Wednesday, April 19, 2017

பார்வையின் நிறங்கள்

பார்த்தவுடனேயே கண்களை கட்டி இழுக்கும் அந்த அழகான அபார்ட்மென்ட்ஸ் திருவான்மியூரை  தாண்டி சமுத்ர கரைக்கு வெகு அருகில்  இருக்கிறது.கிட்டதட்ட  100 அபார்ட்மென்ட்ஸ் இருக்கும்.சுற்றிலும் நடை பாதையும் நடுவில் புல்வெளியும்அதற்கு அழகூட்டின.ஒரு மூலையில் சின்ன பிள்ளையார் கோவில் வேறு..கேட் வாசலில் நேபாளி தர்வான்கள்..மாலையில் குளிர்ந்த காற்றும் இரவின் நிசப்தத்தில் அலையோசையும்  அந்த இடத்தின் சிறப்பு அம்சங்கள்.
சாதரணமாக இந்த மாதிரி அபார்ட்மென்ட்ஸ்களில்,ஒற்றுமை குறைவாகவும்.வம்பும் சக்சரவும் அதிகம் இருக்கும்.எல்லாவற்றிலும் போட்டியும் விதண்டா வாதமும் தான் மேலோங்கி இருக்கும். ஆனால் சமுத்ராவிலோ பெண்மணிகளுக்குள்  ஒரே பரஸ்பர நட்பும் அன்யோன்னியமும் தான்.வேலைக்கு போகும் சிலரை தவிர மற்றவர்கள் அனேகமாக எல்லா  வார நாட்களிலும்  பிற்பகல் கூடி பேசுவார்கள்.குழந்தைகள், ஸ்கூல்,அளவுக்குமீறிய ஹோம்வொர்க் ப்ரச்னை,டீச்சர்களின் பாரபக்ஷத்துடன் கூடிய கெடுபிடி, தவிர அஸ்ஸோஷியனின் மெத்தனம் என்று பலதரபட்ட விஷயங்கள் அலசப்படும்.பிள்ளையார் சதுர்த்தி விமரிசையாக  கொண்டாடப்படும்.ஓரொரு தடவை கிட்டி பார்ட்டியும் உண்டு.ப்ரவீணா ஒரு பஞ்சாபி.மிக நன்றாக பாடுவாள்.குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு எடுக்கிறாள்..சுஜாதா ராவ் கேக் வகுப்பு எடுப்பாள்.அமிர்தம் மாமி ரங்கோலி போட சொல்லித்தருவாள்.வனிதா ஜேம்ஸ் ஆங்கிலம் வகுப்பு எடுப்பாள்.இப்படி பல தர பட்ட வகையில் நெருக்கமாக இருந்தார்கள்.
சகுந்தலா மாமிதான் இவர்களுக்கு தலைவி போல. உயரமா தாட்டியான உடல் வாகுடன்.வெளுப்பாக  நெற்றியில் பெரிய குங்கும பொட்டுடன் கம்பீரமாக இருப்பாள் உரக்க அதட்டுவது போல இருக்கும் அவள் குரல்.நிறைய விஷயங்கள் தெரியும்.மாமியின் கணவர் புஜங்க ராவ்  வக்கீல்.கக்சலாக மாமியைவிட உயரம் குறைவு.மெள்ள பேசுவார்.சட்ட நுணுக்கங்களை கரைத்து குடித்தவர் அவரை பேக்சில் ஜெயிக்க முடியாது. அவர்தான் ஆரம்பத்திலிருந்தே ப்ரெசிடென்ட்.அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.மாமியின் பேக்சுக்கு மறு பேக்சு கிடையாது.எல்லோருக்கும் புஜங்க ராவையும் சேர்த்து அவளிடம் ஒரு பயம் கலந்த மரியாதை.
சமீப காலம் வரை முக்கியமாக மல்லிகா A ப்ளாக்கில் முதல் மாடியில்  குடி வரும்வரை பெரிய ப்ரச்னை இல்லாமல் நாட்கள்  ஓடிகொணடிருந்தது.இத்தனைக்கும் மல்லிகா தன் வீட்டிற்கு வருவதும் போவதும் யாருக்கும் அதிகமாக தெரியாது. முப்பத்தைந்து வயது மேல் இராது.உயரமாக பார்க்க லக்ஷணமாகவும் வசீகரமாகவும் இருப்பாள்.கண்களின் கோடியில் ஒரு இழை புன்முறுவல் அவளை எல்லோரையும் திரும்பி பார்க்க தூண்டும். மாலை வேளையில் அபார்ட்மென்ட்டை சுற்றி நடக்கும் போது ஆண்களிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டே இருப்பாள்.இவர்களும் அவள் பின்னாடியே அசட்டு சிரிப்புடன் குழைந்து கொண்டு போவார்கள். ஆனால் பெண்களிடம் ஒதுங்கியே இருப்பாள் உதாசீனகூட படுத்துகிறாளோ என ஒரு எண்ணம். மற்ற பெண்மணிகளுக்கு காரணம் தெரியாமலேயே அவள் மேல் சற்று வெறுப்பும் சந்தேகமும் இருந்தன..அவள் எங்கு வேலை செய்கிறாள்,கணவர் யார்,குழந்தைகள் உண்டா இல்லையா என்று எல்லாம் ஒரு மூடுமந்திரமாகவே இருந்தது.
இந்த சூழ்நிலையில் தர்வான் ஒருவன் ப்ரவீணாவிடம் ஹிந்தியில் யாரோ முன்பின் தெரியாத ஆண்கள் இரவில் மல்லிகாவின் வீட்டிற்கு தினம் வருவதும் அங்கேயே இரவு தங்குவதும் பற்றி சொல்லி இருக்கிறான்.அது காட்டு தீயாக பரவி பெண்களுக்கு ஒரு அக்சத்தை  உண்டாக்கியது.
“நீங்கதான் உங்க கணவரிடம் சொல்லி இதற்கு ஏதாவது வழி பண்ணனும் ,”என எல்லா பெண்களும்  சகுந்தலா மாமியிடம் கேட்டு கொண்டார்கள்.
 “இன்று இரவே ஏன் கணவரிடம் பேசி இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கிறேன்” என்று  அவர்களின் பயத்தை நீக்கினாள்.
அன்று இரவு இதை  ப்ரஸ்த்தாபித்த பொழுது புஜங்க ராவ்  மல்லிகாவை வெளியேற்ற அனுமதிக்கவில்லை.அவளால் யாருக்கும் ஒரு தொந்திரவு இலலாத போது ஒரு தர்வானின் வம்பு பேச்சை கேட்டு கொண்டு அவளை அப்புறபடுத்துவது நியாயம் இல்லை என திட்டவட்டமாய் கூறி விட்டார். மல்லிகாவின் கூட அவள் கணவன் இருக்கானா இல்லையா பற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்றும் .இங்கு அவளால் யாராவது பாதிக்க பட்டால் மட்டும் சொல்லட்டும் என்றார். மேலும் குறும்புத்தனமாக பெண்களுக்கு மற்றவர் யாராவது சற்று அழகாக இருந்து விட்டால் பொறுப்பதில்லையே என்று சொல்லி சிரித்தார்.
மறு நாள் சகுந்தலா தன் கணவர் சொன்னதை அப்படியே கூறி தானும் அவருடன் ஒத்து போவதாகவும் சொன்னாள்.”வீண் சந்தேகத்தின் பேரில் வெளியேற்றம் செய்வது சரி இல்லை.நாம்தான் நம் கணவர்களின் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.நீங்க தான் உங்க கணவரின் கண்கள் அலையாத மாதிரி பார்த்து கொள்ளனும்.என் கணவரின் பேரில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு.அவர் ராமரை போல ஒரு ஏக பத்னிவ்ரதன்”என்று பெருமையாக சொன்னாள்.
மாமியின் பதில் த்ருப்தி அளிக்காததால், அவர்கள் தங்கள் கணவர்களிடம் முறையீட்டதில் ஒரு பயனுமில்லை. அபார்ட்மென்ட்ஸ்ல ஒருத்தி அழகாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே என்று கேலி பண்ணார்கள்.இது மேலும் சலிப்பூட்டியது.மல்லிகாவும் ஒரு இடைஞ்சலுமில்லாமல் தான் உண்டு தன்  வேலை உண்டு என இருந்தாள்.
ஒரு மாதம் பிறகு சகுந்தலா மாமி கோயமுத்தூருக்கு ஒரு கல்யாணத்திற்கு ஒரு வாரம் போயிருந்தாள்.கணவர் புஜங்க ராவ் வேலை நிமித்தமாக போகவில்லை.மாமி இல்லாமல் பகல் கூட்டத்தில் உற்சாகமில்லை.நாளை காலை வரணும் என்று ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் அன்றிரவே ஒரு மணி அளவில் அபார்ட்மென்ட்ஸ்க்குள் ஒரு ஆம்புலன்ஸ் உரக்க சைரன் சப்தத்துடன் நுழைந்தது. A ப்ளாக்கின் முன்னால் நின்றது.யாருக்கு என்ன உடம்போ என்கிற கவலையில் பல ஜன்னல்கல் வழியே பல கண்கள் இந்த ப்ளாக்கையே  கண்காணித்து கொண்டு இருந்தன.இரண்டு ஆட்கள். ஸ்ட்ரச்சரை எடுத்துகொண்டு முதல் மாடிக்கு விரைந்தனர்.மல்லிகாவின் வீட்டு கதவு சற்று லேசாக திறந்து இருந்தது.அவள் வாயிலில் இறுக்கமான முகத்துடனும்,கவலையுடனும் காணப்படடாள்.
கீழே கூடியிருந்த சிலரிடம் அநத ஆம்புலன்ஸ் ட்ரைவர் மாடியில் யாருக்கோ ஹார்ட் அட்டாக் என்றான்.சில வினாடிகளில் ஸ்ட்ரச்சரைபிடித்தவாறே இரண்டு ஆட்கள் கீழே இறங்கி வந்தனர்.யாராக இருக்கக்கூடும் என்கிற ஆவலினால் உந்தபட்ட சிலர் கழுத்தை தூக்கி பார்த்தனர்.ஜன்னல்கள் வழியே கூட சிலர் நோக்கினர்.கழுத்து வரை வெள்ளை போர்வையால் மூடப்பட்டுள்ள மதிப்புக்குரிய புஜங்க ராவை பார்த்து திடுக்கிட்டனர்.
ஏன், இவர், எதற்கு, இங்கே, இந்த அர்த்த ஜாமத்தில் என பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இரவை தூக்கமிலலாமல் கழித்தனர்.மாமியை நினைத்தால் பாவமாக இருந்தது.

6 comments:

 1. அப்படியே சில குடியிருப்பு பகுதியின் வாழ்க்கை நிலையையும் கண்ணோட்டங்களையும் முன்னிறுத்தி , நன்றாக கதை வந்துள்ளது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. மாமி இல்லாமல்பொ ழுது போகலை போலருக்கு.

  ReplyDelete
 3. Since he is President of the Apartment Association, Bujanga Rao may have gone there to take care of some apartment business.

  ReplyDelete
 4. I thought you had written about our apartment complex! Your narration is always superb!

  ReplyDelete
 5. அழகான கதை. கதையினுடைய நடை நன்றாக உள்ளது. முடிவு குழப்பமாக உள்ளது.

  ReplyDelete
 6. But for your vivid and spicy description of a gated community life in apartments, the exposure of the colony's President's affair might have seemed like a tame affair :-)

  ReplyDelete