"அப்பா ,நாளைக்கு மாடிப்படி ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தரேன்னு வேண்டிகொண்டிருக்கிறேன்.நீங்க கோவிலுக்கு என்னோட வரணும் " என்றாள் பங்கஜம்" என்ன விசேஷம் ,பங்கஜா "என்றார்
"பெரிசா ஒண்ணுமில்லே.நீங்க தினம் ராத்ரியிலே தூங்காம கஷ்டப்படறீங்க.டாக்டர்களாலே ஒன்னும் கண்டு பிடிக்க முடியலையே..நீங்களும் பல மாதங்களா அவஸ்தை படறீங்களே அப்பா அதுதான் பிரார்த்தனை பண்ணிண்டேன்"
"அசடேஎதுக்குதான்வேண்டிக்கறது?.அல்ப விஷயத்துக்கெல்லாம் ஆஞ்சநேயரை தொந்திரவு பண்ணுகிறாயே.சரி உன் இஷ்டம்" என்றார் தண்டபாணி
மாடிப்படி ஆஞ்சநேயர் கோவில் அப்படி ஒன்னும் பெரிய கோவில் இல்லை.கடைத்தெருவில் இரண்டு கட்டிடங்கள் நடுவில் ஒரு குறுகலான மாடிப்படி. 18 படிகள்தான் மேல சின்ன கோவில்.வேற மொட்டை மாடி கிடையாது. நின்ற திருக்கோலம் கையில் சஞ்சீவி மலையுடன்.விக்ரஹத்தை பார்த்தால் அவருக்கு உள்ள அவசரத்தை கண்டுக்கொள்ளலாம்.வரப்ரசாதினு பிரசித்தம்.ஒரு வயதான மாத்வ அர்ச்சகர்.ஸ்ரத்தையாக பூஜை பண்ணுவார்.
சாயந்திர வேளைகளைத்தவிர கூட்டம் அதிகம் இராது. தனியா ஏற இறங்க வசதியாக.மாடிப்படி நடுவில் ஒரு கயிறு கட்டி இருக்கும்.ஒருவருக்கு பின் ஒருவர் தான் செல்லமுடியும்..நிறைய பக்தர்கள் வெண்ணை, வடை மாலை சாத்துவார்கள்.கடைகளுக்கு வருவோர் போவோர் அனைவரும் ஒரு நடை கோவிலுக்கு செல்வது வழக்கம்.
மறு நாள் பங்கஜம் பாலை தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் அரை மாலைக்கு வேண்டிய வடைகளை தயார் செய்தாள்.மாலை 5 மணி அளவில்
."நந்து,நீயும் கூட வா. தாத்தாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு வா..மாடிப்படி சிலவேளை சறுக்கும் என்றாள் பங்கஜம்.
"அம்மா,என்னால் முடியாது.எனக்கு வேற வேலை இருக்கு'என்று நிர்தாட்சிண்யமாக மறுத்து விட்டான்.,
"கவலை படாதே பங்கஜம் .நான் ஜாக்கிரதையாக இருக்கேன்"என்று சமாதானப்படுத்தினார்
கோவில் வீட்டுக்கு அருகாமையில் தான் உள்ளது .பொடி நடையாக
தன அப்பாவை அழைத்து கொண்டு வந்தாள்..
"அப்பா,இந்த வடை மாலையை கையில் வைத்து கொள்ளுங்கள்.நான் பழம்,புஷ்பம்,கிடைத்தால் வெத்திலை மாலையும் வாங்கிண்டு வந்து விடுகிறேன்:என்றாள்.
"கவலை படாமல் போயிட்டு வா.நான் மெள்ள சந்நித்திக்கு போய் அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கேன்"
அப்பா,ரொம்ப ஜாக்கிரதை.படி வழுக்கும். கயிரை பிடித்து கொண்டு ஏறுங்கள்" என்றாள் மிக்க கவலையுடன்.
பாதி படி ஏறுகையில் . அர்ச்சகர் "சுவாமி,சௌக்யமா.தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுவதாக உங்கள் பெண் சொன்னாள்.மேல போய் உட்காருங்கோ.ஒரு நொடியில் நான் வந்து விடுகிறேன்"என்றார்..
கோவிலில் ஒரே சப்தம்.பையன்கள் பேச்சும் கும்மாளமும்.மறு நாள் தேர்வு அறிக்கை வரும்..பயத்துடன் வேண்டி கொள்ள சுமார் 16 பையன்கள் கூடி அர்ச்ச்கருக்காக காத்திருந்தனர்
மூச்சிரைக்க கிழவர் ஏறுகையில் திடீரென்று ஒரு நில அதிர்வு,சில நொடிகள்தான் இருந்தும் படியும் கட்டிடங்களும் ஆடியது.அடுத்தக்ஷணம் மேல கோவிலில் இருந்த பையன்கள் தாறுமாறாக அந்த குறுகலான படிகளை விரைவில் தாண்ட முயற்ச்சிகையில் கிழவரை கீழே தள்ளி அவரின் உடல் மேலேயே மிதித்து ஓடிவிட்டனர். .
"அப்பா,அப்பா" என்று கதறியவாறு ஓடி வந்தாள்.கூட பூக்காரி,தேங்காய் கடைக்காரர் என்று பல பேர் விரைந்து வந்தனர்.
கிழவர் கால் மேலே தலை கீழே என்று அலங்கோலமாய் கிடந்தார். யாரோ . ஒருவர் அவரை தூக்க எத்தனிக்கையில் அவரின் தலை சாய்ந்து விட்டது..பங்கஜத்தின் அப்பா என்கிற அலறல் கடைத்தெரு முழுக்க கேட்டது.
அப்பொழுது ஒருவர்'"இந்த ஆச்சரியத்தை பார்த்தீங்களா.?"என்று அந்த வடை மாலை யாரோ மாடி படி சுவரில் மாட்டியிருந்த ஹனுமார் படத்துக்கு சாற்றினால் போல் அழகாக அமைந்து இருந்ததை காண்பித்தார்.
அர்ச்சகர்' "பங்கஜம் அழாதே.ஆஞ்சநேயரின் சந்நிதிலேயே வடை மாலை பிரார்த்தனை நிறைவேறியபின் அவர் உயிர் பிரிந்து இருக்கிறது.அவரின் தூக்கமின்மை இந்த மீளா தூக்கத்தினால் மறைந்து விட்டது..பெரியவருக்கு எது நல்லதுன்னு ஆஞ்சநேய ஸ்வாமிக்குதான் தெரியும்.கவலை படாதே.மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை பாரு" என்றார்
மற்றவர்களை பார்த்து"நீங்கள் அந்த அம்மாளுக்கு உதவி செய்யுங்கள்.நானும் ஸ்நானத்திற்கு பிறகு சில விசேஷ பூஜை பண்ணனும்"என்றார்