Tuesday, April 4, 2017

ரங்கநாயகியின் பெருந்தன்மை

என்னுடைய மேலதிகாரி ரங்கநாதனை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்காது. ஏழ்மையான குடும்பத்தில்  சீரங்கத்தில் பிறந்து ஸ்காலர்ஷிப்பில்  படித்து வாழ்க்கையில் முன்னேறியவர். கொல்கத்தாவில் அலிப்பூரில் ஏழெட்டு  அறைகள் கொண்ட  பெரிய மாளிகை. விசாலமான புல்வெளி பூந்தோட்டம் என பார்க்க ரம்மியமாகவே இருக்கும்.மனைவி இரண்டு   குழந்தைகளுடன் சிறிய குடும்பம் மனைவியின் வயதான அம்மா அவர்கள் கூடவே   இருந்தாள்..பழக இனிமையானவர்.ஆபீஸில் திறமையானவர் என்று நல்ல பெயர். ஓரிரு தடவை அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறேன்.
“பாஸ (boss) உங்களை கூப்பிடறார்” என அவருடைய உதவியாளர் எனக்கு போன் செய்தார். எதற்காக இருக்குமென குழப்பத்துடன் உள்ளெ சென்றேன்
"வாப்பா சேஷாத்திரி). நாளைக்கு நீ திருச்சி ஆபீஸ் வேலையா  போறயாமே .எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுவியா?"
"தாராளமா செய்யறேன்  சார்.. சொல்லுங்க சார்" என்றேன்
"அப்ப மாலைல சற்று என் வீட்டிற்கு வர இயலுமா?சீரங்கத்தில என் அம்மாவிடம் ஒரு கவர் கொடுத்து விடணும்.முடியுமா?"என்றார்
மாலையில் அவர் வீட்டு விசாலமான வரவேற்பறையில்  மனைவி மக்களுடன் டிவி பார்த்து கொண்டிருந்தார்.கொஞ்ச நேரம் பேசிவிட்டு என்னை வழி அனுப்ப வாசல் கேட்டு வரை   வந்தார்.ஷர்ட் ஜேபியிலிருந்து ஒரு கவரை கொடுத்து " இதை  என் அம்மாவிடம் கொடுத்து விடு.அம்மாவை பார்த்து ரொம்ப நாளாகிறது.வேலை பளுவால் வரமுடியவில்லை என்றும் கூடிய சீக்கிரம் வந்து பார்க்கிறேன்  என்று சொல்லு..அம்மாக்கு வயதாகிறது கவலையாக இருக்கேன் என்று கூட  சொல்லு: என்றார்.  
எனக்கு என்னவோ இவர் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல்   ரகசியமாக இந்த கவரை கொடுக்கிறாரோ  என தோணித்து. 
திருவெறும்பூரில் வந்த வேலை முடிந்தவுடன் சீரங்கம் காலையில் சென்றேன். .ரங்கநாயகி அம்மாளின் விலாசத்தை கண்டு பிடிப்பதில் சற்று நேரமாகியது.சின்ன நீளமான வீடு. வாசலில் எட்டு வயது இருக்கும் ஒரு பெண் பாவாடை சொக்காயில் தென்பட்டாள்.
சூடிக்கையான முகம். "மாமா யாரு வேணும் உங்களுக்கு?"என்றாள்
"ரங்கநாயகி அம்மாள் இங்க இருக்காங்களா?
"ஓ பாட்டியை சொல்லறேளா.   .வாங்க காண்பிக்கறேன்  "என கூறி என்னை அந்த குறுகலான நீளமான பாதையில் இட்டு சென்றாள். கோடியில் காற்றோட்டமில்லாத சின்ன அறை.கதவில் பூட்டு தொங்கியது.
"மாமா பாட்டி எங்க போயிருக்கான்னு எனக்கு தெரியும். பக்கத்திலதான் பட்டாமணியம் வீடு.அங்கதான் போவாள் "என்றாள்
நான் கேட்காமல் தானாகவே "உங்களுக்கு தெரியுமா.பாட்டி ரொம்ப ஏழை.பக்கத்து வீடுகளில் சமையல் பக்ஷணம் பண்ணுவா.ரொம்ப வயசாச்சு .காலை தேச்சி தேச்சி நடப்பாள் பார்க்க பாவமா இருக்கும்.பாட்டிக்கு யாரும் இல்லை "என சொல்லி அந்த குழந்தை உள்ளம் அங்கலாயித்தது. 
ஐந்து  வீடு தள்ளி   பாட்டி வெளியில் வரும் வரை என்னால் நம்பமுடியவில்லை.. இளைத்து தேய்ந்து குறுகி கூனி கண்களை சுறுக்கி என்னை நோக்கி வரும் இந்த வயோதிக அம்மாளா செல்வ செழிப்பில் உழலும் ரங்கநாதனின் தாயார்? மனம் ஒரு க்ஷணம் வலித்தது.கண்கள் ஓரம் ஈரம்  பணித்தது.
இப்படியும் ஒரு கொடிய அரக்கனா? என எண்ண ஓட்டம் .
"யாரு நீங்க? பார்த்ததாக ஞாபகம் இல்லையே"
"அம்மா ,நான் உங்க மகன் ரங்கநாதன் சாரிடம் வேலை பண்ணுகிறேன்நீங்க தானே அவங்க தாயார்?"என கேட்டேன்
"ரங்கன் என் பிள்ளைதான்.நன்னா இருக்கானா?"
"நன்னா இருக்கார்.இந்த கவரை உங்ககிட்ட கொடுக்க சொன்னார் "”
"கையில மாவா இருக்கு.நீயே திறந்து  பாரு."
"பாட்டி,இதுல இருபதாயிரம் ரூபாய் இருக்கு?எனக்கூறி கவரை பாட்டியிடம் கொடுத்தேன்.
கையில் வாங்கிக்கொண்டு "நீ கோவிலிக்கு போனாயோ .'" என கேட்டாள்
'இல்லை  இனிமேல்தான்"
" நல்லது,சீக்கிரமா போ.எனக்கு ஒரு உதவி பண்ணுவியா? அங்க ரங்கநாதர் உண்டியலில் இதை ரங்கன் பேரில் அவன் க்ஷேமத்திற்கு போட்டு விடு .உனக்கு கோடி புண்ணியமாகட்டும் எனக்கு கால்களில் வாதம்.சுலபமா நடக்கமுடியலை.நான் இங்கே இருந்தே   அவனுக்காக வேண்டிக்கிறேன் "என்றாள்
"கட்டாயம் போடறேன் பாட்டி "
 “கொஞ்சம் இரு”  எனக்கூறிவிட்டு வீட்டிற்குள்ளே   சென்று  சுடச்ச்சுட இரண்டு ஜாங்கிரி இலையில் கொண்டு வந்தார். "இதை சாப்பிடு.ஒரு சின்ன விஷயம்.என்னைப்பற்றியோ உடல்நிலை பற்றியோ எங்கே பார்த்தாயோ எதுபற்றியும்   ரங்கனிடம் மூச்சு விடாதே.அம்மா நன்னா இருக்கான்னு  சொன்னா போதும். என்னை பற்றி கவலையே படவேண்டாம் னு சொல்லு."என்றாள்.
என்ன பெருந்தன்மை இந்த மூதாட்டியிடம்  கண்கள் கலங்கியது.
"அம்மா . சத்தியமா  நீங்க சொன்னபடி நான் ஒன்னும் சொல்லமாட்டேன் உங்கள் மகனே உங்களை கூடிய சீக்கிரம் வந்து பார்ப்பார்"
"பரவால்லைப்பா ,குழந்தைக்கு எப்போ முடியுமோ அப்போ வந்தால் போதும்.அந்த ரங்கன் இல்லாட்டா என்னோட கோவில் ரங்கன் கூடவே இருக்கானே .எனக்கு வேற என்ன வேணும்.கவலை படாதே.நான் சந்தோஷமா இருக்கேன். அடுப்பில் எண்ணெய் காஞ்சிண்டு இருக்கும்.நான் உள்ளே போகட்டுமா? உன்னோட பெயர் என்ன?' என்றாள்
“ சேஷாத்திரி." 
“க்ஷேமமாய் இருப்பே .நாழியாரது சீக்கிரம் கோவிலுக்கு  போ."என்றாள்.
அந்த மூதாட்டி காலை இழுத்து கொண்டு மெள்ள நடந்து செல்வதையே  பார்த்து கொண்டிருந்தேன்.அந்த களைத்த சிரித்த சிகப்பு நெற்றி கோடுடன் கூடிய முகம் கண்களை விட்டு பிரியவே இல்லை.ஒரு அங்கலாய்ப்போ,கிராதகனான மகனை பற்றி ஒரு சிறிய குறையோ கூறாமல் அவன் நலமே முக்கியம் என கருதும் அந்த தாயின் மென்மையான உள்ளம் என்னே விசாலமானது.கிழிந்த புடவையுடன் நாலு வீடுகளில் வேலை செய்ய தள்ளப்பட்டாலும்  பணத்தின் தேவை அதிகமாக இருந்தாலும் அவளுக்கு வந்த அத்தனை பணத்தையும் சுயநலவாதியான ரங்கன் பெயரில் உண்டியலில் போட்டது அந்த மூதாட்டியை இன்னும் உயர்வாக காட்டியது.அத்தனை அளவு என் மேலதிகாரி என் மதிப்பில் சரிந்துவிட்டார். நன்றி கெட்டவர் நல்லவரை போல் வேஷம். காறி துப்பியும் கோபம் அடங்கவில்லை.
விமான பயணம் முழுவதும்  அந்த மூதாட்டியின் சிரித்த முகம்தான் என் மனக்கண் முன். பரவியது ...

15 comments:

  1. அவருடைய குழந்தைகள் அவரிடம் இதையே செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தமிழிலும் நன்றாக எழுதுகிறீர்கள் ...நிறைய எழுதவும்

    ReplyDelete
  2. Jakki1933@gmail.comApril 4, 2017 at 7:30 PM

    Very nice story made my eyes wet

    ReplyDelete
  3. அற்புதமான உருக்கமான கதை. எழுத்து நடை அருமை. கதை யதார்த்தமாகவும் இயல்பாகவும் இருக்கிறது. அம்மா என்பவள் தன்னலம் கருதாத, சுயநலமற்ற ஓர் உன்னத உறவு. இக்கதையில் வரும் தாயும் அப்படிப்பட்ட ஒருவரே. பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. உஷா பாஸ்கர்April 4, 2017 at 7:54 PM

    உருக்கமான கதை. அற்புதமான எளிய நடை. மிக யதார்தாத்தமாக உள்ளது.தாய் என்பவள் தந்நலமற்ற ஓர் உன்னத உறவு. இந்தக் கதை தாயும் அப்படிப்பட்ட ஒருவரே.நல்ல பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  5. உருக்கமான கதை. அற்புதமான எளிய நடை. மிக யதார்தாத்தமாக உள்ளது.தாய் என்பவள் தந்நலமற்ற ஓர் உன்னத உறவு. இந்தக் கதை தாயும் அப்படிப்பட்ட ஒருவரே.நல்ல பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  6. தங்களின் எழுத்து நடை, தமிழில் இன்னும் அதிகமாக மிளிர்கிறது. கண் முன்னால் காட்சிகளை , அழகாக நிறுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. There are mothers like Ranganayaki still among us. The story brings out the dual face of people and the compulsions they live under, all because of their cowardice.

    ReplyDelete
  8. ரங்கநாயகிபோல பல மாமிகள் ...! இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது கதை நடை சிறப்பு கேபி சார்!

    ReplyDelete
  9. The beauty of your writing is that in such a short story, you bring the characters alive by realistic portrayal .
    So many queries spring to my mind ! Was it the money and status that made the son neglect his mom ? Would he still have been heartless, had he been in a clerical job ?? What happened between the mother and son that she'd rather toil tirelessly for her livelihood that accept the guilt money from her son who is cowardly, selfish ( that is how you have made us think of the son !) Great portrayal, Sir !

    ReplyDelete
  10. நிறைய விஷயங்களை சொல்லாமல்
    விட்டுப்போனதே இக்கதையின் சிறப்பு
    என நினைக்கிறேன்

    ஏனெனில் அதுவே நிறைய சிந்திக்க
    வைக்கிறது

    (கல்கத்தா வீடு விஷயம் வசதியைக் காட்டுவதற்காகச்
    சொல்லப்பட்டது கொஞ்சம் ஒட்டாததுப் போலப்பட்டது)

    அற்புதமான நடை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தங்களின் எழுத்து நடை, தமிழில் இன்னும் அதிகமாக மிளிர்கிறது. உருக்கமான கதை.

    ReplyDelete