"அதெல்லாம் முடியாது.டாக்டர் அரை பாட்டலுக்கு மேலே தண்ணி கொடுக்க கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிவிட்டார்"என்றாள்
"ஒரு சொட்டு வாயில விடேன். தொண்டை ஒரே எரியறது" என்று கெஞ்சினாள் கிழவி.
"ஏற்கனவே கால் ரெண்டும் அப்பம் மாதிரி வீங்கி இருக்கு.அப்புறம் மூச்சு விட முடியாம கஷ்டபட்டா யாரு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போறது?அவர் பாட்டுக்கு ஆபீசே கதின்னு கிடக்கிறார்.இன்னும் அரை மணிலே சாப்பிடச்சே குடிச்சா போறும்" என்றாள் ருக்மிணி. பாவம் கிழவி,தலையை திருப்பிண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.
பங்கஜத்துக்கு ஐந்து பிள்ளைகள்,மூன்று பெண்கள். மற்ற எல்லோரும் கையை கழுவி ரெண்டாம் பிள்ளை கோதண்டத்திடம் விட்டு விட்டார்கள்.ருக்மிணி கொஞ்சம் வெடுக்குனு பேசுவாள். ஆனால் மனது இளகியது.குறை ஒன்றும் இல்லாமல் பார்த்து கொள்வாள்.பாக்கி ஒர்ப்பிடிகள் மாமியாரை கிட்டநெருங்கவிடாதுகள்.ஏதோ காரணம், இடம் போறாது,,குழந்தைகள் படிக்கிறார்கள்
,தன்னோட அம்மா அப்பாக்கு வேற இடமில்லை,பணக்கஷ்டம்,வெளிஊரு என்று ஆயிரம் சால்ஜாப்புகள்.இருந்தாலும் இங்க எப்போவாவது வெறும் கையோடு வரும்பொழுது மாமியார் காதில் விழும்படியாக "ருக்மிணி, அம்மா கேட்டதை பண்ணி கொடு,ரொம்ப வயசாச்சு அவ்வளவு கண்டிப்பா இருக்க வேண்டாம் ' என்று மேம்போக்காக பேசிவிட்டு செல்வார்கள்.ருக்மிணி கண்டு கொள்ள மாட்டாள்.பாவம்,அவளுக்கு குழந்தை இல்லை.வசதியாக இருந்தாள்.நிறைய ச்நேகிதிகள்.ஏழைகளுக்கு உதவி செய்ய போய் விடுவாள்.
,தன்னோட அம்மா அப்பாக்கு வேற இடமில்லை,பணக்கஷ்டம்,வெளிஊரு என்று ஆயிரம் சால்ஜாப்புகள்.இருந்தாலும் இங்க எப்போவாவது வெறும் கையோடு வரும்பொழுது மாமியார் காதில் விழும்படியாக "ருக்மிணி, அம்மா கேட்டதை பண்ணி கொடு,ரொம்ப வயசாச்சு அவ்வளவு கண்டிப்பா இருக்க வேண்டாம் ' என்று மேம்போக்காக பேசிவிட்டு செல்வார்கள்.ருக்மிணி கண்டு கொள்ள மாட்டாள்.பாவம்,அவளுக்கு குழந்தை இல்லை.வசதியாக இருந்தாள்.நிறைய ச்நேகிதிகள்.ஏழைகளுக்கு உதவி செய்ய போய் விடுவாள்.
பங்கஜத்துக்கு கண்ணு அவ்வளவா தெரியலை.டிவி பார்க்க மாட்டாள்.புஸ்தகம் படிக்க முடியாது.மனப்பாடமான ஸ்லோகங்களை வாய் முணுமுணுத்து கொண்டிருக்கும்.முகுந்த மாலை,சுதர்ஷனாஷ்டகம்,ரகுவீர கத்யம் மட்டும் சொல்ல தெரியாது. ருக்மிணி எப்போவாவது பங்கஜம் கேட்டால் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு படிப்பாள்.விஷ்ணு சஹஸ்ரநாமம் மாத்திரம் டேப் ரெகார்டர் ல போடுவாள். பங்கஜத்துக்கு பேச்சு துணை யாரும் இல்லை.நாள் முழுவதும் தனிமை தான்.பங்கஜத்தின் தம்பி பேரன் ராமானுஜம் மாதம் ஒரு தடவை அத்தை பாட்டியை பார்க்க வருவான்.அவன் ஒரு வக்கீல்.ஏதோ இருவரும் கச முசவென்று பேசி கொண்டிருப்பார்கள்.ருக்மிணி அருகில் போவதில்லை.
பங்கஜத்துக்கு ஒரு வாரமாக ஒரே அசதி.படுக்கையில் நாராக துவண்டு கிடந்தாள்.உட்கார கூட ஸ்ரம பட்டாள்.ஒரு நாள் காலை 11மணி இருக்கும்.ருக்மிணி மாமியார் அருகில் ஸ்லோகங்களை படித்து கொண்டு இருந்தாள்.திடீரென்று தலை சாய்ந்து விட்டது.பதறி போய் டாக்டரை கூப்பிட்டதில்"பாட்டி இறந்து முப்பது நிமிஷம் ஆச்சு"என்று சொல்லி கிளம்பிவிட்டார்.ருக்மிணிக்கு கை கால் ஓடலை.கண்களிலிருந்து பொலபொல வென்று தண்ணி கொட்டியது.சொல்லவொணா துக்கம் அடைத்தது.முதலில் கோதண்டம் பின்னர் எல்லா அண்ணன் தம்பிகள் அவர்கள் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாச்சு.
கார்யம் எல்லாம் முடிந்து இரெண்டாம் நாள் குடவாசல் வாத்யார் என்ன என்ன பண்ணனும் நு சொல்லி கொண்டிருந்தார். "கார்யம் எல்லாம் நன்னா ஸ்ரத்தையா தான தர்மத்தோடு விமரிசையா பண்ணனும்'என்றாள் மூத்த மருமகள்.இன்னும் இருவர் தலையை ஆட்டினர்.பிள்ளைகளும் ஆமோதித்தனர்.ஒருத்தி சொன்னாள்'மாமியார் இஷ்டப்படி தண்ணி குடிக்க கூட முடியாம கஷ்ட பட்டார்.நல்ல வெள்ளி சொம்பா தானம் பண்ணனும்."இன்னொருத்தி மாட்டு விக்ரகம் எல்லாம் கூடாது.நிஜ பசு மாட்டையேகொடுக்கணும்"என்றாள்.இப்படி ஒவ்வொருத்தர்ஒன்னொன்னுசொல்லிகொண்டிருந்தார்கள். மூத்த பிள்ளை "சேவா காலம் நிறைய பாசுரங்களை சேவித்து அரையும் குறையும் இல்லாமல் முழுமையா பண்ணனும்.சுபத்துக்கு நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவா 'என்றார்.
வாத்யார் மௌனமாக எல்லோரையும் கேட்டுவிட்டு சொன்னார்.'நீங்கள் எல்லாம் ஸ்ரத்தையாக பண்றேள்.ரொம்ப சந்தோஷம்.பாட்டி ஆத்மாக்கு நல்லது.தானம் தான் அவங்களை கரை சேர்க்கும்.உங்கள் இஷ்ட படியே பண்ணலாம்.குறைந்தது மூன்று லக்ஷம் ஆகும்'"
ஒரே நிசப்தம்.ஒருவர் ஒருவர் முகங்களை பார்த்து கொண்டனர்.கடைசி மாட்டு பெண் சொன்னாள்" ஆகட்டுமே பரவாயில்லை.எல்லோரும் தான் இருக்கோமே."
"அது எப்படி?மாதா மாதம் மாமியாருக்கு பென்ஷன் வரதே.செலவு ஒன்னும் இல்லையே.எல்லாம் சேர்ந்து இருக்குமே" என்றாள் மூத்த மருமகள்.
அப்பொழுது பங்கஜத்தின் தம்பி பேரன் வக்கீல் ராமானுஜம் சொன்னான் "அத்தை பாட்டி என்னிடம் எல்லாம் சொல்லி இருக்கா.அதை விவரமா பதிமூணாம் நாளுக்கு பிறகு சொல்றேன்.காரியத்துக்கு வேணுங்கிற பணம் நிறைய இருக்கு. கவலை வேண்டாம்.ஒன்னையும் குறைக்க தேவை இல்லை."
குடவாசல் வாத்யார் "எல்லாம் ஏற்பாடு பண்ணிடறேன்.நன்றாக குறை இல்லாமல் இந்த ஆத்துலேயே பண்ணிடலாம். கார்ட் இன்னும் ஒரு நாளில் கொடுக்கறேன்.அப்போ நான் உத்திரவு வாங்கிக்கறேன்"என்றார்.
காரியம் எல்லாம் சாஸ்த்ரோக்தமாக முடிந்தது.வாத்யார் தாராளமாக தக்ஷிணை,குடை விசிறி வேஷ்டி டவல் என்று எல்லோருக்கும் கொடுத்தார்.கோவிலில் இருந்து மாலை,பரிவட்டம் வந்தது சுபஸ்வீகாரம் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. . எல்லோருக்கும் ஒரு திருப்தி.
அன்று மாலை நாலு மணிக்கு ராமானுஜம் எல்லோரையும் ஹாலுக்கு வரச்சொன்னான்."நான் வக்கீல்னு உங்களுக்கு தெரியும்.அத்தை பாட்டி முறைப்படி என்ன பண்ணனும் என்பதை பற்றி எழுதி கொடுத்து விட்டு போயிருக்கா.தன்னுடைய பெண்கள் பிள்ளைகள் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள்.தன் பணத்தை பிரித்தால் ஆளாளுக்கு குறைவாகத்தான் கிடைக்கும்.ஆகையால் பாங்கு,டிபாசிட்கள் இருக்கிற பணத்தில் தன்னுடைய காரியத்துக்கு போனதை தவிர மீந்ததை பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கும்,அதை ஓட்டினா போல் உள்ள பள்ளிக்கூடத்துக்கும் சரி பாதியாக பிரித்து கொடுத்து விட சொன்னாள். தன்னுடைய நகைகளை ருக்மிணிக்கு சேர வேண்டியது என்று கூறி இருக்கிறா பாட்டி" என்று சொன்னான்.
சில நிமிஷங்கள் யாரும் பேசவில்லை.திடீரென்று அந்த நிசப்தத்தை மூத்த மருமகள் கலைத்தாள்."மாமியார் சொத்து,மாமியார் நகை,யாரும் அதுக்கு ஆசை படவில்லை.என்ன வேண்டுமானாலும் பண்ணி கொள்ளட்டுமே.பெருமாள் புண்ணியத்துலே நாங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறோம்"என்றாள்.கடைசி மருமகள் “மாமியார் சரியாகத்தானே பண்ணி இருக்கிறார்.அவர் நியாயம் தெரிந்தவர்.ருக்மிணி ஓர்பிடி தானே நன்றாக கவனித்து கொண்டார்.எல்லாமே அவருக்கே கொடுத்து இருக்கலாம்.மாமியார் பண்ணினது எனக்கு பரம திருப்தி"என்றாள்.மற்ற மருமகள்கள் தலையை அசைத்தனர்.பெண்கள் ஒன்றும் சொல்லவில்லை.
அப்போது ருக்மிணி கோதண்டத்தை பார்த்து "எனக்கே நிறைய நகை இருக்கு.குழந்தை குட்டி இல்லை.அம்மா நகைகளை பெண்களுக்கே கொடுத்து விடலாம்.என்ன சொல்றேள்?" என்று சொன்னாள்.
கோதண்டமும் "எனக்கும் அதுதான் சரியாக படுகிறது"என்றார்.
மூன்று பெண்களும் ஒரு சேர "ருக்மிணி மன்னிக்குதான் சேரணும்.அதுதான் எங்கள் விருப்பமும் என்றார்கள்.ருக்மிணி சிரித்தவாரே"என்னோட விருப்பத்தையும் நீங்கள் கேட்டாகணும். என்னுடைய நகைகளையே ஏழை பெண்கள் கல்யாணத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டு இருக்கிறேன்.அம்மா நகைகள் பெண்களுக்கு சேருவதுதான் நியாயம்.மறுக்க வேண்டாம் தயவு செய்து நீங்களே எடுத்து கொள்ளுங்கள் "என்றாள். .
ராமானுஜத்திற்கு அத்தை பாட்டி போட்டோவிலிருந்து லேசாக சிரித்த மாதிரி தோணித்து.