சூரியனே
உதிக்க தாமதமானலும், இடியும் மின்னலும் சேர்ந்து கன மழையும் பொழிந்தாலும் காலை 6 மணிக்கு
சற்றும் பிசகாமல். டிங் டாங், டிங் டாங், டிங் டாங், டிங் டாங் என்று கணீரென்றுபெருமாள்
கோவில் மணியை ஆதி அடிப்பது தவறாது. அந்த மணி ஓசையின் சுனாதத்தில் திளைந்து கக்சிதமாக
ஒரே கதியில் சற்றும் பிசறாது அபஸ்வரம் தட்டாமல் நீண்ட நேரம் அவன் அடிப்பதை கேட்பது
ஒரு சுகமான அனுபவம். கூர்ந்து கேட்பவர்களுக்கு அதில் உள்ள அந்த ஓம் என்கிற தைய்வீக
ஓசை மனதை சில க்ஷணமாவது இறைவன் பால் திருப்பும். ஆதிக்கு அது தொழிலாக இருந்தாலும்,
அவன் அதை பெருமாளுக்கு செய்யும் ஒரு கைங்கர்யமாகவே கருதினான். அந்த கோவில் மணியை இறைவன்
கைகளில் இருக்கும் சங்கு சக்கரம் கதைக்கு ஈடாக தொழுதான்.
ஆதி சிறுவனாக
இருந்த போது அவன் அப்பாவின் கூட மணி அடிக்க தொடங்கி அவரின் மறைவுக்கு பிறகும் அதையே
செய்து கொண்டிருந்தான். மணி அடிக்காத நேரங்களில் கோவில் வாசற்காப்போனாக வேறு அவதாரம்.
மாத சம்பளம் குறைவு. 24 மணி நேரமும் கோவிலிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தத்தால் ஒரு
சிறிய வீடு கோவில் வளாகத்திலேயே கொடுத்து இருந்தார்கள். மதியம் கோவில் ப்ரசாதம் கிடைக்கும்.
ஆனால் அது அவனுக்குதான் போதும். மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு போறாது. கஷ்ட ஜீவனம்
தான். மனைவிக்கு தன் கணவனுக்கு அர்ச்சகர்கள் போல கோவிலுக்கும் வரும் ஜனங்களிடம் பணம்
வசூல் பண்ண சாமர்த்தியம் இல்லையே என ஒரு ஆதங்கம். அதை சொல்லவும் செய்வாள். அதில் அவனுக்கு
உடன்பாடு இல்லை.
இந்த
ஊர் ஒரு பெரிய நகரமும் இல்லை, சிறிய கிராமமுமில்லை. இந்த கோவிலை விட்டால் வேறு கோவில்
அருகில் கிடையாது. ரொம்ப பெரிய கோவிலுமில்லை. சீனுவாச பெருமாள் தான் மூலவர். பக்தர்களை
கட்டி ஈற்கும் அளவு ரொம்ப அழகு. தவிர இந்த பெருமாளுக்கு ஒரு கியாதி உண்டு. தீராத வியாதிகளையும்,
ப்ரச்னைகளையும் பக்தியுடன் வேண்டிகொண்டால் இந்த வரப்ரசாதியால் நல்ல பலன் கிடைக்கும்
என்று ஒரு நம்பிக்கை. ஆகையால் பக்தர்களின் கூட்டம் எப்போதுமிருக்கும்.
ஆதிக்கோ
பெருமாளை விட மணியிடம் தான் ஒரு சுவாதீனம். தன் கஷ்டங்களை இரவில் அருகில் யாருமில்லாத
போது மணியிடம் முறை இடுவான். சில சமயம் பேசவும், கோபித்து கொள்ளவும் செய்வான். மணியிடமிருந்து
ஒரு பதிலும் வராது. இருப்பினும் ஆதியின் மனம் லேசாகிவிடும்.
“குழந்தைங்க
பள்ளிகூடத்தில இந்த வார கடைசிக்குள்ள பீஸ் கட்டாவிட்டால், ஸ்கூலை விட்டு அனுப்பிவிடுவாங்களாம்.
மணி அடிச்சுகிட்டிருந்தா பைசா வராது. ஏதாவது வழி பண்ணுங்க” என்றாள் ஆதியின் மனைவி குமுதா.
“யாரை
கேட்பது என்று தெரியல. ஆனால் ஒன்னு நிச்சயமாக தெரியும். அது யாரை கேட்டாலும் கொடுக்கமாட்டாங்கன்னு.
நாளையிலிருந்து மூன்று நாள்கள் உற்சவம். அது முடிந்தவுடன் ஏதாவது வழி பண்ணுகிறேன்.
கவலைப்படாதே. ஒன்னும் சரியாக வரலை என்றால் என்னோட மணி இருக்கவே இருக்காரே. அவர் பெருமாள்
கிட்ட சொல்லி வழி பண்ணுவார். நாற்பது வருஷமா கைங்கர்யம் பண்ணிகொண்டு இருக்கேனே, என்னை
கை விடமாட்டார்,” என்று திட நம்பிக்கையுடன் கூறினான் குமுதா ஒரு எகத்தாளத்துடன் கழுத்தை
திருப்பி தோளில் இடித்துகொண்டே உள்ளே சென்றாள்.
அன்றிரவு
ஆதி கோவில் வாசலில் மணியின் கீழே தூக்கம் வராமல் படுத்து இருக்கையில் துக்கம் பீறிட
அந்த பெரிய மணியை பார்த்து முறையிடலானான்
“நாற்பது
வருஷமா இந்த கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்கேனே, உன்னை விட்டால் எனக்கு வேறு யார் கதி?
ஒரு நாள் விடுமுறை எடுத்து இருக்கேனா? ஜுரமோ வலியோ கை வலிக்க எல்லா நாளும் அடிக்கறேனா
இல்லையா? என்னோட கஷ்டம் உனக்கு புரியலையா? நீ தான் என்னோட தைய்வம். அந்த பெருமாள் கிட்ட
கூட நான் சொல்றது இல்லை. குழந்தைங்க பீஸ் கட்டியாகணும். நீதான் பெருமாள் கிட்ட சொல்லி
ஏற்பாடு பண்ணணும்,” என புலம்பி கொண்டே தூங்கி விட்டான்.
மறு நாள்
உற்சவம். மாவிலை தோரணமும் மேளமும்அதுவுமாக கோவில் வாசல் களை கட்டி இருந்தது. ஜனங்களும்
சாரி சாரியாக வர ஆரம்பித்து விட்டனர். தங்க வண்ணத்தில் மின்னி கொண்டிருந்த த்விஜ ஸ்தம்பத்தின்
கீழேவிழுந்து சேவித்து கோபுரத்தின் உச்சியை பார்த்து கொண்டும், ஆதி கோவில் மணியை அடிக்கற
லாகவத்தையும் குழந்தைகள் சூழ ரசித்து கொண்டும் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
அந்த
சமயம் ஆதியின் அருகில் ஒரு குட்டையான பெருத்த இடையுடன் சிறுத்த சூம்பின தலையுடன் வயது
நிர்ணயிக்க முடியாத ஒரு விசித்திரமான ஆள் மற்றவர்களுடன் ஆதி மணி அடிப்பதை ரசித்து கொண்டிருந்தான்.
எல்லோரும் அவனையும் ஆதியையும் சேர்த்து பார்க்கலாயினர். ஆதியோ பக்கத்தில் நடப்பது எதுவும்
அறியாமல் மணி அடிப்பதிலேயே திளைத்து இருந்தான். திடீரென்று அந்த ஆள் கோவில் மணிக்கு
கீழே உள்ள ஒரு பென்ச்சின் மேல் ஒரு பித்தளை செம்பை வைத்து அதில் ஒரு பத்து ரூபாய் நாணயத்தை
கணீரென்று சப்தத்தோடு போட்டான். அதை பக்கத்தில் உள்ளவர்களும், த்விஜஸ்தம்பத்தினருகில்
கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துபவர்களும் கேட்டு தாங்களும் அந்த பாத்திரத்தில்
காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் போடத்தொடங்கினர். மாலையில் கணிசமான அளவு சேர்ந்து
இருந்தது.
மாலையில்
இவ்வளவு பணத்தை பார்த்ததும் இதை யாரை சேர்ந்தது என்கிற குழப்பத்தில் தலைமை அர்ச்சகரிடம்
சென்றான். அவருக்கு ஆதியின் தொழிலில் உள்ள நேர்மையும், பண பற்றாகுறையும் நன்கு தெரியும்.
“ஆதி,
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். தட்டில்
போடுவதை அர்ச்சகர்களாகிய நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதே மாதிரி உன்னருகில் உள்ள
பாத்திரத்தில் போடும் பணம் உன்னை சேர்ந்தது. கவலைப்படாமல் நீயே எடுத்து கொள்,” என்றார்
அடுத்த
இரண்டு நாட்களும் அந்த விசித்திரமான ஆள் வந்து அதே போல் காசை போட்டு மற்றவர்களையும்
ஆதி பால் ஈர்த்தான். குமுதாவிற்கு ஒரே சந்தோஷம். ஆதிக்கும் கஷ்டம் ஓரளவு தீர்ந்ததே
என்பதில் திருப்தி.
உற்சவத்தின்
கடைசி நாள். ஆதி அந்த ஆளை பார்த்தவுடன் அருகில் சென்று கைகளை கூப்பி வணங்கி,” அய்யா,
நான் வருஷ கணக்காக இங்கு வேலை செய்கிறேன். இதுவரை உங்களை பார்த்தது இல்லை. எதற்காக
என்னிடம் இந்த கருணையை காண்பித்து உங்களுடைய பாத்திரத்தை வைத்து பணத்தையும் போட்டு
மற்றவர்களையும் போட வைத்தீர்கள்?” என தாழ்மையுடன் வினவினான்
“உங்கள்
நம்பிக்கை வீண் போகக்கூடாதென்று தான்,” என சொல்லி சிரித்தார்.
“என்
நம்பிக்கையா? யார் பேரில் என்று எப்படி உங்களுக்கு தெரியும். நீங்க எந்த ஊர்? இந்த
மூன்று நாட்களாகத்தான் உங்களை பார்த்தது,” என்றான் ஆதி
கணீரென்று
சிரித்தபடியே” எனக்கு தெரியும். நானும் உன்னைப்போலவே இதே ஊரில் வருஷ கணக்காக வாசம்.
உன்னை எனக்கு நன்றாக தெரியும்,” என சொல்லி வேகமாக கூட்டத்தில் மறைந்து விட்டார்.
அன்றிரவு
ஆதி குமுதாவிடம்,” எனக்கு இந்த ஆள் யாரென்று நன்றாக தெரிந்து போச்சு. மாறு வேஷத்தில்
என் கஷ்டத்தை தீர்க்க வந்த என் அப்பன், கண்கண்ட தைய்வம் தெய்வீக மணிதான்,” என பரவசத்துடன்
சொன்னான். குமுதாவின் நக்கலான சிரிப்பில் அவள் அதை ஏற்று கொண்டாளா இல்லையா என்று தெரியவில்லை.
.