சாயந்திரம் கடியாரம் நாலு மணி காண்பிச்சவுடனேயே அம்புஜம் பாட்டிக்கு இருப்பு கொள்ளாது..வயது எழுபதுக்கு மேல் இருக்கலாம் .டாண்ணு காலை இழுத்துண்டு
கோவிலுக்கு கிளம்பி விடுவாள். ஒடிசலான ஆனால் உயரமான உடல் வாகு. இதில் எப்படி ஒன்பது கஜ புடவையை கட்டிக்கறானு ஆச்சரியம்.
தலையை வாரிண்டு பளிச்சுனு நெத்தியில் ஒரு
ஸ்ரீசூர்ண கீறலுடன் ஒரு கம்பீரம்..
பார்த்தசாரதி கோவில் பக்கத்தில தான் சாத்தானி தெருவில் வீடு.பொடி நடையில் ஐசிங்கர்
(அழகிய சிங்கர்) சந்நிதி வழியா கோவிலுக்கு வந்துடலாம்...
பெருமாள் சன்னிதிக்கு வெளில உள்ள மண்டபத்தில் ஒரு ஓரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்துண்டு விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் சில தடவை
முகுந்தமாலையையும் படிப்பாள். ஒரு நாள் கூட தவறாது. நடு நடுவிலே
பெருமாளை பார்த்துண்டு ஏதோ வாய் முணுமுணுத்துண்டு இருக்கும்.சிலசமயம் கன்னத்தில் பட்டு பட்டுனு
போட்டுப்பாள். யாரிடமும் அநாவசியமாக பேசமாட்டாள்..கும்பல்
இல்லாம இருந்தால் சன்னிதிக்குள்ள போய் பெருமாளை தரிசனம் பண்ணுவாள். தீர்த்தம்
சடாரி வாங்கிப்பாள்..தினம் வருவதால் அர்ச்சர்களுடன் நல்ல பரிச்சயம்.
அதில் ஒருவர் சிங்கம் ஐயங்கார். பிரதான அர்ச்சகர் இல்லை. ஆனால் சாயந்திர
வேளைல கட்டாயம் பார்க்கலாம். வயது 65 இருக்கலாம். அவருக்கு இந்த வயதான பாட்டி மேவ
ஒரு கரிசனம். முக்கியமான தினங்களில் ஏதாவது பிரசாதம் சக்கரை பொங்கல்,புளியோதரை,தோசை
வடைனு ஏதாவது பொட்டலத்தில் கட்டி கொடுப்பார்.
"உங்க சொந்த விஷயத்தில் தலை இடுவதாக நினைக்க வேண்டாம். தினம் மனமுருகி .பக்தியோட
பெருமாள் கிட்ட ஏதோ வேண்டிக்கொள்வது தெரிகிறது. இன்னமும் அவர் செவி சாய்க்கலை
போலும் தோணுகிறது.என்னால் ஏதாவது உபகாரம் பண்ண முடியும்னு தோணினால்
தயக்கமில்லாமல் சொல்லுங்கோ.".என ஒரு நாள் பரிவுடன் கேட்டார்.
:உங்க
கிட்ட சொல்ல என்ன தயக்கம். வாழ்க்கையில்
ரொம்ப கஷ்டபட்டுட்டேன். பணத்துக்கு கஷ்டமில்லை. ஒரே பெண் இருந்தாள். பார்த்து
பார்த்து நல்ல இடம்னு ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.. அவா நல்ல
குடும்பம்தான். அவன் பெரிய போக்கிரி தறுதலைனு
பின்னாடி தான் தெரிந்தது. எல்லா கெட்ட பழக்கமும் உண்டு..வாயில் பொய்யை தவிர வேற வராது. இது போறாதுன்னு.கொடூர புத்தி வேற..என் பெண்ணோ அவனுக்கு நேர் எதிர் , சாந்த சுபாவத்தோட,நல்ல
பண்புகள்,கெட்டிக்காரி. அதிர்ந்து பேச மாட்டாள்.இதனால்
அவனுக்கு இன்னமும் கோபம் வந்து கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவான்.அவள் உண்டாகி எட்டு மாதம்
இருக்கையில், அவன் .கேட்ட பணம் தன் வசமில்லை என்று சொன்னதால் கோபத்தில் இடுப்பில் உதைத்தான்..எசகு பிசகா அடிபட்டு
குழந்தை பிறந்து அவள் ஒரே வாரத்தில் போய் சேர்ந்து விட்டாள்.
பெண் குழந்தையை நாங்க எடுத்துண்டு வந்துட்டோம்.குழந்தையை
கொடுக்கறதுக்கு பணம் வேணும்னு அடம்
பிடிச்ச்சான்..என்னோட மருமான் போலீஸ்ல வேலை. அவனை கூட்டு மிரட்டினதில
பெட்டி பாம்பாய் அடங்கிட்டான்.என்னோட பேத்தின்னு பெருமையாக பீத்திகலை
. ரொம்ப
அழகி..அவள் அம்மா மாதிரியே சூட்டிகை குணம் பழக்க வழக்கம் எல்லாம் இருக்கு .பெரிய
படிப்பு படிச்சு நல்ல வேலைல
இருக்காள்.இந்த வைகாசில.வயது 26 .முடிய போறது அவளை நல்ல படிச்ச குணவான் ஒருத்தனிடம் கொடுத்துட்டா நிம்மதியா பிராணனை
விடுவேன்.ஒண்ணும் அமையலை .அதுதான் தினம் இங்கே
வேண்டிக்கறேன்," என்றாள்
"கோத்திரம் என்ன? என்ன படிச்ச்சாள், எங்க
வேலை.?ஏதாவது காதுல பட்டா சொல்கிறேன்,"என்றார்..
.
"எனக்கு விவரமா தெரியாது. கேன்சர் மாதிரி
வியாதிக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ணி மருந்து கண்டு பிடிக்கற வேலையாம்.படிச்சிண்டே இருப்பாள்.
கை நிறைய சம்பளம்."
பலே பலே!. அசாத்திய கெட்டிகாரி தான்.
என்ன உசரம் இருப்பாள்?"
"அவ அம்மா மாதிரி நல்ல உசரம்...நீங்க ஒரு உதவி
பண்ணனும் கட்டாயமாக. பண்ணுவேளா?," அம்புஜம் பாட்டி கேட்டாள். கூடவே "நானும்
வருஷ கணக்கா ஆத்மார்த்த பக்தியோட வேண்டாத
நாள் இல்லை. என் மேல் என்ன குறையோ தெரியலை . பெருமாள் கண்ணை திறக்கலை."என
அங்கலாய்த்தாள்
"எது எப்போது நடக்கணும்னு பெருமாளுக்கு
தெரியாததா?.வேளை வரும் போது கட்டாயம் செவி சாய்ப்பார்.
கவலைப்பட
வேண்டாம்,"ஆறுதலாக
சொன்னார்.
. "எனக்கு ஒண்ணு தோணறது. நீங்க 365
நாட்களும் எம்பெருமான் எதிரிலேயே நின்று கொண்டு அவருக்கு கைங்கரியம் பண்ணிண்டு
இருக்கேளே.முழு நேரமும் நாக்கிலே அவர் நாமம்தான், தரிசனமோ எப்போதும் அவரோட திவ்ய ரூபத்தை தான். நீங்க
எனக்காக ஒருதடவை அவர் காதில் போட்டா நிச்சயமாக நடக்கும்னு என்னோட தீவிர
அபிப்பிராயம். தயவு செய்து பண்ண முடியுமா?." என கெஞ்சாத குறையாக வளைந்தாள்..
சிங்கம் அய்யங்கார் குலுங்க குலுங்க
சிரித்தவாறு சொன்னார்," நான்
பணத்துக்காக இங்க வேலை பண்ணலை.என்னோட பசங்க "போதும்
அப்பா கோவில்ல வேலை பண்ணினது.வீட்டோடு இருங்க ,"
என்று வற்புறுத்துகிறா..எனக்கு தான் பெருமாளை விட மனசில்லை.அவரை
பாக்காம இருக்கவே முடியாது.ஆனால் என்னோட
பக்தி அவருக்கு தெரியுமோ தெரியாதோ.? ஏதோ சம்பளத்திற்காக வேலை பாக்கறான்னு
நினைக்கலாம்."
" இப்படி சொல்லி தட்டி கழிக்காதீங்கோ. நீங்க
தனியா அவரோடு இருக்கையில் அந்த கிழவியோட பேத்திக்கு
உடனே கல்யாணம் நல்ல இடத்தில் ஆகனுன்னு அடிச்சி சொல்லுங்கோ.அவர் கட்டாயம் உங்க வார்த்தைக்கு காது
கொடுப்பார்.அவர் எடுத்துண்ட காரியம் எப்போதுமே ஜெயம் தான். உங்களுக்கு கோடி
புண்ணியம் உண்டு இந்த ஒத்தாசை ஒன்றே
போறும் " என்றாள்..
சிங்கம் ஐயங்காருக்கு பச்சாதாபம் கலந்த குழப்பம் மேலிட்டது .இந்த கிழவிக்கு சாதாரண அர்ச்சகரின் பக்தியின் மேல் என்ன தீவிர நம்பிக்கை. பகவான் பக்கத்திலேயே இருப்பதால் அவருக்கு தன்னிடம் நெருக்கம் இருக்கும் என்கிற கிழவியின் பேதைமை..இருந்தாலும் தட்ட முடியாமல், " கவலை வேண்டாம், கட்டாயம்
அவரிடம் விண்ணப்பம் பண்ணுகிறேன். .எனக்காக இல்லா விட்டாலும் உங்கள்
நம்பிக்கைக்காகவாவது முடித்து கொடுப்பார்.,"என்றார்
அவருக்கு இரவு
முழுக்க தூக்கம் இல்லை. பெருமாளிடம் சிபாரிசு பண்ண நான் என்ன அந்த பாட்டிக்கு பெரிய
குருவா? என்ன அதிகப்ரசங்கித்தனம் என்கிற எண்ணம் மனதில் ஓடியது.
பாட்டியின்
நிலையும் சங்கடத்தை உண்டு பண்ணியது..மறு நாள் பிரதான
அர்ச்சகர் வராததால் இவர் அதி காலையிலேயே போகும்படியாகி விட்டது. வழக்கத்தை விட மிக ச்ரத்தையாக
அவசரப்படாமல்
பூஜையை முடித்தார்..
சன்னிதியில் யாருமில்லை. . ஏதோ ஒரு அசட்டு
தைரியத்தில் ,” எம்பெருமானே ,நான் எனக்காக விண்ணப்பிக்கலை.அந்த
வயதான அம்மாள் இரண்டு வருஷமாக
தினம் மனமுருகி உங்கள் சந்நிதிலே ப்ரார்த்தனை
பண்ணுகிறாள். உங்களுக்கு தெரியாதது இல்லை. எனக்கு உங்களிடம்
அதிக ஸ்வாதீனம். உண்டு என நினைத்து
கொண்டு உங்கள் காதில் போட சொன்னாள். உங்கள் காருண்யம் அளவிட முடியாதது. கூட்ட
மாத்திரத்திலேயே யானைக்கென்ன, திரௌபதிக்கு என்ன என்று ஓடி வரவில்லையா?நாராயண சப்தம் கேட்டாலே சுகம் உண்டாகும்னு உங்க பெருமை பிரசித்தமாச்சே..அந்த கிழவி
பக்கம் உங்கள் பார்வையை திருப்ப மாட்டேளா,” என அழாதக் குறையாய் யாசித்தார்..
பெருமாளிடமிருந்து ஒரு சலனமும் இல்லை।
இவரை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல அய்யங்காருக்கு பட்டது। அப்படியே
சாஷ்டாங்கமாக கீழே விழுந்து தன்னை மன்னிக்கும் படியாக வேண்டி கொண்டார்।அவர்
எழுந்த போது ஒரு புஷ்பம் பெருமாளின்
கையிலிருந்து விழுந்தது। அய்யங்காருக்கு
உடலெல்லாம் புல்லரிப்புடன் கூடிய புளகாங்கிதம்। பாட்டியிடம் இந்த நல்ல சூசகத்தை சொன்னால் சந்தோஷப படுவாள் என
நினைத்து கொண்டார். ஆனால் அன்று மாலை அவர் கோவிலுக்கு
வரவில்லை।
அன்று இரவு நல்ல தூக்கத்திற்கு இடையே
திடீரென்று சந்தனம் பூவின் வாசனையோடு மணி அடிக்கும் சப்தம் போல கேட்டது।ஸ்வப்னமா அல்லது நிஜமா என்று
தெரியாத ஒரு நிலை। எதிரே மீசையுடன் கூடிய பெருமாளேதான் சிரித்த வண்ணம் அவரை
பார்த்து கொண்டு இருந்தார் தூக்கி வாரி போட்டு அய்யங்கார் நெடுஞ்சாண்கிடையாக அவர்
காலில் விழுந்தார் ।।
கணீரென்ற குரலில் ,"என்ன சிங்கம் ஐயங்காரே கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்க்கு
அலைகிறீரே। என்னையும் யானையை காப்பாத்தின மாதிரி உடனே வரணும்னு வேற கட்டளை
இடுகிறீர்களே । நீங்க முடிக்கவேண்டிய
சிறிய விஷயம் அல்லவா?"; நகைத்தவண்ணம்
கேட்டார்।
"பரந்தாமா, என் சிறிய புத்திக்கு
எட்டவில்லையே";
"ஆற அமர யோஜியும்।நல்லபடியா முடியும்।
" என கூறி அடுத்த க்ஷணமே மறைந்தார்.
ஐயங்காருக்கு கனவா நினைவா என தெரியாமல் வேர்த்து
கொட்டியது। உடனேயே புரிந்து கொள்ள இயலாத தனது மந்த புத்தியை கடிந்து கொண்டு படுத்த
வண்ணம் யோஜித்து கொண்டு இருக்கையில் எங்கோ மணி 12 அடித்தது।
மறு நாள் பாட்டி அவரிடம்,” "நேற்றைக்கு உங்களை பார்க்க முடியலை. உடல் நலம்தானே என்றாள்।
" எல்லாம் சரியாக இருக்கு। பெருமாள் காதில்
நேற்றே போட்டு வைத்தேன்। உடனேயே ஒரு வரன் கிடைச்சது. அதை
பற்றி உங்களுடன் பேசணும்னு நீங்க வருவதை எதிர் பார்த்துண்டு இருந்தேன்।
நான் சொன்னேனா இல்லையா?நீங்க கேட்ட அடுத்த
க்ஷணமே பெருமாள் கண்ணை திறந்து விட்டார்।எவ்வளவு பெரிய பாக்கியம் உங்களுக்கு। வரன்
யாராம்? என்ன பண்ணுகிறான்।?
பையனுக்கு 28
வயது।உசந்த படிப்பு வெளியூர் பேங்க்ல
நல்ல வேலை।கிட்ட தட்ட மாதம் ரெண்டு லக்ஷம் வருமானம்।வசதியான வீட்டுல பெங்களூர்ல ஜாகை।।
இந்த போட்டோ பின்னாடி எல்லா விவரமும் இருக்கு।பேத்தியிடம்
காண்பிங்கோ।।அவளுக்கு பிடித்தால் அவள் படத்துடன் எல்லா தகவலும் கொடுக்க
சொல்லுங்க।நான் அவனிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்றார்।
ஒரு தடவை சூடு
பட்டுண்டேன்। ।ரொம்ப முக்கியமான விஷயம் அந்த பையனும் அவனோட மனுஷாளும் நல்லவாளாக இருக்கணும்।பணம்
முக்கியமில்லை। பணம் முக்கியமில்லை। குணம்
தான் பிரதானம்।இந்த விஷயத்தை தீர விசாரியுங்கோ
என்றாள்।
ஏற்கனவேயே சொல்லி இருக்கேளே।।முதலில் பேத்திக்கு
பிடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்கோ।நான் தேரடி தெருவில அஹோபில மடத்துக்கு அடுத்த வீட்டுலதான் இருக்கேன்।பேத்தியையும் அழைத்துக் கொண்டு நாளை காலம்பற
எட்டு மணிக்கு வாங்கோ।ஞாயிற்று கிழமை தானே।விவரமா பேசி முடிச்சிடலாம்
மறு நாள் பேத்தியுடன் காரில் வந்தார்கள்।பாட்டிக்கு வீட்டை
பார்த்தவுடன் ஒரு பிரமிப்பு।ஏதோ ஏழை அர்ச்சகர் வீடு போல இல்லாமல் வசதிகளுடன் அழகாக
இருந்தது।க்ரானைட் தரையுடன் உயர்ந்த சோபா செட்டோட சுவத்தில பெரிய டிவி ஏர் கண்டிஷனர்। ஐயங்காரின் மனைவியும் சரளமாக வரவேற்றாள்।
" பேத்தி எதிர்பார்த்ததைவிட அழகாக
இருக்காளே।வேதவல்லி தாயாரோட பேர் வேதா। ரொம்ப சந்தோஷம்।அவளுக்கு பையனை பிடித்து
இருக்கணும்னு நினைக்கிறேன்,” என்றார் அய்யங்கார்
ஐயங்காரின் மனைவி எல்லோருக்கும் காபியுடன் வேதா பக்கத்தில் உட்கார்ந்தாள்।
அவா
குடும்பத்தை பற்றி
நன்னா விசாரிக்க முடிந்ததா? அவா
எங்கே இருக்கா??” பாட்டி கேட்டாள்
இங்கே திருவல்லிகேணிலதான் இருக்கா।சரி
ஒண்ணு சொல்லுங்கோ।நீங்க என்னை பற்றி என்ன நினைக்கறேள்? அய்யங்கார் கேட்டார்।
பரம உத்தமமான புருஷர்।பிரபந்தம்
எல்லாம் அத்துப்படி எப்போதும் பகவத் சிந்தனையே தான்।பெருமாளுக்கு ரொம்ப
பிடித்தமானவர்,ரொம்ப உபகாரி।வேற என்ன சொல்வது? நான் பையனோட
குடும்பத்தை பற்றி
கேட்டால் என்னிடம் எதுக்காக இந்த கேள்வி?
அய்யங்கார் இதை கேட்டவுடனே குலுங்க
குலுங்க சிரித்தார்। கிழவிக்கும் வேதாவுக்கும் புரியாமல் அவரின் மனைவியை பார்த்தார்கள்.
“ஒண்ணு சொல்ல விரும்புகிறேன்।முதலில் இந்த பையனை பற்றி எண்ணமே இல்லை। பெருமாளிடம் உங்க பிரார்த்தனையை சொன்னபோது
புஷ்பம் அவர் கையிலிருந்து விழுந்தது।இது நல்ல சகுனம் தான் என
நினைத்துக்கொண்டேன்।।இரவு ஸ்வப்னத்தில் அவர் வந்து வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைகிறீர்களே
என்ற பிறகும் புரியலை। நன்றாக யோஜியும் என கூறி மறைந்தவுடன் தான்
தோன்றியது।பெருமாள் சித்தம் அப்படி இருந்தால் இனிதே நடக்கட்டும்என உங்களிடம் போட்டோ விவரங்களை
கொடுத்தேன்।அப்பொழுதும் உங்களிடம் இவன் யார் என கூறவில்லை,” என்றார் அய்யங்கார்।
உடனேயே அவரின் மனைவி,”,இந்த வரன் வேங்கடகிருஷ்ணன் வேற யாருமில்லை எங்க
பையன் தான்।அவனிடம் வேதா போட்டோவை காண்பித்து பேசினோம் ।அவனுக்கு ரொம்ப திருப்தி।நான் எப்போது பெண்ணை பார்க்க வரணும்னு கேட்டுண்டு இருக்கான். நீங்கதான்
மேற்கொண்டு சொல்லணும்,” என்று சொல்லி சிரித்தாள்
பாட்டியும் வேதாவும் அவர்களோடு
சிரிக்கலாயினர்।