Friday, July 13, 2012

செல்லப்பாவின் பஸ் பயணம்

பஸ் பழசா இருந்தாலும் சீட் சௌகரியமாகவே இருந்தது..இரவு 11 .மணிக்கு கிளம்பி விடியற்காலை சுவாமி மலை அருகில் உள்ள கிராமத்தில் போய் சேரும். பக்கத்து இருக்கையில் உள்ளவர் ஒரு சிரிப்புடன் 'கும்மோணம் வரைக்குமா?'என்றார்.

"இல்லை,சுவாமி மலை பக்கத்தில"என்றேன்

"அடடே,நானும் அது வரைக்கும் தான்.ஜாகை அங்கயே தானா?"

"இல்லை கிராமத்தை விட்டு கிளம்பி 30 வருஷங்கள் மேல ஆச்சு..ஒரு நண்பரை பார்க்க போகிறேன்.எங்கள் இருவருக்கும் கடித போக்குவரத்தும் இல்லை "

"பரவா இல்லையே.. நெடு நாளைய நண்பரை மறக்காமல் காண செல்கிறீர்களே. ரொம்ப நெருக்கமான நண்பரோ ?"

"அதெல்லாம் இல்லை..பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாச்சு.சொல்லப்போனால் அவன் சின்ன வயசிலேயே சுயங்காரி. ..தீசல்னு கூட சொல்லலாம்"

"அப்படி இருந்தும் நீங்க பெருந்தன்மையாக நட்பை விட்டு கொடுக்காம இருக்கீங்களே.ரொம்ப மெச்சத்தக்க விஷயம்".

"அப்படி எல்லாம் இல்லை. ஒரு காரியமாகத்தான் செல்கிறேன்.அவரின் முகம் கூட மனதில் நிழலாகத்தான் இருக்கு.இப்போ .ரொம்ப மாறி இருக்கலாம்".

“வெளி ஊரிலிருந்து பார்க்க போவதாக இருந்தால் காரியம் முக்யமானதாகத்தான் இருக்கணும்"என்று விஷயத்தை மேலும் அறிய கொக்கி போட்டார்."

"சரியாக சொன்னீர்களே.நண்பருக்கு ஒரு மகன் அமெரிக்காவில வேலை பார்க்கிறான்..என்னோட பெண்ணும் அவனுடன்தான் வேலை செய்கிறாள். இருவருக்கும் பிடித்து விட்டது.அதுதான் நண்பரை பார்த்து பழைய நட்பை புதுப்பித்து காரியத்தை முடிக்கலாம் என்று எண்ணம்."என்றேன்."

“நல்லது.ஆமாம், உங்கள் பெயர் என்ன, எந்த கிராமம்,,,யார் நண்பர்?”

"என் பெயர் செல்லப்பா,ஊர் பிள்ளைபாளையம்.அவர் பெயர் ரங்கஸ்வாமி"

"அவருடைய தகப்பனார் பெயர் என்னவோ?

"பட்டாமணி கிருஷ்ணஸ்வாமி என்று அழைப்பார்கள்,.அவரை உங்களுக்கு பரிச்சயமா?"

“நன்னா தெரியும் செல்லப்பா, நானேதான் அந்த சுயங்காரி ரங்கஸ்வாமி"என்று பலமாக குலுங்க குலுங்க சிரித்தார்
எனக்கு முகத்தில் ஈயாடவில்லை

4 comments: