எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை.. யாரிடமாவது சொல்லி அழணும் போல இருக்கு. பத்தாவது வகுப்பில் பெயிலாகி விட்டேன்.. மற்ற பையன்கள் பெண்கள் எல்லோரும் சிரித்து கொண்டும் தோள் மேல் கை போட்டு கொண்டு சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் என் அருகில் வரவில்லை.. புனிதா மட்டும் என்னை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிந்தது. அவள் முகத்தில் சிரிப்பு இல்லை. சற்று இறுக்கம் போல தெரிந்தது. ஆனால் அவள் வகுப்பில் எப்போதும் முதல் மூன்று இடத்திற்குள் இருப்பாள். அதனால் இந்த முக வாட்டம் என்னை பற்றி தான் இருக்கணும். மற்ற பெண்கள் அவளருகில் வந்தவுடன் அவள் கவனம் திசை மாறி விட்டது. முக்கால்வாசிப் பேர் வீட்டுக்கு போய் விட்டார்கள்.தற்போது என் கவலை எல்லாம், நல்ல எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும், அம்மா அப்பாவிடம் எப்படி சொல்வது என்று தான். இந்த தேர்வு முடிவை கேட்டால் கட்டாயம் இடிந்து போய் விடுவார்களேன்னு ஒரு தயக்கம். என்னை நம்பித்தான் எங்க குடும்பத்தோட முன்னேற்றத்தை இருவரும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்பாவுக்கு கொஞ்ச நாளாகவே நெஞ்சு வலி.. வெளியில் சொல்வதில்லை, யாரும் பார்க்காத போது நெஞ்சை நீவி விட்டு கொண்டிருப்பது எனக்கு தெரியும். கல்யாண சமையல் தொழில். எப்பொழுதும் சிரமமான வேலை. அவர் வீட்டில் இருப்பது ரொம்ப குறைவு. அம்மா இருப்பதை வைத்துக் கொண்டு ரொம்ப சிக்கனமா சமாளித்து கொண்டிருந்தாள். பள்ளிக்கூட சம்பளம் செலுத்துவதே கடினமான காரியம்.
என்னோட தங்கை கிரிஜா ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பில் ரொம்ப சுட்டி.. எல்லாவற்றிலும் அவள்தான் வகுப்பில் முதல்.. எப்போது படிக்கிறாள்னு தெரியாது. அம்மாவுக்கு நிறைய உதவி பண்ணி கொண்டிருப்பாள். வாயை திறந்து எதையும் அம்மாவிடம் வேண்டுமென்று கேட்டு பார்த்ததில்லை.
கோவில் பக்கத்தில் அக்ரஹாரத்தில் ஒரு சேதமான ஒட்டு வீடு. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் உண்டு. தரை எல்லாம் பேர்ந்து இருக்கும். சாணியில் மெழுகி காப்பாற்றிக் கொண்டு வருகிறோம். வீடு கோயிலை சேர்ந்ததா அல்லது வேறு யாருக்கு சொந்தமா என்று கூட தெரியாது. யாரும் வாடகை கொடுப்பதில்லை. கார்ப்பரேஷன் லாரி தண்ணி தான்.. கிரிஜா எப்போதும் தண்ணி வாளியுடனோ அல்லது ஊசியும் கிழிந்த பாவாடையை தைத்து கொண்டோ இருப்பது தான் என் கண் முன் நிற்கிறது
ஒரு ஓரத்தில் இந்த கவலைகளோடு மூழ்கி இருக்கையில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக என்னோட ஆசிரியர் கந்தசாமி சார் நான் தனியாக இருப்பதை பார்த்து என்னருகில் வந்தார்.. சற்று வயதானவர்,என் அப்பா சுந்தரம் அவரின் பால்ய நண்பர். . என்னிடம் வாஞ்சையாக இருப்பார், என் முதுகை தடவி கொடுத்து கொண்டே சொல்லலானார். என் முகத்தைப் பார்த்தே தேர்வு முடிவு அவருக்கு தெரிந்திருக்கும்..
“செல்லப்பா, எதற்கும் கவலைப் படாதே. எல்லோருக்கும் எல்லாம் கை கூடுவது இல்லை. ஒவ்வொருவருக்கும் சில திறமையும் சில தோல்வியும் இருக்கும் .. உனக்கும் கணக்குக்கும் சரிப்பட்டு வரலை.. டியூஷன் வைப்பது உன் அப்பா சம்பாத்தியத்தில் நினைச்சு கூட பார்க்க முடியாது. நானோ தமிழ் ஆசிரியர். என்னால் உனக்கு சொல்லி தரவும் இயலாத நிலை . அனாவசியமா இன்னொரு வருடம் படித்து நேரத்தை விரயமாக்குவதில் பிரயோஜனமில்லை. புத்தக படிப்பு தான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி என்று சொல்ல முடியாது. அநேகம் பேர் ஏனைய தொழில்களில் நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இன்று இரவு எட்டு மணி அளவில் நேரில் வந்து பார்க்கிறேன் என்று அப்பாவிடம் சொல்லு,"என்றார்.
வீட்டுக்கு வந்தவுடன் அம்மா என் முகத்தை உற்று பார்த்தவுடன் ஒரு நொடியில் ஒன்றும் பேசாமல் தன்னை சுதாரித்துக் கொண்டு, “நாழி ஆகிறது, சாப்பிட வா," என்றாள்.
அங்கே வந்த அப்பாவிடம், “குழந்தை சாப்பிடட்டும்.அப்புறம் பேசலாம்,"என்றாள்
"ரொம்ப பசியாமோ?" என நக்கலுடன் கேட்டு விட்டு நகர்ந்தார்.
சாப்பிடுகையில் சன்னமாக , “அப்பா எது பேசினாலும் பதில் சொல்லாதே.. பொறுமையுடன் கேட்டுக் கொள்," என்றாள்.
"அப்பாக்கு தெரியுமா? யார் சொன்னாங்க? " என கேட்டேன்.
மெலிதாக சிரித்துக் கொண்டே,"உன்னோட முகம் தான்" என்றாள்
அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தார்.
"கந்தசாமி சார், என் தமிழ் ஆசிரியர் இரவு எட்டு மணிக்கு வருவதாக சொல்லச் சொன்னார்," என தாழ்ந்த குரலில் சொன்னேன்.
“எதுக்கு? துக்கம் விசாரிக்கவா?அவர் வந்து உன்னோட தலை எழுத்தை மாற்ற முடியுமா?. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கே, ஸ்கூலுக்கு தலை முழுகிப் போட்டுவிட்டு நீயும் என்னை மாதிரி கையில் கரண்டியுடன் சமையல் வேலைக்கு நாளைலேர்ந்து வா. அதுக்கு தான் லாயக்கு. இப்போ சற்று என்னை தனியாக விடு," என்று கூறி விட்டு முகத்தை திருப்பி கொண்டு விட்டார். கிரிஜா என் கையை பற்றி ஆதரவாக வெளியில் அழைத்து சென்றாள்.
சொன்னபடியே கந்தசாமி சார் வந்தார். “செல்லப்பா, நீ வெளியே இரு," என்று அப்பா எரிச்சலுடன் கூறினார்.
"சுந்தரம், நாம பேச போவது அவனை பற்றிதான்,அவனும் கூட இருக்கட்டும்,"என்றார் கந்தசாமி
"உன்னோட ஆதங்கம் தெரியும் .இருந்தும் நீ நான் சொல்வதை பொறுமையாக பதட்டப் படாமல் கேட்கணும், சரியா?" என்று ஆரம்பித்தார். என்னை பார்த்து “என்னருகில் உட்கார்," என்றார்..
“உன் மகன் மக்கு இல்லை. இதை நன்றாக புரிந்து கொள். தமிழில் அவன் வகுப்பில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறான்.. தமிழில் ஆர்வம் இருக்கிறது. கணக்குதான் வருவதில்லை. அதனால் தோல்வி அடைகிறான்.
சாதாரணமாக புத்தக படிப்பு இருந்தால் வாழ்க்கையில் முன்னேறுவது சுலபம். ஆனால் நிறைய மக்களுக்கு படிப்பு எளிதில் அமைவதில்லை.. காரணங்கள் பல உண்டு. பண வசதி இல்லாமை , குடும்ப சூழ்நிலை, சிறு வயதிலேயே வேலைக்கு போகும் நிர்பந்தம், சொந்த திறன் குறைவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏற்கனவே உன் பையனிடம் சொன்ன மாதிரி . எல்லோருக்கும் எல்லாம் கை கூடுவது இல்லை. ஒவ்வொருவருக்கும் சில திறமையும் சில குறைகளும் இருக்கும்.
அநேகம் பேர் ஏனைய தொழில்களில் நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். நான் அரசியல்வாதிகளை பற்றி சொல்லவில்லை. என்னுடைய மகனே எட்டாம் வகுப்போ என்னவோ விட்டுவிட்டு இன்று பல கடைகள் வைத்து நிறைய வருமானம் மிக்க வசதியாக இருக்கிறான். அப்பா வேலையை விடு என்று வற்புறுத்துகிறான். நான் தான் இதை வேலையாக பார்க்கவில்லை. ஒரு கடமையாக செய்கிறேன் என்று சமாதானப் படுத்துவேன். ஆகையால் மறுபடியும் படிக்க சொல்லி காலத்தையும்,பணத்தையும் விரயமாக்குவதில் அர்த்தமில்லை,. சரிதானே” என்றார்.
"கந்தா, நீ என்ன சொல்ல வருகிறாய் ?' என்றார் சுந்தரம்
“என் மகன் எலக்ட்ரிக் துறையில் பல கடைகள் வைத்து இருக்கிறான். கொள்ளை வருமானம். நிறைய ஆட்கள் அவன் கீழ் வேலை செய்கிறார்கள். ஆறு மாதத்தில் செல்லப்பாவை தொழிலில் அனுபவ பூர்வமாக தேர்ச்சி அடைய செய்ய முடியும். பிறகு அவன் ஒரு கடையை தனியே பார்த்து கொள்ள என் மகன் பொறுப்பை கொடுப்பான். சில வருடங்கள் பிறகு செல்லப்பாவே தன் தொழிலை நல்ல இடத்தை தேர்ந்து எடுத்து தனியாக செய்யட்டும்.”
முதல் ஆறு மாதம் கொஞ்சம் பணம் தருவான். அப்புறம் அவன் கடையின் வருமானத்தை பொறுத்து அவன் சம்பளம் நிர்ணயிக்கப் படும். நாம் இருவரும் சம்பாதிப்பதை விட பல மடங்கு வருமானம் கட்டாயம் இருக்கும். தற்போது எங்கும் வீட்டு கட்டுமானம், நிறைய காலனிகள் வந்து கொண்டே இருக்கிறது. நல்ல மார்க்கெட் . .
சொந்த கடை துவங்கிய பிறகு அவன் உழைப்பு, சாமர்த்தியம், கடவுள் அருள் பொறுத்தவை. இப்போது பதினாறு வயது, இருபத்தைந்தில் நல்ல வசதியாக இருப்பான். என்ன சொல்றே?" என்றார்.
"செல்லப்பா, உனக்கு என்ன தோன்றுகிறது? தைரியமாக சொல்லு." என்றார் சுந்தரம்
"அப்பா, நீங்க என்ன முடிவு பண்ணுகிறீர்களோ, அதுவே என் முடிவு," என பணிவுடன் சொன்னேன்.
“எனக்கும் என் நண்பர் கந்தன் சொல்வது சரியான வழி என தோன்றுகிறது. எப்படியும் சமையல் தொழிலை விட வருமானத்தில் மேம்பட்டதாக இருக்கும். சரி என்று சொல்லி விடட்டுமா என சற்று உரக்க சொன்னார்."
"நீங்க சொன்னா எங்களுக்கும் சரிதான்," என சன்னமான குரல் உள்ளிருந்து வந்தது.
“ரொம்ப மகிழ்ச்சி. இன்றிரவே மகனிடம் பேசி, நாளைக்கு தகவல் கூறுகிறேன். அதற்குள் நல்ல நாளாக பார்த்து அன்று வந்து சேரட்டும். இந்த கவரில் கொஞ்சம் பணம் இருக்கு. செல்லப்பாவிற்கு இரண்டு புத்தாடைகள் வாங்கிக் கொடுங்கள். கடையில் நிறைய சைக்கிள் இருக்கிறது. ஒன்றை அவனுக்கு கொடுக்க சொல்லுகிறேன்.. நான் கிளம்பட்டுமா? “ என்றார்.
"நான் கொஞ்ச நாட்களில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். நீங்க அவனுக்கு ஒரு வழி காட்டி, உங்க மகனின் பொறுப்பில் விடுவதே மிகப்பெரிய அன்பளிப்பு, என்றவாறே அவரை கட்டி கொண்டார்.
"சுந்தரம், நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை. எப்போதும் தயக்கம். எதையும் வாங்கி கொள்ள மாட்டே".
நல்ல வேளையாக செல்லப்பா விஷயத்தில் விட்டு கொடுத்தே,". என்றார் சிரித்தவாரே.
" கந்தா, எனக்கு ஒரு ஆசை. நம்மிருவர் முன்னிலையே செல்லப்பா ஒரு உறுதி அளிக்கட்டும். உன் வாக்கு பலனால் அவன் சொந்தமாக பின்னர் கடை வைக்கும் வேளையில், அதற்கு “கந்தன் எலக்டிரிகல் ஸ்டோர்ஸ்' என பெயரிட வேண்டும்” என்றார் உணர்ச்சி வசப்பட்டு
"கட்டாயம் அப்பா," என்று இருவர் காலில விழுந்து வணங்கி ஆசி பெற்றான்