நடராஜனக்கு 57 வயது தான் ஆகப்போகிறது. ஆனால் தலை முழுக்க பளபளவென்று வழுக்கை.பக்கத்தில் சந்திர பிம்பம் போல கொஞ்சம் கேசம் உண்டு.ஞாயிறு காலை சீக்கிரம் சலூனுக்கு போய்விட்டால் ரொம்ப காத்திருக்க வேண்டாம்.ஆறு மணிக்கே காபி குடித்துவிட்டு கிளம்பினார்.
அந்த சமயம் வாசலில் கீரைக்காரி'முளை கீரை,அரை கீரை,சிறு கீரை,பொன்னாங்காணி கீரை" என்று கூவிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். "சாமி உன் கையால போணி பண்ணு.எல்லாம் வித்து போய்விடும்.அம்மா தினம் வாங்கும். ஆனால் உன் கை ராசி " என்றாள்.
சரி,முளை கீரை ரெண்டு கட்டு கொடு.என்ன விலை?
' "கட்டு பத்து ரூபாய்.20 ரூபாய் கொடு"
"இது என்ன அநியாயமா இருக்கே.இரண்டும் சேர்த்து 15 ரூபாய் தான்.வாடிக்கையாக கொடுக்கிற வீட்டுக்கே இப்படி தாறு மாறாக விலை சொல்லறியே"
"நீ என்ன புச்சா வாங்கற மாதிரி பேசறயே.ஆறு மாதமா இதே விலைதான்.ஊரிலே எல்லாம் கண்ணு மண்ணு தெரியாம ஏறிகிடக்கு, நீ ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கணக்கு பார்க்கறியே.
நேரமாவுது சீக்கிரம் 20 .ரூபாய் கொடு"
"சொன்னா சொன்னது தான்.இஷ்டமிருந்தால் கொடு இல்லாட்டா நடையை கட்டு"
"ஏழை வயத்தில அடிக்கறயே.உன் கையால போணி பண்ணனும் நினைச்சேன்.சரி,18 ரூபாய் கொடு" என்றாள்.
கீரையை எடுத்துகொண்டு ஒரு பெருமிதத்துடன் உள்ளே வந்தார்.
"நான் வாயை அவள் முன்னால் திறக்க வேண்டாமென்று இருந்தேன்.ஏழைகள் கிட்ட என்ன பேரம்?ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்ல நம்ம சொத்தா தேய்ந்து விடும்.நீங்க செய்கிறது சரியாக படவில்லை." என்றாள் அவரின் மனைவி.
"உனக்கு என்ன தெரியும்?நீயா சம்பாதிக்கறே?.சரி நான் சலூன் போகிறேன் “
சலூனில் நான்கு நபர்கள் காத்துகொண்டிருன்தனர்.அரை மணிக்கு பிறகு இவர் முறை வந்தது.ஐந்தே நிமிடத்தில் முடி திருத்தல் முடிந்தது.இருந்தால் தானே திருத்த..அவர் எதிரில் விலை பட்டியலில் முடி திருத்த ரூபாய் 80 என எழுதி இருந்தது.,முடி திருத்துபவர் பிரஷால் பல தடவை தடவினார்.இவர் 100 ரூபாய் நோட்டை நீட்ட, அவர் ரெண்டு பத்து ரூபாயை நீட்டினார்..இவர் கையால் நீயே வைத்து கொள் என்கிற ஜாடையுடன் வெளியே நடந்தார்.முடி திருத்துபவர் ஒரு புன்சிரிப்புடன் சின்ன சல்யூட் அடித்தார்
கீரைக்காரியுடன் பேரம் பேசிய இவரின் நடையில் என்னே ஒரு உற்சாகம். வேடிக்கைதான் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்
Interesting...
ReplyDeleteஇப்படியும் சிலர்....................
ReplyDeleteவேடிக்கைதான்
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது என்பார்கள். எப்போதுமே நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளிடத்தும்தான் பேரம் பேசுவோம். கடைக்காரர்களிடம் அதுவும் கொஞ்சம் பெரிய அளவில் இருந்துவிட்டால் பேசாமல், கேட்டதைக் கொடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு மனம் உறுத்தும் ஒரு அருமையான கதை. பாராட்டுகள்.
ReplyDelete