ஆபீஸில் மிக மும்முரமாக
வேலையில் மூழ்கி இருந்தேன், திடீரென்று ஃபோன் அலர ஆரம்பித்தது.
"சாரங்கா, நான் மாது
பேசறேன். உனக்கு தெரியுமா நம்ம கோண்டு மாமாவை அப்போலோல சேர்த்து இருக்காங்களாம்? நெஞ்சு
வலி. வயிற்றை ஏதோ பண்றதுனு சொன்னாரம். வேர்த்து கொட்டியதாம். நல்ல வேளை மாமி ஆஸ்பத்திரிக்கு
உடனே கூட்டிண்டு போனாங்க. என்ன ப்ராப்ளம்னு சரியாகத் தெரியலை. நாளை விட்டு மறு நாளைக்கு
பெரிய ஆபரேஷனாம். ரிஸ்க் அதிகமாம்” மாது படபடப்புடன் பேசினான்.
“உனக்கு யார் சொன்னது?
மாமா வீட்டுலேந்து ஃபோன் வந்துதா? தகவல் உண்மையா என்று நன்னா விசாரிச்சயா?” என்றேன்.
“என் மனைவி சொன்னாள். அவளுக்கு
யார் சொன்னான்னு தெரியலை.,” என்றான்.
எனக்கு மாமாவை பற்றி கவலை
உண்டாகியது. என் அம்மாவின் கடைசி தம்பி. பழகுவதற்கு இனிமையானவர், சிரித்த முகம், ரொம்ப
நல்ல சுபாவம், உபகாரி, என்ன காரணமோ தெரியல என்னிடம் ரொம்ப அன்னியோன்யம். ஒரு வேளை நான்
அவர் ஜாடையாக இருப்பதாலோ அல்லது இருவருக்கும் பிடித்த சமாசாரங்கள் அனேகமானதாலோ என்னவோ
ஒரு நெருக்கம். ஆசார குடும்பம். தாத்தாவும் மாமாவுடன் தங்கி இருந்தார். பத்து, பதினைந்து
வருஷங்கள் முன்னால் வரை வீட்டுக்கு தெரியாமல் எப்பொழுதாவது சுருட்டு பிடிப்போம், ஆம்லெட்
சாப்பிடுவோம். சசி மலையாள படம் பார்ப்போம் கிரிக்கட் விளையாட்டை பேசிக் கொண்டும் நேரம்
கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக மேச்சு பார்க்கவும் போவோம். மாமி ஏன் எனக்கு ஃபோன் பண்ணவில்லை
நு கொஞ்சம் வருத்தம்.
எனக்கு தெரிந்து அவருக்கு
ஒரு உபாதையுமில்லை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.
55 வயதுக்கு பலமாகத்தான் இருந்தார். ஒரு வேளை இப்ப எல்லாம் ரொம்ப சகஜமாகிப் போன சைலென்ட்
அட்டாக்கோ? எனக்கு தெரிந்த வரை அவருக்கு கெட்டப் பழக்கங்கள் கிடையாது. ஆனால் நாக்கை
கட்டுப்படுத்தத் தெரியாது. அவருக்கு நிறைய குழந்தைகளாச்சே. இரண்டு பையன்கள் இன்னும்
படித்துகொண்டிருந்தார்கள், ஒரு பெண்ணுக்கு கல்யாணம் வேறு பண்ணனும். அவர் பணம் நிறைய
சேர்த்து வைத்ததாக தெரியவில்லை. பூர்வீக சொத்தும் கிடையாதே. சங்கடமாக இருந்தது.
“மாது, நான் மாமியிடம்
பேசறேன். உனக்கு அப்புறம் தகவல் கொடுக்கிறேன்.”
மாமா வீட்டு ஃபோன் அடித்துக்
கொண்டே இருந்தது. வீட்டில் யாருமில்லை போல தெரிந்தது. என்னோட சித்தி பெண்ணுக்கு ஃபோன்
பண்ணேன். தனக்கு முழுசா விவரம் தெரியலை என்றும் ஆனால் மாமா அப்போலோல அட்மிட்டாகி இருக்கார்
என்று பெரியம்மா பெண் சொன்னதாக தெரிவித்தாள். அவளுக்கு யார் சொன்னா என்று தெரியலை.
“சாரங்கா, மாமா இன்டென்சிவ் கேர்ல இருக்கிறாராம்,” எனக் கூடுதல் தகவல் கொடுத்தாள்.
நேரிலேயே போய் பார்த்துவிடுவது
என்று தீர்மானித்து அப்போலோ ஆஸ்பத்திரிக்கு மாலை நான்கு மணிக்கு போய் சேர்ந்தேன். ஹாலில்
திருவிழா மாதிரி கச கசன்னு கூட்டம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று சுற்றி
நோட்டமிட்டேன். மாமியோட அண்ணா பிள்ளை, பெயர் ஞாபகமில்லை, கண்ணில் பட்டார். “கோதண்டம்
மாமாவை பார்க்க வந்தேன். எப்படி இருக்கார்? ஏதாவது தெரியுமா?” என வினவினேன்.
“அத்திம்பேர் இங்க இருக்காரா
என்ன? எனக்கு தெரியாதே. என் கூட வேலை பண்ணுகிற ஆபீஸ் ஆசாமியை பார்க்க வந்தேன்.” என்று
நகர்ந்தார்.
“இங்க கோதண்டராமன் என்பவர்
ஹார்ட் ஆபரேஷனுக்காக இன்டென்சிவ் கேர்ல அட்மிட் ஆகி இருக்காராம். என்ன நம்பர்நு சொல்ல
முடியுமா “என்று ரிசப்ஷன்ல கேட்டேன்.
‘கம்ப்யூடெரில் பார்த்துவிட்டு”
அந்த பேரில யாரும் அங்க இல்லைங்க. ஆனால் அதே பேரில நாலாவது மாடியில 1509வது ரூமில ஒருத்தர்
இரண்டு நாள் முன்னே அட்மிட் ஆனார். அங்க விசாரியுங்க,” என்றாள்.
மாமி ரூமிற்கு வெளியில்
ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் சிரித்த முகத்துடன் அருகில்
வந்தாள்,
“மாமி, ஏன் எனக்கு முன்னாடியே
சொல்லலை? பெரிய ஹார்ட் ஆபரேஷனாமே? யாரு கார்டியாக் சர்ஜன்? ரிஸ்க் இருக்காமே. கூட யார்
உதவியும் இல்லாம நீங்க தனியாக இப்படி பண்ணலாமா?” என்று சற்று கோபமாக கேட்டேன்.
“என்னடா சாரங்கா உளர்றே?
உனக்கு யார் சொன்னா மாமாக்கு ஹார்ட் ஆபரேஷன் என்று? உள்ளே போய் நீயே கேளு. தட்டு நிறைய
வெங்காய, வாழைக்கா பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்,” என்றாள்.
மாமா என்னை பார்த்துவிட்டு,
வாய் நிறைய பஜ்ஜியுடன், “வா வா, சாங்கா. பஜ்ஜி சாப்றயா, ஒழத்தி,” என குழறினார். டி
வி உரக்க அலறி கொண்டு இருந்தது.
“என்னது இந்த பைத்தியக்காரத்தனம்?
நாளைக்கு ஹார்ட் ஆபரேஷனும் அதுவுமா பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டு” என்று சள்ளென கத்தினேன்.
“உனக்கு எந்த மடையன் எனக்கு
ஹார்ட் ஆபரேஷன் என்று சொன்னான்?”
“மாமா, முதலில் மாது சொன்னான்.
உனக்கு யார் சொன்னது என்று கேட்டதற்கு, மனைவி, அவளுக்கு சித்தி பெண், அவளுக்கு, பெரியம்மா
பெண் என்று ஹனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே இருந்தது. உங்க வீட்டிற்கு ஃபோன் பண்ணேன்.
யாரும் எடுக்கலை. ஒரே கவலையாக போய்விட்டது.,” என்றேன்
“அசடாக இருக்கையே, உங்கிட்ட
சொல்லாம இருப்பேனா? பசங்க எல்லாம் கோயமுத்தூருக்கு ஏதோ கல்யாணத்திற்கு போய் இருக்காங்க.
ரொம்ப நாளாக மூல (பைல்ஸ்) வ்யாதி கஷ்டப் பட்டுண்டு இருந்தேன். வெள்யில் சொல்ல தயக்கமாக
இருந்தது. சப்தமில்லாமல் நாளைக்கு ஆபரேஷன். இரண்டு நாள்களில் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.
கோவிச்சுக்காதே, சாரங்கா.
இந்த குழப்பத்திற்கு யார்
காரண்ம் என்று தெரிஞ்சு போச்சு. அந்த மர மண்டை கோபுவுடன் ஒரு நாள் நான் நாயர் கடையில
மொளகா பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பொ நாயர் கிட்ட மொளகா ரொம்ப காரமா இருக்கு.
நெஞ்சு எரியறது, மிளகாயை மாத்துநு சொன்னேன். அந்த பைத்தியதிற்கு நான் ஆஸ்பிடலில் அட்மிட்
ஆனது எப்படி தெரிஞ்சுதோ தெரியலை. ஆனால் காது, மூக்கு, கண்ணு வைக்சு ஹார்ட் ஆபரேஷனு
புரளி கிளப்பிடுத்து. இந்த மூல ஆபரேஷனை பத்தி யாரிடமும் மூச்சு விடாதே. நல்ல வேளை,
நீ என்னை இப்பொ பார்த்தே, இல்லாவிட்டால், அந்த அசட்டு கோபு கோண்டு மாமா திடீரென்று
போயாச்சுன்னு கூட வதந்தி கிளப்பி இருப்பான்,” என்று சொல்லி கலகலவென்று சிரித்தார்.
“ஒன்னு ஞாபகம் வைச்சுக்கோ.
கேள்விப்படற பேச்சில் பாதிதான் நிஜம். கேட்ட தையெல்லாம் நம்பாதே, நம்பினதையெல்லாம்
சொல்லாதே. சரிதானே நான் சொன்னது” என்றார்.
நகைச்சுவையானக். கதை மூலம் , ஒரு நல்ல கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள். அருமை
ReplyDelete#கேள்விப்படற பேச்சில் பாதிதான் நிஜம். கேட்ட தையெல்லாம் நம்பாதே, நம்பினதையெல்லாம் சொல்லாதே. சரிதானே நான் சொன்னது#
ReplyDeleteஉண்மையை கதையாக உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
கண்ணு காது மூக்கு வச்சு சொல்றதுங்கறது நிஜம்தான்னு தெரியறது :). ரொம்ப நல்ல கதை!
ReplyDeleteSo my h fun to read this one, felt like watching a Balachandet movie 😃
ReplyDeleteInteresting story apart with a good message too what now interests me is to taste molaga bajji ---a bajji pirian! Cheenu 9840366478
ReplyDeleteInteresting story apart with a good message too what now interests me is to taste molaga bajji ---a bajji pirian! Cheenu
ReplyDelete