேன்.” என்று நகர்ந்தார்.
“இங்க கோதண்டராமன் என்பவர் ஹார்ட் ஆபரேஷனுக்காக இன்டென்சிவ் கேர்ல அட்மிட் ஆகி இருக்காராம். என்ன நம்பர்நு சொல்ல முடியுமா “என்று ரிசப்ஷன்ல கேட்டேன்.
‘கம்ப்யூடெரில் பார்த்துவிட்டு” அந்த பேரில யாரும் அங்க இல்லைங்க. ஆனால் அதே பேரில நாலாவது மாடியில 1509வது ரூமில ஒருத்தர் இரண்டு நாள் முன்னே அட்மிட் ஆனார். அங்க விசாரியுங்க,” என்றாள்.
மாமி ரூமிற்கு வெளியில் ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் சிரித்த முகத்துடன் அருகில் வந்தாள்,
“மாமி, ஏன் எனக்கு முன்னாடியே சொல்லலை? பெரிய ஹார்ட் ஆபரேஷனாமே? யாரு கார்டியாக் சர்ஜன்? ரிஸ்க் இருக்காமே. கூட யார் உதவியும் இல்லாம நீங்க தனியாக இப்படி பண்ணலாமா?” என்று சற்று கோபமாக கேட்டேன்.
“என்னடா சாரங்கா உளர்றே? உனக்கு யார் சொன்னா மாமாக்கு ஹார்ட் ஆபரேஷன் என்று? உள்ளே போய் நீயே கேளு. தட்டு நிறைய வெங்காய, வாழைக்கா பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்,” என்றாள்.
மாமா என்னை பார்த்துவிட்டு, வாய் நிறைய பஜ்ஜியுடன், “வா வா, சாங்கா. பஜ்ஜி சாப்றயா, ஒழத்தி,” என குழறினார். டி வி உரக்க அலறி கொண்டு இருந்தது.
“என்னது இந்த பைத்தியக்காரத்தனம்? நாளைக்கு ஹார்ட் ஆபரேஷனும் அதுவுமா பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டு” என்று சள்ளென கத்தினேன்.
“உனக்கு எந்த மடையன் எனக்கு ஹார்ட் ஆபரேஷன் என்று சொன்னான்?”
“மாமா, முதலில் மாது சொன்னான். உனக்கு யார் சொன்னது என்று கேட்டதற்கு, மனைவி, அவளுக்கு சித்தி பெண், அவளுக்கு, பெரியம்மா பெண் என்று ஹனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே இருந்தது. உங்க வீட்டிற்கு ஃபோன் பண்ணேன். யாரும் எடுக்கலை. ஒரே கவலையாக போய்விட்டது.,” என்றேன்
“அசடாக இருக்கையே, உங்கிட்ட சொல்லாம இருப்பேனா? பசங்க எல்லாம் கோயமுத்தூருக்கு ஏதோ கல்யாணத்திற்கு போய் இருக்காங்க. ரொம்ப நாளாக மூல (பைல்ஸ்) வ்யாதி கஷ்டப் பட்டுண்டு இருந்தேன். வெள்யில் சொல்ல தயக்கமாக இருந்தது. சப்தமில்லாமல் நாளைக்கு ஆபரேஷன். இரண்டு நாள்களில் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. கோவிச்சுக்காதே, சாரங்கா.
இந்த குழப்பத்திற்கு யார் காரண்ம் என்று தெரிஞ்சு போச்சு. அந்த மர மண்டை கோபுவுடன் ஒரு நாள் நான் நாயர் கடையில மொளகா பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பொ நாயர் கிட்ட மொளகா ரொம்ப காரமா இருக்கு. நெஞ்சு எரியறது, மிளகாயை மாத்துநு சொன்னேன். அந்த பைத்தியதிற்கு நான் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனது எப்படி தெரிஞ்சுதோ தெரியலை. ஆனால் காது, மூக்கு, கண்ணு வைக்சு ஹார்ட் ஆபரேஷனு புரளி கிளப்பிடுத்து. இந்த மூல ஆபரேஷனை பத்தி யாரிடமும் மூச்சு விடாதே. நல்ல வேளை, நீ என்னை இப்பொ பார்த்தே, இல்லாவிட்டால், அந்த அசட்டு கோபு கோண்டு மாமா திடீரென்று போயாச்சுன்னு கூட வதந்தி கிளப்பி இருப்பான்,” என்று சொல்லி கலகலவென்று சிரித்தார்.
“ஒன்னு ஞாபகம் வைச்சுக்கோ. கேள்விப்படற பேச்சில் பாதிதான் நிஜம். கேட்ட தையெல்லாம் நம்பாதே, நம்பினதையெல்லாம் சொல்லாதே. சரிதானே நான் சொன்னது” என்றார்.

Sunday, May 7, 2017

முள்ளும் மலரும்

மணி கிட்டதட்ட மூணாகப்போறது. இப்பொழுதான் சாந்திக்கு சற்று ஓய்வு கிடைத்தது. இன்னும் அரை மணியில் குழந்தைகள் ஸ்கூலிலிருந்து வந்து விடுவார்கள். ஒரு க்ஷணம் உட்காரவில்லை. காலை ஆறு மணியிலிருந்து ஒரே ஓட்டம்தான். ப்ரேக்ஃபாஸ்ட். மதிய உணவு, குழந்தைகளை தயார் படுத்துவது, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றுவது, பேங்க் வேலை, டிஷ் வாஷர், வாஷிங் மெசின் என பல வேலைகள் ஒரே சமயத்தில் நெருக்கும். வேலைக்கு ஆள் இருந்தாலும் சில வேலைகளை தானே செய்தால் தான் அவளுக்கு சரிப்படும். கணவன் ராகவனோ எதிலும் பட்டுக்கொள்ளாமல் மொபைலும் கையுமாக இருப்பான். நிறைய தடவை சொல்லிப்பார்த்தும் பலனில்லை. சிடுசிடுத்தாலும் அவன் லக்ஷியப்படுத்தமாட்டான். அதில் அவளுக்கு பெரிய குறை. அடிக்கடி சண்டையும் போடுவாள். குழந்தைகளிடமும் கொஞ்ச மாட்டான்.
ஏ சி யை போட்டு படுக்கையில் சாய்ந்தவண்ணம் கண்களை மூடி கொண்டு சாந்தி சற்று ஓய்வு எடுக்க படுத்தாள். அந்த சமயம் மெலியதாக மென்மையான குரலில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாட்டு அவள் காதில் விழுந்தது. கோடியில் முனியம்மாவின் அறையிலிருந்து தான் வந்தது. சப்தம் போடாமல் அங்கு சென்று கதவின் வெளியிலிருந்து உள்ளே பார்த்தாள். தரையில் பாயின் மேல் படுத்துக்கொண்டு சன்னமான குரலில் முனியம்மா பாடிக்கொண்டிருந்தாள். கிராமீய மணத்துடன் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் தன் பாட்டையே ரசித்து கொண்டிருந்தாள்.
அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்டக் கூடாதோ
பழகும் போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ

என்ன கருத்து செறிந்த பாட்டு. அர்த்தம் புரிந்துதான் பாடுகிறாளோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவள் வாழ்வில் வசந்தம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்திருக்கிறாள். அதை பிறகு பார்ப்போம்.
“முனியம்மா, இவ்வளவு அழகாக பாடுவாய் என்று எனக்கு தெரியவே இல்லையே. குரல் வேறு ரொம்ப இனிமையாக இருக்கு. சிறு வயதில் பாட்டு கற்று கொண்டிருக்கிறாயா??யார் சொல்லிக்கொடுத்தது? கொஞ்சம் பாடி காண்பியேன்” என்றாள் சாந்தி.
சட்டென பாயை சுருட்டி எழுந்து நின்றபடியே லேசான வெட்கத்துடன்,” என் அம்மா நன்னா பாடுவாங்க. அதை கேட்டும், அவங்களோட பாடியும் கொஞ்சம் கத்துண்டேன். அம்பிட்டுதான். ” என்றாள்.
“என்ன மாதிரி பாட்டு தெரியும் உனக்கு?”
” நலங்கு, தாலாட்டு, கும்மி, கோலாட்டம்நு கொஞ்சம் தெரியும். மறந்து போகக்கூடாதுனு இப்படி பாடிண்டு இருப்பேன். சின்ன வயசுலே எங்க ஊரிலே ஏதாவது விசேஷம்னா என்னைத் தான் பாடச் சொல்லி கூப்பிடுவாங்க இப்ப பசங்க ஸ்கூல்லேந்து வந்துடும். இன்னொரு நாள் உனக்கு பாடி காண்பிக்கறேன்,” என்றாள். ஒருமையில்தான் பேசுவாள்.
முனியம்மா வேலைக்கு சேர்ந்துஆறு மாதங்கள் தான் ஆகிறது. அவளுக்கு முன்னே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆள் ஏதாவது ஒரு காரணத்துக்கு அல்லது நொண்டிசாக்குடன் மாறிகொண்டே இருந்தார்கள். இவள் ஸ்திரமாக வேலையையும் செவ்வனே செய்துகொண்டு அனாவசியமாக பேசாமல் குறிப்பறிந்து நடந்து கொண்டாள். சாந்திக்கு பரம திருப்தி. அவளுக்கு கடைசி அறையை கட்டில் படுக்கை ஃபேன் வசதியோடு கொடுத்திருந்தாள். காபி சாப்பாடு பாகுபாடுமில்லாமல் உண்டு. நாள்கிழமை என்று அடிக்கடி துணிமணியும் வாங்கி கொடுப்பாள். இது தவிர மாத சம்பளமும் கொடுப்பாள். முனியம்மாக்கும் சந்தோஷம்தான். இவள் வந்ததிலிருந்து சாந்தியும் தனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிட முடிந்தது.
முனியம்மாவுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கலாம். சற்று ஒல்லியாகவும் உயரமாகவும் களையாக இருப்பாள். சிரித்த முகம். அதிர்ந்து பேசமாட்டாள். எந்த நேரமும் தலையை சீவி சுத்தமாக இருப்பாள். தன்னுடைய கஷ்டங்களை எளிதில் வெளியே சொல்லமாட்டாள். இருந்தும் அவளிடம் விதி படு கொடூரமாக விளையாடி விட்டது.
18 வயதிலேயே திருமணம். அவள் கணவன் மூன்று குழந்தைகளைத்தவிர வேறு சுகத்தையோ காசையோ அன்பையோ கொடுத்ததில்லை. மொடாக்குடியனிடம் கண்டது எல்லாம் அடியும் ஒதையும் தான். விடிவு காலமோ என்னவோ சில வருடங்களிலேயே வயிற்றில் அல்சர் வந்து போய் சேர்ந்தான். இரண்டு பிள்ளைகள் ஒரு பெண். மூத்த மகன் ஸ்கூலில் குழந்தைங்க சவாரி பண்ணுகிற சின்ன வண்டி ஓட்டற வேலை. ஏதோ ஒரு சின்ன பெண் குழந்தையிடம் த்காத முறையில் தப்பாக நடந்ததில் ஜெயிலில் ஏழு வருஷங்கள் இருந்தான். அப்புறம் அவனை பற்றி தகவலே இல்லை. அவளுடைய பெண்ணோ யாரோ இவளைவிட 20 வயது மூத்த ஆட்டோக்காரனுடன் ஓடிவிட்டாள். கடைசியாக கேள்விபட்டது அவளுக்கு அவன் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு மறைந்து விட்டானாம். கொஞ்ச நாட்கள் அல்லோலபட்டுவிட்டு குழந்தையுடன் மும்பாயில் ஈன வாழ்க்கையில் உழண்டு கொண்டிருப்பதாக அரசல் புரசலாக செய்தி. கடைசி மகன் வடக்கே சென்றவன் தான். எங்கே இருக்கானோ என்ன பண்ணுகிறானோ கடவுளுக்குதான் வெளிச்சம். முனியம்மா பல வருஷங்கள் தனியாக கஷ்டப்பட்டு கடைசியாக சாந்தியிடம் வந்து சேர்ந்தாள். இப்பொழுதுதான் அவள் வாழ்க்கை சீராகத் தொடங்கியது.
எப்படி இவளால் எல்லாக் கவலைகளையும் மறந்து இப்படி சந்தோஷமாக பாட முடிகிறது என்று சாந்திக்கு ஒரே ஆச்சரியம். வேறு யாராக இருந்தால் இத்தனை கஷ்டங்களை தாங்க முடியாமல் மனம் ஒடிந்து நிதானத்தையே இழந்திருப்பார்கள். சாந்தி தன்னையே யோசித்து பார்த்தாள். அன்பான வசதியான தாய்தந்தையர், நல்ல படிப்பு, அழகான நல்ல வேலையிலுள்ள கணவன், அருமையான இரு குழந்தைகள், பெரிய வீடு, தனக்கென தனி கார் எல்லாம் இருந்தும் சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கு, குறைகளுக்கு சலிப்பும் கோபமும் அடிக்கடி வருகிறது. ராகவன் அவளை ஏன் இப்படி எப்பொழுதும் சிடுசிடுப்பாய் இருக்கிறாய் என கடிந்து கொள்வான். ஆனால் வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் காணாத இந்த முனியம்மாவால் எப்படி இவ்வளவு விவேகமாய் எல்லாவற்றையும் மறந்து குயிலைப்போல பாட முடிகிறது. சாந்தி அவள் முகத்தையே விந்தையாக பார்த்தவண்ணம் இருந்தாள்.
“ஏன்ன அம்மா அப்படியே உற்று பார்த்துண்டு இருக்கே? ஏதாவது யோசனையா?” என்றாள்
“ஒன்னுமில்லை. நீ அடிக்கடி இப்படி பாடுவாயா?”
பாடுவேனே. மனம் சந்தோஷமாக இருந்தால் பாடுவேன். உன்னோட வீட்டுக்கு வந்ததிலிருந்து எனக்கு ஒரே சந்தோஷம்தான்,”
“அட அப்படி என்ன சந்தோஷம் இங்கே?” என பிரமிப்புடன் கேட்டாள்.
“என் வாழ்க்கையில் பார்த்து அறியாத அன்பை இங்கதான் முதல் தடவையாக பார்க்கிறேன். என்னை உன்னோட வீட்டு மனுஷியாக நடத்தறே. நான் கட்டிலை கண்டேனா ஃபேனை கண்டேனா, சூடான சாப்பாடை பார்த்து இருக்கேனா. ஒரு பொண்ணு அம்மாவை எப்படி ஆசையா பார்த்துக்கோமோ அப்படி பார்த்துக்கறே. பழைய துணியையே கட்டின எனக்கு புதுப்புது சேலையா வாங்கி கொடுக்கறே. என்னை வேலைக்காரியா நடத்தலை. உன்னோட பசங்க இரண்டும் எங்கிட்ட பாசமா இருக்குங்க. உன்னோட புருஷன் உங்கிட்ட அன்பாய். பார்த்து வசதியெல்லாம் பண்ணி கொடுக்கராரு. இந்த மாதிரி அன்பும் பாசமும் இல்லாத என் வாழ்க்கை இத்தனை வருஷங்கள் பாலைவனமாகி போச்சு. இங்க உங்கிட்ட வந்த பிறகுதான் பசுஞ்சோலையாக மாறியது. எனக்கு வேற என்ன தேவை நீயே சொல்லு,” என்றாள்.
கண் கொட்டாமல் அவளையே பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்த சாந்திக்கு சட்டென்று ஞானோதயம் ஏற்பட்டது. அல்ப விஷயங்களுக்கெல்லாம் அலுத்துகொள்கிற தன் சுபாவம் எப்படி வாழ்க்கையை கெடுக்கிறது என புரிந்தது. சந்தோஷம் என்பது சின்ன துன்பங்களிலேயே மனதை உழல விடாமல், கடவுளின் அருளால் கிடைத்த நன்மைகளுக்கு நன்றி செலுத்துவதில் தான் உள்ளது என புரிந்தது.
“சரி, ஒரு பாட்டு எனக்காக பாடேன்,” என்று தரையில் உட்கார்ந்தாள். குழந்தைகளும் கும்மாளத்துடன் குதித்து அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தன. முனியம்மாவும் குதூகலத்துடன் பாட ஆரம்பித்தாள்.
ஆராரோ ஆரிரரோ
ஆராடிச்சா என் கண்ணே
அடிச்சாரைச் சொல்லி அழு
அவராதம் போட்டிருவோம்
மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டாலே
அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே