சின்ன
ஊர்தான் ஆனால் அங்குள்ள ராமர் கோவிலோ பிரசித்தம். முக்கியமாக அங்கு உள்ள ஆஞ்சனேயர்
ஒரு வரப் ப்ராஸாதி. கோவிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய குளம். கோவில்
வாசலுக்கு ஒட்டின மாதிரி இரு பக்கங்களிலும் வீடுகளுடன் பிரதான தெரு. காலையிலும் மாலையிலும்
கோவில் நிறைந்து இருக்கும். கதைக்கு வருவோம். இந்த சம்பவம் 60 வருஷங்களுக்கு முன் நடந்தது.
லக்ஷ்மி
காலையில் சுமார் எட்டு மணி அளவில் சமையல் அறையில் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருப்பாள்.
இருந்தாலும் ஹார்மோனியத்திலிருந்து தூரத்திலிருந்து வரும் மெல்லிய சங்கீதத்தை கேட்டவுடனேயே
வாசலுக்கு ஒரு டம்ளரில் அரிசியுடன் விரைந்தோடி வருவாள். அப்பொழுதுதான், அந்த பெரியவர்
அவள் வீட்டிற்கு வரும் வரை அவரின் சன்னமான இனிமையான குரலில் ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டே
பாடும் தியாகராஜ கீர்த்தனைகளை, அவளால் கொஞ்ச நேரமாவது கேட்க முடியும்.
அறுபது
வயதுக்குள் இருக்கலாம், ஒல்லியான உடல் வாகு, நல்ல உயரம், தீர்க்கமான நாசி, நெற்றியில்
கோபி சந்தனம், சாந்தமான முகம், கழுத்தில் துளசி மாலை, உஞ்சவிருத்தி பிராம்மணராக இருந்தாலும்
அவரிடம் மரியாதையை வரவழைக்கும் கம்பீரமான தோற்றம் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி, தலயை
சுற்றி மஞ்சள் துணியால் தலைப்பாகை, அதே ராம நாம எழுத்து பதிந்த துணி அவர் முதுகை மறைத்து
முழங்கால் வரை பின்னே தொங்கியது. ஒரு தோளிலும் கழுத்திலும் தொங்கிய ஹார்மோனியமும்,
மற்றொரு தோளில் பளபளவென்று ஒரு பித்தளை செம்பு தொங்கியது.
அவர்
தன்னையே மறந்தவராக கண்களை சற்று மூடியவாறு தியாகபிரம்மத்தின் கீர்த்தனைகளை பக்தி பரவசத்துடன்
பாடிக்கொண்டே நடப்பார். யார் வீட்டு வாசலிலும் சில க்ஷணங்ககளுக்கு மேல் நிற்கமாட்டார்.
அவர் வாசலில் வருவதற்கு முன்னரே சில பெண்மணிகள் அரிசியோடு காத்து கொண்டிருப்பார்கள்.
அரிசியை செம்பில் சேர்த்துவிட்டு சிலர், முக்கியமாக லக்ஷ்மி, காலில் வீழ்ந்து வணங்குவதும்
உண்டு. அவர்களை ஆசீர்வதித்து விட்டு கொஞ்சம் அரிசியை பெண்மணிகளின் பாத்திரத்தில் போடுவார்.
லக்ஷ்மியை அவரின் ராம பக்தியும், இசைத்திறமயும், பரந்த மனோதர்மமும் வசீகரித்தது. ஒரு நாள் பாடின
பாட்டுகளையே மறு நாள் பாடமாட்டார். ஹார்மோனியம் வாசிக்கும் திறமையால் பாட்டு மேன்மை
அடைகிறதோ அல்லது அவரின் குரல் வளமுடன் பக்தி உத்வேகமும் சேர்த்து அவரின் கானத்திற்கு
ஒரு தெய்வீக அனுபவத்தை கொடுக்கிறதோ எதுவென்று லக்ஷ்மிக்கு தெரியவில்லை. ஆனால் அந்த
பத்து நிமிஷ ஆத்மானுபாவத்திற்காக தினம் ஆவலுடன் காத்திருப்பாள். அவர் ஒரு நாள் வராவிட்டால்
என்னவோ எதோ என்று கவலையுடன் வாசலில் அடிக்கடி எட்டிப் பார்ப்பாள்.
லக்ஷ்மி
சிறு பெண்ணாக இருக்கும்போது அவளுக்கு வாய்பாட்டு ஏழெட்டு வருஷங்கள் சொல்லி கொடுத்திருகிறார்கள்.
கீர்த்தனைகள் முடித்து ஆலாபனை ஆரம்பிக்கும் வரை கற்று கொண்டிருக்கிறாள். அவள் அப்பா
அவளுக்கு ஒரு ஹார்மோனியம் வாங்கி கொடுத்து இருக்கிறார். கல்யாணத்திற்கு பிறகு பாடுவது
குறைந்து நாளாவட்டத்தில் நின்றே விட்டது. ஹார்மோனியத்தை பூஜா அறையில் வைத்து விட்டாள்.
அந்த
பெரியவருக்கு இவளின் சங்கீத ரசனையை பார்த்து இவளுக்கு தேர்ச்சி இருக்கிறது என அனுமானித்து
இவள் வீட்டு வாசலில் சில நாட்கள் சற்றே அதிக நேரம் நின்று பாட்டை வித விதமான நிரவல்களுடனும்
ஸ்வரங்களுடனும் பாடுவார். அதில் அவளுக்கு பரம சந்தோஷம்.
திடீரென்று
மூன்று நாட்கள் அந்த பெரியவர் உஞ்சவ்ருத்திக்கு வரவில்லை. லக்ஷ்மிக்கு என்னவோ ஏதோ என்று
கவலை. யாரிடமும் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை ஜுரமாக இருக்கலாமோ, அரிசி இல்லாமல்
சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார் என்று மனக்குடைச்சல். அவள் கணவர் வெங்கடேசனிடம் மெள்ள
அவள் கவலையை சொன்னாள்.
வெங்கடேசன்
சிரித்துக்கொண்டே” உனக்கு யாருக்காக எதற்காக கவலைப் படுவது என ஒரு விவஸ்தை இல்லை.
“உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம்னு” நீ கேள்வி பட்டு இருக்கையா? ஜாண் வயிற்றுகாக பல
வேஷம் போடறது. அந்த ஆள் வெள்ளை வேஷ்டி உடுத்திண்டு, நெத்தியில சந்தனத்தோட பாடிண்டு
வருகிற கௌரவ பிச்சைக்காரர். ராமர் பேரில் பெண்களுக்கு பிடித்த பாட்டுகளைப் பாடி சுலபமாக
அரிசியை வாங்கிண்டு போற ஆள்,” என்றான். லக்ஷ்மிக்கு கோபம் பொத்திகொண்டு வந்தாலும் மௌனமாக
வெளியே சென்றுவிட்டாள்.
எல்லாம்
நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிகொள்வதைத் தவிர அவளால் வேறு ஒன்றும் செய்ய
முடியவில்லை. அதிருஷ்டவசமோ அல்லது வேண்டுதலில் பலனோ அடுத்த நாளே அந்த பெரியவரின் பாட்டு
சப்தம் கேட்டது. வேகமாக வாசலில் வந்த அவளுக்கு ஒரு அதிர்ச்சி. முகவாட்டத்துடனும் பலஹீனமாகவும்
கழுத்திலிருந்து தொங்கும் ஹார்மோனியமும் இல்லாது அவர் காணப்பட்டார்.
“மாமா.
என்ன ஆச்சு? உடம்பு சுகமில்லையா? மூன்று நாட்களாக காணவில்லையே. ஹார்மோனியம் எங்கே?”
மிக்க கவலையுடன் கேட்டாள்.”
“ஓரு
சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது. ஒரு ஆட்டோக்காரன் என் மேல் மோதி கீழே தள்ளிவிட்டான்.
அதுகூட பரவாயில்லை. என் ஹார்மோனியத்தின் மேல் ஏற்றி அதை தவிடு பொடியாக்கிவிட்டான்.
கையில கால்களில் பலத்த அடி. இப்பொழுது வலி பரவாயில்லை. ஹார்மோனியம்இல்லாமல்கிரஹலக்ஷ்மிகளை ஈர்க்க உரக்க பாட வேண்டி இருக்கிறது. எல்லாம் ராமன் செயல். கொஞ்சம் கஷ்டப்படனும்னு
விதி. வேறு என்ன சொல்றது?” என்றார்.
“தயவு
செய்து இரண்டு நிமிஷங்கள் இருக்க முடியுமா? இதோ வந்து விட்டேன்,” என்றபடியே பூஜா அறைக்கு
விரைந்தாள். அங்கு கண்களை மூடியபடி அவளின் ஹார்மோனியத்தை அவருக்கு தானமாக கொடுக்க அனுமதி
கோரினாள். சேவித்த பிறகு சிகப்பு வெல்வெட் துணியால் மூடிய ஹார்மோனியத்தை கைகளில் கொணர்ந்து
அவரின் கைகளில் கொடுத்தாள். திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் ஹார்மோனியத்தையும் அவள்
முகத்தையும் மாறி மாறி பார்த்தவண்ணம் நாத்தழுக்க “என்ன இது?” என வினவினார்.
ஹார்மோனியத்தின்
மேல் மூடிய சிகப்பு துணியை எடுத்தவாறே “இது நான் சிறுமியாக இருந்த போது என் அப்பா வாங்கிக்கொடுத்தது.
கல்யாணத்திற்க்கு பிறகு பாடுவதை நிறுத்தி விட்டேன். இது பூஜா அறையில் இருந்தது. உங்களிடம்
இருந்தால் நன்றாக உபயோகப்படும். தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுகொள்ளுங்கள்,”
என்றாள்.
அவர்
தயக்கத்துடன் நிற்பதை கண்டு “சற்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்கள் பெண் மாதிரி. சற்று
சுயநலம் கூட உள்ளது. நீங்கள் வாசிக்க நான் கேக்கும் பாக்கியமும் இருக்கு. ஒரே ஒரு ஆசை,”
என நிறுத்தினாள்.
என்ன
என்கிற கேள்விக்குறியோடு அவளை நோக்கினார்.
“எனக்காக
‘நிதி சால சுகமா, ராமுடு சன்னிதி சேவ சுகமா’ கல்யாணி ராக பாட்டை விஸ்தாரமாக நிரவல்
ஸ்வர ப்ரஸ்தாரத்துடன் பாட இயலுமா?” என்றாள்.
“அதற்கென்ன,
தாராளமாக பாடுகிறேன்” என்று பூஜா அறையின் முன்னால் அமர்ந்து பாட ஆரம்பித்தார். பக்தி
பரவசத்துடன் ரொம்ப பிரசித்தமான அப்பாட்டிற்கு புது மெருகு ஊட்டி கற்பனையோடும் உற்சாகத்துடனும்
பாடி லக்ஷ்மியை தெய்வானுபவத்தில் திளைக்க விட்டார்.
மாலையில்
ஹார்மோனியத்தை அவருக்கு கொடுத்த விஷயத்தை லக்ஷ்மி சொன்ன போது, வெங்கடேசன் “நல்ல காரியம்
பண்ணினாய். அது இடத்தை அடைத்து கொண்டிருந்தது,”
என்றான். லக்ஷ்மி மறுபடியும் மௌனம் சாதித்தாள்