Tuesday, July 10, 2012

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்-5

காட்பாடி ஜங்க்ஷன்.முதல் மணி அடித்தாயிற்று. பக்கத்தில் உள்ள ஒரு 75 வயதான மூதாட்டி "இது பெங்களூரு தானே போறது?'என கேட்டார். பக்கத்தில் உள்ளவருக்கு தூக்கிவாரி போட்டது ..

"பாட்டி,இது மங்களூர் போற வண்டி. சீக்கிரம் சொல்லுங்க?. எது உங்கபெட்டி?இங்க உடனே இறங்கணும்..எழுந்துக்கங்க” என்று அந்த மூதாட்டியை பெட்டியுடன் இறக்கி விட்டார்..உடனேயே ரயிலும் கிளம்பி விட்டது.

பாட்டி மலங்க மலங்க விழித்து பார்த்தாள் பேரன் தப்பிதமாக ஏற்றிவிட்டான்..தனியாக வெளி ஊருக்கு இதற்கு முன் பயணம் பண்ணினதில்லை. பிளாட்பாரம் காலியாகிவிட்டது என்ன பண்ணுவது,யாரை கேட்பது என்று ஒண்ணும் புரியவில்லை.அழுகை வந்து விட்டது...

நல்ல வேளையாக ஒரு போர்ட்டர் "பாட்டியம்மா,பெட்டியை தூக்கணுமா?யாராச்சும் வந்து இருக்காங்களா?" என ஆதரவுடன் வினவினார்.

"இல்லையப்பா.தப்பாகிவிட்டது.பெங்களூரு வண்டிக்கு பதில் பேரன் வேற வண்டில ஏத்தி விட்டான்.நான் பெங்களூரு போகணும்.அங்கே மாப்பிள்ளை காத்து கொண்டிருப்பார்.ஏதாவது வண்டி உடனே இருக்கா? தயவு பண்ணி என்னை அந்த வண்டியிலே ஏத்தி விடேன்.உனக்கு கோடி புண்ணியம் உண்டு"என கேட்டாள்.

"பாட்டியம்மா வேற வண்டி ஒண்ணும் பெங்களூருக்கு இப்போ இல்லை.ஸ்டேஷேன் மாஸ்டர் அய்யாவை இட்டாரேன்.இங்கயே குந்திகுனு இரு.நகை நட்டு போட்டுக்கினு இருக்கே.ஜாக்கிரதை. வேற தெரியாதவங்க பின்னாடி போயிடாதே. "

“இங்கயே இருக்கேன் சீக்கிரம் வாப்பா." என்றாள்

சற்று நேரத்திற்கு பின் ஸ்டேஷேன் மாஸ்டர் அவளருகில் வந்து "என்ன அம்மா, தப்பு வண்டியிலே வந்து இங்கு கஷ்டப்படறீங்களே?வயசும் ஆச்சு,தள்ளாமையும் வந்துடுத்து. பெங்களூருல பெண்ணோட போன் நம்பர் இருக்கா?மாப்பிளைதும் போறும் " என்றார்.

பாட்டி இடுப்பிலிருந்து ஒரு சின்ன பையிலிருந்து ஒரு காகிதம் கொடுத்தாள்..அதில் பெண்ணின் விலாசம் போன் நம்பர் இருந்தது. போர்ட்டரின் உதவியுடன் தன்னுடைய அறைக்கு பாட்டியை மெள்ள அழைத்து சென்றார்.

பாட்டியின் பெண்ணுடைய நம்பர் கிடைத்ததும் தகவலை கூறினார்.பின்னர் " நல்ல வேளை. .தைய்வாதீனமாக காலையில் புறப்படவிருந்த என்னோட பையனும் மருமகளும் சற்று நேரத்தில் பெங்களூருக்கு காரில் கிளம்புகிறார்கள்.அவர்கள் பனஷங்கரியில் இருப்பதால் பாட்டியை ஜயநகரில் உங்கள் வீட்டிலேயே விட்டுவிடுவார்கள்.கவலையே வேண்டாம். உங்களுக்கு சம்மதம் என்றால் அனுப்பிவிடுகிறேன்.என்னுடைய பெயர் மாணிக்கம் காட்பாடி ஸ்டேஷேன் மாஸ்டர்" என்றார்

பெண்ணிற்கு இப்படியும் நல்ல மனிதர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியம்."உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை.ஆண்டவன் தான் உங்கள் ரூபத்தில் வந்து உதவி பண்ணுகிறார்.அம்மா வெளியில் சாப்பிடமாட்டாள்.கொஞ்சம் வாழைப்பழம்,தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுங்கள்.அவளிடம் பணம் வாங்கி கொள்ளுங்கள்.முடிந்தால் ஒரு வார்த்தை அம்மோவோடு பேசலாமா?. என்று கேட்டு கொண்டாள்.. .

"அம்மா,நான் ஸ்டேஷேன் மாஸ்டரிடம் பேசியாச்சு..கவலைப்படாமல் அவரின் பிள்ளையோடு வா.நான் உனக்காக காத்து கொண்டு இருக்கேன்.அவரிடம் பழம் தண்ணிக்கு உண்டான காசை கொடுத்து விடு." என்றாள்

பாட்டி பையிலிருந்து 100 ரூபாயை "நீ க்ஷேமமாக இருக்கணும்." என்று கூறி போர்ட்டரிடம் கொடுத்தாள்..

மாணிக்கம் "நான் உங்கள் மகன் மாதிரி.காசெல்லாம் வேண்டாம்..பாத் ரூமுக்கு போங்க. இன்னும் பத்து நிமிஷங்களில் வந்து விடுவான் பையனும் மருமகளும்..போய் சேர மூன்று மணிதான் ஆகும்.நல்ல வேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது" என்றார்

5 comments:

  1. Good one @KP. From where you get your ideas for the plot I wonder.

    ReplyDelete
  2. தெய்வம் மனுஷ ரூபேண் !!

    ReplyDelete
  3. KP,

    I am from Katpadi living on Long Island, NY.

    Liked the story.

    With regards
    Narasimhan

    ReplyDelete
  4. KP,

    Nice story.

    Since i am from Katpadi could related to it.

    Narasimhan

    ReplyDelete