Wednesday, June 1, 2011

ஒட்டியாணம்

ஒரு நாள் விஷ்ணு பகவானுக்கு ஏதாவது வேடிக்கையா பண்ணனும் போல இருந்தது.அப்படியே மாறு வேஷம் போட்டுக்காமல் பூமியில் இறங்கி வந்தார். இரவு நேரம்.அதிகம் மனித நடமாட்டம் இல்லை. ஏட்டு மாணிக்கம் வழக்கம் போல ரோந்து வந்து கொண்டிருந்தார்.
" என்னய்யா ட்ராமாலேந்து வேஷத்தை கலைக்காமல் அப்படியே வந்து விட்டே?பார்த்தால் விஷ்ணு மாதிரியே இருக்கே" என்றார்.
"இல்லையே, நான் எப்பொழுதும் இருக்கிற மாதிரி தானே இருக்கேன்"என்றார் விஷ்ணு.
:என்ன, தண்ணி கிண்ணி போட்டுவிட்டு வந்து இருக்கியா?"
"எனக்கு தாகம் பசி எல்லாம் கிடையாது.ஒரு மாறுதலுக்காக அதிர்ஷ்டவசமாக யாரால் என்னை பார்க்க முடிகிறதோ அவர்களுக்கு தரிசனம் கொடுக்கலாம் என்று ஒரு அவா.நீ தான் முதல் ஆசாமி." என்றார் பகவான்
"பார்த்து பேசு.மாமன் மச்சான் மாதிரி நீ போட்டு பேசறியே.சும்மா ரீல் விடாதே.உள்ளே தள்ளி விடுவேன். புரிஞ்சுதா?' ஏட்டையா கோவப்பட்டார்
பகவான் மெலிதாக அவன் அறியாமையை கண்டு புன்னகைத்தார்
"என்ன சிரிக்கரே .இந்த டுபாகூர் வேலை எல்லாம் வேண்டாம். நீ போட்டுண்டு இருக்கியே பளபளன்னு அதெல்லாம் டூப்ளிகேட் தானே?எங்க அடிச்சே? உண்மையை சொல்லு"என்றார் மாணிக்கம்
"இல்லையப்பா,எல்லாம் நிஜ தங்கம்.வைரம் வைடூரியம் மாணிக்கம் எல்லாமே அப்பழுக்கு இல்லாதது.உனக்கு எது வேண்டுமோ தயக்கப்படாமல் கேள்" என்றார் இறைவன்.
ஏட்டுக்கு ஒரே குழப்பம்.ஒரு வேளை இது நிஜ தங்கமாக இருந்தால் அஞ்சலை எவ்வளவு சந்தோஷப்படுவாள்.இது வரை ஒரு குந்துமணி தங்கம் கூட வாங்கி கொடுத்தது இல்லை.ஆளை பார்த்தால் தப்பா படலையே.பின்னே பைத்தியக்காரனா இருக்குமோ.தடிதடியா போட்டுண்டு இருக்கானே கட்டாயம் பித்தளையாகத்தான் இருக்கும்.
"சும்மா அளக்காதே.இவ்வளவு தங்கம் ரொம்ப பணக்காரன்கிட்ட கூட இருக்காது.நீயோ டிராமாக்காரன்.நிஜத்தை சொல்லு.இல்லாட்டி ஸ்டேஷன் இட்டுண்டு போவேன்" என்று பயமுறுத்தினான்.
"நீ எவ்வளவு தடவை கேட்டாலும் என்னுடைய பதில் அதேதான்" என்றார்.
"அப்போ சரி,எனக்கு உன்னோட ஒட்டியாணத்தை கொடு. கல்லெல்லாம் புதைச்சு இருக்கு.என்னோட பெண்சாதிக்கு பிடிக்கும்" என்று கேட்டு வைத்தார் ஏட்டு.
"இந்தா. எடுத்துகொள்.திருப்தி தானே? ஆனால் ஜாக்கிரதை! யாராவது உன்னிடமிருந்து பிடுங்கி கொள்ளாமல் பார்த்துகொள்.இனிமேல் உன் கண்களுக்கு நான் தெரியமாட்டேன்" என்று சொல்லி மறைந்தார்.
மாணிக்கத்துக்கு ஒரே புல்லரிப்பு.தன்னுடைய அதிர்ஷ்டத்தில் ஒரே ஆச்சரியம். வீட்டுக்கு ஓடிவந்து "அடியே,உனக்கு ஒட்டியாணம் பாரு,போட்டுக்கோ ரொம்ப அழகா இருப்பே" என்று சப்தமாக சொன்னார்.
அவ்வளவு தான் தெரியும்.இடி கனமாக முதுகில் ஒரு அறை விழுந்தது." யாரைய்யா அந்த பொம்பளை?அவ இடுப்புக்கு ஒட்டியாணம் கேக்குதோ?வெக்கம் கேட்ட மனுஷனுக்கு ஒரு நகை வாங்கி போட வக்கு இல்லை.ஏதோ கேடுகெட்ட பொம்பளைக்கு ஓடடியாணமாம்.தூக்கத்தில கூட அவ எண்ணமா?கடவுளே என் வாழ்க்கை இப்படி ஆயிடுத்தே"என்று உரக்க புலம்பலானாள்.
மாணிக்கம் பரக்கப்பரக்க கண்களை துடைத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.

4 comments:

  1. Kadavule nera vandhalum namma makkal thirundha maattaanga

    ReplyDelete
  2. Loved it. Want to read more and more stories. Please write often. Paarthathu, Kettathu, Padichathu, Pidichathu, anything will do. Bring it on!

    ReplyDelete
  3. வழக்கம் போல கலக்கலான கதை அண்ணா!!...:)))

    ReplyDelete
  4. Hahahaaaaa....Hope Manikkam is still roaming in the night!

    ReplyDelete