Friday, June 10, 2011

உங்களுக்கு புரிந்ததா?லலிதா மாமிக்கு 50 வயது இருக்கும்.நல்ல உயரம்,களையான முகம்,கண்களில் ஒரு சிரிப்பு, நடையில் ஒரு கம்பீரம்,விசாலமான நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன் லக்ஷ்மீகரமா இருப்பாள்.
பாவம் மாமிக்கும் மாமாவிற்கும் ஈடே கிடையாது.அவர் கச்சலா சற்று குள்ளமா,தூக்கின பற்களோடு பார்க்க நன்றாக இருக்கமாட்டார்.எப்பொழுதும் முகத்தில் சிடுசிடுப்பு.சிரிப்புக்கு அவரிடம் பயம் போலும்,கிட்டவே வராது. உரக்க பேச மாட்டார் ஆனால் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருக்கும்.மாமி கண்டுக்கொள்ள மாட்டாள்.கிட்டவும் போகமாட்டாள்.எனக்கு அந்த சின்ன 14 வயதிலும் அவர்களிடம் அன்யோன்யம் குறைவு என்று உள்ளூர பட்டது.
மாமா எப்போதும் என்னிடம் அதட்டலாகவே பேசுவார்.எங்கள் வீட்டில் பின்பக்கமுள்ள இரண்டு அறைகளில் அவர்கள் குடித்தனம்..ஒரு நாள் நான் மாமியிடம் மாமா எப்பொழுதும் என்னிடம் எரிந்து விழுந்து கொண்டே இருக்கிறார் என்று சொன்னேன்.
" அவர் ஒரு முசுடு. அவரை கண்டு கொள்ளாதே.வாத்சல்யம்னா வீசை என்ன விலைன்னு கேட்பார்..அவர் இருக்கும் போது வராதே'என்றாள்.
என் தலை மயிர் சுருள் சுருளா தியாகராஜ பாகவதர் மாதிரி நீண்டு இருக்கும்.மாமிக்கு அதை கோதிவிட பிடிக்கும். மாமி அடிக்கடி தின்பதற்கு ஏதாவது கொடுத்துகொண்டே இருப்பாள்.நானும் பள்ளிக்கூடம் விட்டவுடன் 4 மணிக்கெல்லாம் மாமியுடன் தான் இருப்பேன்.
என் அம்மாக்கூட ஒரு நாள் " வயசு பதினைந்து ஆகப்போகிறது. உடம்பு தான் வளர்ந்து இருக்கே தவிர புத்தி குழந்தை மாதிரிதான் இன்னும் இருக்கு. .ஆண்பிள்ளையா விளையாடப்போகாமல் எப்போதும் மாமியோட என்ன?வெளில போய் விளையாடு"என்றாள்.இருந்தாலும் எனக்கு மாமியுடன் இருக்கத்தான் பிடிக்கும்.
மாமிக்கு ஒரே பெண்.மாமாவிற்கு ஏதோ சின்ன வேலை.சம்பளம் அதிகமில்லை.கஷ்ட ஜீவனம்.எப்படியோ தன்னிடமிருந்த நகைநட்டெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணிகொடுத்து விட்டாள்.மீந்தது கைகளில் ஒரு ஜோடி தேய்ந்து போன வளையல்கள்,கழுத்தில் ஒரு மெலிதான சங்கிலி தான். இருந்தும் பெண்ணிற்கு அப்பாவிடம் தான் பாசம் அதிகம்.மாமியுடன் எப்பொழுதும் சலிப்புடன் பேசுவாள்.வாரா வாரம் வருவாள் ஆனால் ஆசையுடன் அன்பாக ஒரு தடவை கூட பேசி பார்த்தது இல்லை.
ஒரு நாள் மாமி என் அம்மாவிடம் கண்களில் கண்ணீர் ததும்ப சொல்லி கொண்டிருந்தது என் காதில் விழுந்தது."மாமி உங்கள் பெண்கள் எல்லாம் எவ்வளவு அன்பாக 'அம்மா'அம்மா 'என்று உங்கள் காலை சுற்றி வருகிறார்கள்.எனக்கு கொடுப்பினை இல்லையே. ஒரே பெண் என்று ஆசையாக வளர்த்தேன்.கொஞ்சம் கூட பாசமில்லாமல் 'நீ கழுத்தில் போட்டுண்டு இருக்கியே அந்த சங்கிலி உனக்கு எதற்கு?என்னிடம் கொடுத்து விடு.என் மாமியார் உங்க அம்மா அப்பா பண்ணினது போறாது' என்று சண்டை போடுகிறாள்."
"கவலை படாதே,லலிதா.அந்த பெண்ணை என்ன கொடுமை படுத்தராங்களோ நமக்கு என்ன தெரியும்?ஏதோ சுவாதீனத்தில கேட்டு விட்டாள். மனதை சங்கட படுத்திக்காதே' என்றாள். என் அம்மா.எனக்கு மாமியை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.
ஒரு நாள் சீக்கிரம் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டேன்.அம்மா எங்கயோ போயிருந்தாள்.நான் மாமியுடன் பேச போய் விட்டேன்.என்னை பார்த்தவுடன் மாமிக்கு ஒரு சந்தோஷம்.பசியாக இருக்கும் சாப்பிடு என்று இரண்டு வடை கொடுத்தாள்.வழக்கம் போல என் தலையை கோதிவிட்டுக்கொண்டு இருந்தாள்.எனக்கு இதமாக இருந்தது.நானும் நெருங்கி உட்கார்ந்தேன்.
"ராஜு,நீதான் எனக்கு ஒரு ஆறுதல்.என்னோட வாழ்க்கையில் அன்போ ஆதரவோ கண்டதில்லை.உன்னை பார்த்தவுடன் கவலை எல்லாம் மறைந்து விடுகிறது."என்றாள் மாமி.
அந்த சமயம் மாமா எதிர்பாராது உள்ளே நுழைந்தார்.எங்களை பார்த்தவுடன் கண்களில் ஒரு கோபம்.வாயில் கனல் தெறித்தது.
"என்ன அசிங்கம் இது.போடா வெளியே.இங்கே மறுபடி வந்தால் என்ன ஆகும்னு சொல்ல முடியாது'என்று உரக்க கத்தினார்..
“ என்ன அபத்தமான பேச்சு.அவன் குழந்தை.உங்கள் கல்மிஷத்தை எல்லாம் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்”.
"எனக்கு எல்லாம் தெரியுமடி.நான் ஏமாளம் நு தப்பா கணக்கு போடாதே. அவன் குழந்தை இல்லையடி,கோட்டான்.இது எவ்வளவு நாளா நடக்கிறதுனும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு ."என்னை பார்த்து போடா வெளியே.வெக்கம் கெட்டவனே"என்றார்.
"அவன் மனதிலே விஷத்தை விதைக்காதீங்க.விகல்பமில்லாத குழந்தை அவன்" என்றாள் மாமி.
பளீர்னு மாமி முதுகில் ஒரு அடி விழுந்தது.அவளை உள்ளே தள்ளிக்கொண்டு கதவை சாத்தினார்.நான் வெளியே ரொம்ப நேரம் நின்றுகொண்டு மாமி விசும்பும் குரலை கேட்டு கொண்டிருந்தேன்.
மறு நாள் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பினபிறகு நேரே பின்பக்கம் மாமியின் பகுதிக்கு சென்றேன்.கதவில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது.அம்மாவிடம் ஓடி வந்து "அம்மா,மாமி வீடு பூட்டி இருக்கே,ஏன்?'என்று வினாவினேன்.
"என்ன காரணம்னு தெரியலை.மாமா வந்து'இங்கே சௌகரிய படலை வேறு வீட்டுக்கு போகிறோம் "என்று சொல்லி சாவியை கொடுத்து விட்டு போய்விட்டார். .லலிதா என்னிடம் வார்த்தைகூட சொல்லிக்காம போனாள்.எவ்வளவு வருஷ பழக்கம்,இப்படியா நிர்தாக்ஷின்யமா இருப்பா மனிதர்கள்.எங்கே போகிறோம்னு கூட சொல்லலை. எனக்கு ஒன்னும் புரியலை"என்றாள். .
எனக்கு ஏதோ லேசாக புரிந்த மாதிரி தோணித்து . மனம் கனமாக இருந்தது.


3 comments:

  1. Nannave purinjudhu. Jaan pillai aanalum aan pillainnu.

    ReplyDelete
  2. Very well written story, leaves me feeling heavy too. You have great skills at story telling @KP. You take us to the very scene.

    ReplyDelete
  3. Your narration clearly showed whether he is a child or not:)

    ReplyDelete